சிறுகதை - ராக்காயி!

ஓவியம்:வேதா
ஓவியம்:வேதா

ராக்காயியின் கையைப் பிடித்து ரெங்கன் இழுத்து விட்டான் என்பது பிராது.  ராக்காயி பஞ்சாயத்தை கூட்டிவிட்டாள்.

அரசமரமும் வேப்பமரமும் ஒரு சேர பின்னி பிணைந்து வளர்ந்திருக்க அதைச் சுற்றி போட்டிருந்த சிமெண்ட் திண்ணையில் பஞ்சாயத்து கூடியது. நடுநாயகமாய் தோளில் துண்டுடன் தலைவர் தங்கையன் உட்கார்ந்திருக்க அவருக்கு இரண்டுபுறமும் இரண்டு முதியவர்கள்.  கீழே நாற்பதுக்கு மேற்பட்டோர் உட்கார்ந்துகொண்டும் நின்றுகொண்டுமிருக்க, ராக்காயி தன் தகப்பனுடன் நேர் எதிராக நின்றிருந்தாள். ரெங்கன் தனக்கும் கூட்டத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பது போலவும் தனது கூட்டாளிகளுடன் கூத்தடித்துக் கொண்டிருந்தான்.

ஒரு கனைப்பு கனைத்தபடி, தனது உருட்டு மீசையை முறுக்கிக் கொண்டு, ‘ ஏம்பா... சத்தம் போடாதீங்கப்பா... ‘ என்றுவிட்டு ‘ கூட்டத்தை ஆரம்பிக்கலாமா... எல்லாரும் வந்தாச்சா...  ‘ என்றார் தங்கையன்.

‘ வந்தாச்சு வந்தாச்சு ‘ என்று நக்கல் அடித்தான், ரெங்கன்.

கோபம் கொண்ட தங்கையன், ‘ டேய், உன் மேலதான் பிராது, நீ மூடிக்கிட்டு பேசாம நில்லு... ‘ என்க, கூட்டம் கொல்லென்று சிரித்தது.

ராக்காயியை பார்த்து, ‘ உன் பிராது என்னம்மா... ‘ என்றார் தங்கையன்.

‘ ஐயா, நேத்து உங்ககிட்ட பிராது குடுக்கும்போது சொன்னேனேங்க ஐயா ‘ என்றாள்.

ஒரு பெரியவர் ‘ ஏம்மா சபைல வெச்சு சொல்லவேண்டியது ஒரு சம்பிரதாயம்மா. எல்லார் காதுலயும் விழறமாதிரி சொல்லுமா... ‘ என்றார்.

‘ தோ நிக்கறாரே  ரெங்கன், நேத்து என் இட்லி கடைக்கு வந்து இட்லி சாப்பிட்டுட்டு இருபது ரூபாக்கு பதிலா அம்பது ரூபாயை கொடுத்துட்டு மீதியை நீயே வெச்சுக்கனு உரக்கச் சொல்லிட்டு, காதுகிட்ட வந்து, உன்னைய நான் வச்சுக்கறேன்னு ரகசியமா சொல்லிட்டு என் கையையும் பிடிச்சு இழுத்தாருங்க... ‘ என்றாள்.

உடனே ரெங்கனின் ஒரு நண்பன், ‘ அண்ணன் நல்லா ரைமிங்காதானே சொல்லியிருக்காரு, அத கேட்டு ரசிக்கிறத உட்டுப்புட்டு பஞ்சாயத்தைக் கூட்டி ஊர் சிரிக்க வச்சிட்டியே அண்ணி... ‘ என்றான். அனைவரும் கொல்லென்று சிரிக்க, சப்தம் போட்டார் தங்கையன், ‘ ஏம்பா, இந்த நக்கல் நையாண்டி எல்லாம் இங்கே வெச்சுக்காதீங்க.. இது பஞ்சாயத்து, வாயை அடக்கி வெச்சுக்கிட்டு நிக்கறதுன்னா நில்லுங்க, இல்லை ஓடிப் போய்டுங்க ‘ என்றார் தங்கையன்.  அமைதி திரும்பியது.

