சிறுகதை - சீம்பால்!

ஓவியம்; சேகர்
ஓவியம்; சேகர்

- ஹ. ராகிணி

மர்ந்த நிலத்தில் முளைத்தப் பயிர்களுக்கு மத்தியில் மளமளவென வளர்ந்த களைகளைக் கழித்தப்பின், கால்வாயில் கற்களையும் ஓடுகொண்டு ஒளிந்து கொள்ளும் நத்தைகளையும், துடுப்புப் போட்டு துள்ளிக் குதிக்கும் மீன்களையும், வயல்களுக்குள்ளே வளை பறிக்கும் நண்டுகளையும் மறையாவண்ணம் கண்ணாடிபோல தெளிவாய் காட்டிவிட்டு செல்லும் வளி மூலத்தின் வரமான நீர் கைகால்களில் படிந்த மண் சுவடுகளை வளமாகப் பெற்றுக்கொண்டு மீண்டும் கதிர்களைத் தொட ஓடியது...

நெற்றி முனைப்பில் நிழலுக்காக போர்த்திய சீலை முந்தானை, முடிச்சவிழ்ந்து மூச்சிரைக்க வேலை செய்தவளின் வேல் விழியோரம் வந்த வேர்வையான வெண்முத்தை தாங்கச்சென்றது… காலை கதிரவன் களைப்போடு மலைகளுக்கு நடுவே கண்ணயர, வானமோ செந்தூரம்கொண்டு தன்னில் வர்ணத்தைப் பூசிக்கொள்ள, பெண்ணவளின் காப்பு காய்த்த அந்தக் கரங்கள் காத்துச் சென்றன. களிமண் கறைபடிந்த தூக்குச்சட்டியை… பொழுதுபோன வேளையில் கோலமில்லா தன் வீட்டு வாசலைப் பார்த்தபடியே உள்ளே நுழைந்தாள் செண்பகம். சீமையிலே வேலை பார்க்கும் தன் மகள் சீக்கிரமாய் வீடு வந்திருப்பதைப் பார்த்தாள்; மகளின் மங்கிய முகத்திலுள்ள சோர்வை காணாமல்,

“அதான் சீக்கிரமா வந்துட்டேலே, செத்த கோலம் போட்டிருக்கக் கூடாதா...? பாரு மணி 5.30 ஆச்சு, கொஞ்சம் தரையை நனைச்சு கோலம் போட்டுடேன்…”

மறுமுனையில் பதில் கூறாமல் தாயின் சொல்லுக்குச் செவி சாய்த்தவளாய் மீனா சோர்வுடன் ஏக்கமாய் ஏறிட்ட பார்வையால் தன் தாயை நோக்க, அவளோ மறுகணமே மறைந்துவிட்டாள் அடுப்பங்கறைக்குள்…

முணுமுணுப்போடு முடிந்தது எறும்புகளுக்கான அரிசிமாவு விருந்து; மீண்டுமொரு உத்தரவு வரும்முன்னே முடிக்கா பல முக்கியப் பணிகளைச் றசெய்துமுடிக்க முந்திக்கொண்டு முன்னேறினாள் மீனா.

ஓயாமல் சுற்றும் காத்தாடி கண்டதோ களைத்தவளின் முகத்தில் கைப்பேசியைக் கண்டதும் உண்டான களிப்பை… கைக்குவளையில் பானமோ, அது பேறுகாலத்தில் பெறப்படும் பொக்கிஷமோ, அதன் மணம் கண்டதும் மனம் பெற்றதோ புத்துணர்ச்சி… தாயவளின் தன்மையான அழைப்பைக் காட்டிலும் தனது வயிற்றுப்பசிக்குப் பானத்தை ருசிக்கக் குதித்தெழுந்தாள் மீனா… கடைசி சொட்டும் இல்லாமல் காலி குவளையைக் கவிழ்த்தாள். கறை பாத்திரம் கழுவும் இடத்தில்…“ஏன்மா, யாரு வீட்டு மாடு கன்னு போட்டுச்சு; சீம்பால் செம ருசியா இருக்கு. ஆமா, என்ன கன்னு… காளையா, கிடெரியா…” என விடாமல் விசாரித்து முடித்தாள், குவளை சீம்பால் குடித்ததும்…

