
-வாசுகி
"இன்னிக்குப் பேப்பர்ல சித்திரை வருஷப் பிறப்பு சேல்ஸ் பத்திப் படிச்சீங்களா?" என்று என் மனைவி லலிதா கேட்டதுமே, என் வயிற்றில் புளியைக் கரைத்தது.
"அபி அண்ட் கேர்ல் பழைய ஃப்ரிட்ஜை நாலாயிரத்துக்கு எடுத்துக்கிறான். கூடவே ஒரு மைக்ரோவேவ் ஓவன் ஃப்ரீயா தர்றான்!" என்று பரபரப்புடன் கூவினாள்.
"லலிதா! ஃப்ரீயா எதையோ கொடுக்கறான்னுட்டு, புதுசா ஃப்ரிட்ஜ் வாங்கணுமா? நம்ம வீட்டு ஃப்ரிட்ஜ் வாங்கி நாலு வருஷம்தான் ஆகிறது! தவிர, அது நல்லாத்தானே ஓடிட்டு இருக்கு!" என்று அவளுடைய ஆர்வத்துக்கு அணைபோட முயன்றேன்.
"நம்ம வீட்டு ஃப்ரிட்ஜ் நல்லாயிருக்குன்னு நீங்கதான் சொல்லிக்கணும்! ஊரிலே எல்லாரும் எப்பவோ டபுள் டோர் வாங்கியாச்சு! நாம ஒருத்தர்தான் பழைய ஃப்ரிட்ஜைக் கட்டிட்டு அழறோம்! எனக்கு அவமானமா இருக்கு, சே!'' என்று முகத்தைச் சுளித்துக்கொண்டாள்.
''லலிதா! வித்துப் போகாத மைக்ரோவேவை ஃப்ரீன்னு சொல்லி நம்ம தலையிலே கட்டப் பார்க்கிறான். மைக்ரோவேவுக்காக, ஃப்ரிட்ஜை மாற்றணுங்கிறது என்ன நியாயம்?" என்று டிஃபன்ஸ் தரப்பு லாயர்போல் என் நியாயத்தை எடுத்து வைக்க, 'உங்களுக்கு ஒண்ணும் தெரியாது! ஊர் உலகத்திலே எல்லோரும் கிஃப்டோடத்தான் புதுச் சாமான் வாங்கறாங்க! மைக்ரோவேவ் வேணுங்கறது என்னோட ரொம்ப நாள் ஆசை! இப்ப ஒரே கல்லிலே இரண்டு மாங்காய் அடிக்கலாம்!" "அப்ஜக்ஷன் ஓவர் ரூல்ட்" என்று சொல்லும் ஜட்ஜைப்போல் என் வாயை அடைத்துவிட்டாள்.