ரெங்கனைப் பார்த்தார், ‘ ஏம்பா ரெங்கா, நீ என்ன சொல்றே ‘ என்றார்.

‘ ஒரு வாலிபன் ஒரு வாலிபிகிட்டே விளையாடறதெல்லாம் சகஜம்...  இதை ஒரு கேள்வின்னு கேட்கறீங்களே... ‘ என்று அவன் பற்களை காட்ட சிரிப்பு அலை களைக்கட்டியது.

‘ அப்போ நீ கையை பிடிச்சு இழுத்தேங்கறதை ஒத்துக்கறே ‘ என்று கேட்டார்.

‘ ஒரு விளையாட்டுக்கு...’ என்று அவன் இழுக்க, ‘ அந்தாளு பொய் சொல்லுதுங்க, பாருங்க அந்தாளு கட்டை விரல் நகம் பட்டு என் கையில கீறல் விழுந்திரிச்சு ‘ என்று தன் கையை உயர்த்திக் காட்டினாள் ராக்காயி.

உடனே, ‘ ஆமா, ஆசைப் பட்டுத்தான் இழுத்தேன். அதுக்கென்ன இப்போ, முடிஞ்சா அதை எனக்கே கட்டி வச்சிடுங்க... ‘ என்றான் ரெங்கன் நக்கலாய்.

‘ திமிரு பிடிச்சவன் எப்படி பேசறான் பாருங்க ‘  கும்பலிலிருந்து ஒரு குரல்.

தன்னைச் சுற்றி உட்கார்ந்திருந்த பெரியவர்களுடனும் ரகசியம் பேசிவிட்டு, ‘ அப்புறமென்ன, அவன்தான் ஒத்துக்கிட்டான் ‘ என்றவர் அவனைப் பார்த்து, ‘ டேயப்பா... ‘ ஊர் வழக்கப்படி, நான் செஞ்சது தப்பு, இனிமே இப்படி செய்ய மாட்டேனு மூணு தடவை கீழே விழுந்து கும்பிட்டுட்டு ஐநூறு ரூபா அபராதத்தை கட்டிட்டிட்டு போய்க்கிட்டே இரு ‘  என்றார்.

‘ திடீர்னு அவ்வளவு பெரிய தொகைக்கு நான் எங்கே போறதாம் ‘ என்று இழுத்தான் ரெங்கன்.

‘ அது சரி, அதையெல்லாம் அந்த புள்ளையை கையை புடிச்சு இழுக்கும்போதே யோசிச்சிருக்கணும். நீ பணத்தைக் ஒழுங்கா கட்டிட்டுத்தான் இங்கிருந்து போகணும்... இல்லையாக்கும்... ஊரு வழக்கப்படி உன் உடம்பு முழுக்க கரும்புள்ளி செம்புள்ளி குத்தி... ஊரை மூணு சுத்து சுத்தவச்சிடுவோம்... ‘ என்றார் கறாராய்.

ரொம்ப வருடங்களுக்குப் பிறகு நடக்கும் சுவாரசியமான பஞ்சாயத்து என்பதால் எல்லோரும் ரசித்து பார்த்துக்கொண்டிருந்தனர்.

‘ நாங்களே வேலை வெட்டி இல்லாம ஊர் சுத்திக்கிட்டுருக்கோம், அவ்வளவு தொகைக்கு நாங்க  எங்கே போறது... ’ என்றான்.

மீண்டும் பெரியவர்களுடன் பேசிவிட்டு, ‘ சரி ஒரு தடவை விழுந்து கும்பிடு அம்பது ரூபா குறைக்கறோம் ‘ என்றார் தங்கையன்.