“அதுவா, வயலுக்கு போனேன்ல, அப்ப நம்ம விசாலம் இருக்காளே அவ வந்து தூக்குச்சட்டில குடுத்துட்டுப் போனா…” என்றாள் மிக சலிப்பாக…

“இதுக்கு ஏன்மா சலிச்சுகுற… மாடு கன்னு போட்டா நல்ல விஷயம்தானே…”

“நல்ல விஷயம்தான். ஆனா...” என இழுத்தவளிடம்

“என்னமா என்ன விஷயம்னு சொன்னாத்தானே தெரியும்…”

“அத ஏன் கேக்குற… விசாலம் வீட்டு மாடு ரொம்ப இளசானது… சீக்கிரமாவே சினை வேற ஆயிடுச்சு… அதனால டாக்டர்லாம்கூட வந்து அப்ப அப்ப பாத்துட்டுப் போனாங்க… அதுக்கு பேறுகாலமும் அடுத்த மாசம் தானேன்னு இவங்களும் மேய்ச்சலுக்குத்ற தனியா விட்டுருக்காங்க… கடைசில பாத்தா முந்தா நேத்து ராத்திரி வலி வந்து நம்ம ஊர் கவர்ன்மென்ட் ஸ்கூல் இருக்குல, அந்த ஸ்கூல் க்ரௌண்ட்ல குட்டி போட்டிருக்கு… காலையிலேதான் இவங்களுக்கு விஷயம் தெரிஞ்சு போயிருக்காங்க…”

இதையும் படியுங்கள்:
முத்தான 3 மூலிகை தேநீர் வகைகள்!
ஓவியம்; சேகர்

“சரி இதனால என்ன? குட்டியும் பசுவும் நல்லா இருக்குல…”

“அட ஏன்டி நீ வேற. ராத்திரி முழுக்க மாடு வலியில கஷ்டப்பட்டுருக்கு… அது சத்தம் கேட்டு, ஸ்கூல் வாட்ச்மேனும் அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்களும் போய் பாத்துருக்காங்க… குட்டி வெளிய வரப்பவே, மூச்சில்லையாம்… சரி குட்டிதான் உயிர் இல்லாம போச்சு, பசுவ பாக்கலாம்னா, அது நச்சு வெளியேத்த முடியாம விடிய விடிய கஷ்டப்பட்டுருக்கு; அப்புறம் டாக்டர் வந்துதான் வெளியேத்தி காப்பாத்துனாங்களாம்…”

“அட என்னமா சொல்ற... குட்டி இறந்துடுச்சா…”

“ஆமாடி, இப்ப அந்த மாடு க்ரௌண்ட்ல சுத்தி சுத்தி தேடுதுடி…”

“ச்சே, பாவம்மா… ஏன்மா இந்த விசாலம் சித்தி இப்படி பண்ணுச்சு… அந்த மாட்ட வீட்டிலயே கட்டிப் போட்டிருக்கக்கூடாதா… நானும் எத்தனை முறைதான் எங்க ஆளுங்களோட வந்து இங்க காட்டுக்கத்து கத்துறது…”

“இதோட நாங்க இங்க மூணு கேம்ப் போட்டுடோம்… நீயும் மாசம் மாசம் இப்படி ஏதாவது ஒரு கதை சொல்லிடுற… என்னதான் பண்ணுறதுன்னே தெரியல…” என்றாள் புளுகிராஸ் ஆர்வலரான மீனா.

“ஏன்டி, என்கிட்ட கத்துற… புரிஞ்சுக்குறவங்க கண்டிப்பா புரிஞ்சுப்பாங்க” எனச் சொல்லிக்கொண்டே இரவுக்கான உணவைத் தயார் செய்தாள்.

“ஆமா, எவ்ளோதான் நாங்களும் முயற்சி பண்றது… பிள்ளைபோல பாத்துக்கணும்னா புரிஞ்சுக்காம விட்டுட்டு இப்படி எல்லாம் பிரச்னையா வருது…” என முணுமுணுத்துக்கொண்டாள் மீனா, தனது முகநூல் பக்கத்தில் #SAVE ANIMALS என இடுகையிட்டுக் கொண்டே…

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com