‘ ஒரு நாநூத்தைபது ரூபா குறைங்களேன் ‘ என்றான் ரெங்கன் மறுபடியும்.

‘ அப்போ ஒன்பது தடவை விழுந்து கும்பிடு... ‘ என்றார் தங்கையன் தன் உருட்டு மீசையை தடவிக்கொண்டு.

‘ ஒரு தடவை போறாதுங்களா... ‘ என்று இழுத்தான் அவன்.

‘ டேய்... இவன் சொல்பேச்சு கேட்கமாட்டான், செம்மண்ணும் சுண்ணாம்பும் கொண்டுவாங்கப்பா... ‘ என்று சத்தம் போட்டார்.

ஒருவன், ‘ கொண்டாந்தாச்சு... ‘ என்று இரண்டு வாளிகளை காண்பித்தான். உடனே அவனை கண்களை உருட்டி மிரட்டினான் ரெங்கன்.

ஒரு தடவை விழுந்து கும்பிட்டுவிட்டு, ‘ கொஞ்சம் டிஸ்கவுன்ட் குடுக்கலாமில்ல ‘ என்றபடி தலையைச் சொரிந்தான்.

‘ இங்க என்ன புண்ணாக்கா விக்குது டிஸ்கவுன்ட் குடுக்க, இப்போ விழுந்து கும்பிடறியா, சுண்ணாம்பை குழைக்கனுமா... ’ என்று முறைத்தார் தங்கையன். திரும்பவும் ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணிக்கொண்டே விழுந்து எழுந்து முடித்து ஐம்பது ரூபாயைக் கொடுத்துவிட்டு, கூட்டத்தைப் பார்த்து, ‘ ஊம்... ஊம்... பஞ்சாயத்து ஓவர்... கிளம்பு கிளம்பு... ‘ என்று விரட்டினான்.

‘ குசும்புக்காரன்... ‘ என்று அவனைப் பார்த்து முறைத்தபடி, ‘ கூட்டம் முடிஞ்சுது... வழக்கப்படி பாதி பணம் பஞ்சாயத்துக்கு புள்ளே... ‘ என்றுவிட்டு இருபத்தைந்து ரூபாயை மட்டும் அவளிடம் கொடுத்துவிட்டு எழுந்து கொண்டார் தங்கையன்.  கூட்டமும் கலைந்தது.

இதையும் படியுங்கள்:
சென்னையை துவம்சமாக்கும் புயல்கள். ஓ! இது தான் காரணமா?
ஓவியம்:வேதா

ரவு மணி ஒன்பது இருக்கும். ராக்காயி எல்லா வேலைகளையும் முடித்து விட்டு படுக்கப் போனாள். அவளது அப்பா சாராயத்தைக் குடித்து மட்டையாகிப் போய் முன்புறத் திண்ணையில் கட்டிலில் படுத்து உளறிக்கொண்டிருந்தான்.

அப்போது பின்புற கதவில் லேசாய் சப்தம் கேட்டது. ‘ வர வர இந்த பன்றிகளோட தொல்லை தாங்க முடியலை... கதவை பிராண்டி வைக்குதுகள், சூச்சூ.... சூச்சூ.... ‘ என்று சப்தமிட்டபடி புழக்கடை கதவை திறக்க, அங்கே தலையில் முக்காடுடன் தங்கையன் நின்றிருந்தார் பற்களை காட்டியபடி.

‘ ஐயா... நீங்களா... ‘ என்று அவள் அலற, அவளது வாயைப் பொத்தி ‘ சத்தம் போடாதே, உள்ளே வா... ‘ என்று விட்டு அவளை இடித்துக் கொண்டு உள்ளே போனார்.  அவள் பதறிப் போய் நின்றிருந்தாள்.

‘ ஐயா இதென்ன புதுசா, என் ஊட்டுக்கு, இந்த நேரத்துல, அதுவும் புழக்கடை வழியா... ’ என்று தடுமாறினாள். தனது விரலை வாயில் வைத்து ‘உஷ் ‘ என்றவர், குடிக்க கொஞ்சம் தண்ணீர் கொடு ‘ என்றார்.

போய் ஒரு செம்பை எடுத்து குடத்தில் விட்டு தண்ணீரை மொண்டு கொண்டு வந்தாள். பற்களை காட்டியபடியே செம்பை வாங்கி தண்ணீரை கொஞ்சமாய் குடித்து விட்டு அவளிடம் திருப்பி கொடுதார். வாங்கும் போதும் சரி கொடுக்கும்போதும் சரி அவளது கையை உரசிக் கொண்டார்.

‘ ஐயா, நீங்களே இப்படி.....’ அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ‘தோ பார் புள்ளே, இதையெல்லாம் நீ பெரிசா எடுத்துக்காதே... இதெல்லாம் ஒரு விளையாட்டு....அவ்ளோதான். அந்தக் காலத்துல ராஜாக்களே அம்பது பொண்ணுங்களை அந்தப்புறத்துல வச்சிருப்பாங்க தெரியுமா... ‘ என்று பற்களை காட்டினார்.

‘ ஐயா உங்களுக்குத்தான் தங்க சிலையாட்டம் வீட்டுல அம்மா இருக்காங்களே. கருப்பா இருக்கற என்னைப் போயி... ‘ என்று அவள் சிணுங்கலாய் இழுக்க, ‘ அவளைவிட நீதான் ராக்காயி கொள்ளை அழகு... கருப்புன்னா என்ன... செதுக்கி வெச்ச சிலையாட்டமல்லவா இருக்கே. குயில் கூட கருப்புதான், அது அழகா கூவறதில்லையா, நீ மட்டும் சரின்னு சொல்லு, பஞ்சாயத்து போர்டு பக்கத்துல கொஞ்சம் காலி இடம் இருக்கில்லே, அதுல பத்துக்கு பத்துல ஒரு கொட்டகை போட்டுத் தாரேன், நீ இட்லி கடையை அங்கேயே நடத்திக்கலாம், எனக்கு இருக்கற அஞ்சு ஏக்கர் நிலத்துல ஒரு ஏக்கரை உன் பெயருக்கு எழுதி வெச்சிடறேன்... கைல தங்க வளையல், தங்க கொலுசு, ஒட்டியாணம்னு போட்டும் உன்னை தங்க சிலையாட்டமே ஆக்கிடறேன்... ’ என்றபடியே மெல்ல அவளது கையைத் தொட்டார் தங்கையன்.

அவள் பதறிப்போய் பின்னால் நகர்ந்துகொண்டாள்.

‘ என்ன புள்ள இப்படி நடுங்கறே... சரி சரி... உன் கையால கொஞ்சம் காபி போட்டுக் கொண்டுவா... காபி குடிச்சா ஜிவ்வுன்னு இருக்கும்... உனக்கும் பதட்டம் குறையும்... ‘ என்று சிரித்தார்.

என்ன செய்வதென்று புரியாமல் நகர்ந்தவள், மண்ணெண்ணெய் ஸ்டவ்வை பற்றவைத்து பாலை ஊற்றி காபி பவுடரைப் போட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து ஒரு பெரிய டம்ப்ளரில் ஊற்றி  எடுத்துக்கொண்டு வந்தாள். பற்களைக் காட்டி அதை அவர் வாங்க கை நீட்ட,  திடீரென்று அப்படியே  அதை அவரது முகத்தில் ஊற்றினாள்.

‘ ஐய்யையோ ‘ என்று அலற வாயைத் திறந்தவர் திருடனுக்கு தேள்கொட்டிய கணக்காக சத்தம் போடாமல் தன் துண்டால் வாயைப் பொத்திக் கொண்டு பின்கதவு வழியே திரும்பி ஓடிவிட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com