சிறுகதை: அந்த 63 நாட்கள்!

ஓவியம்; பிரபுராம்
ஓவியம்; பிரபுராம்

மிருதுளாவிற்கு வயது 25 ஆகிவிட்டது. நடுத்தர குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தவள். பட்டப்படிப்பு முடித்துவிட்டு, ஒரு கம்பெனியில் வேலை. அவள் அப்பா குருராஜனுக்கும் அம்மா வைதேகிக்கும் ஒரே கவலை , அவளது திருமணத்தை முடிக்க வேண்டும் என்று. தேடாத இடம் இல்லை. வரன் குதிரவில்லை. அவளுடைய ஜாதகத்தில் எதோ தோஷம் இருப்பதாக யாரோ கூறிவிட, பெற்றோர்களின் கவலை அதிகரித்தது.

குருராஜனின் நண்பர் ஒரு ஜோதிடரின் விலாசம் கொடுத்து அவரைப் போய் பார்க்கச் சொன்னார். அந்த ஜோதிடர் கூறியது அப்படியே நடக்கிறது என்று வேறு கூறி அனுப்பினார். நம்பிக்கையுடன் , குருராஜன் அந்த ஜோதிடரைச் சந்தித்து தனது மகள் மிருதுளாவின் ஜாதகத்தை அவரிடம் கொடுத்தார்.

ஜோதிடர் நன்றாகப் பார்த்துவிட்டு, குருராஜனிடம் கூறினார், "உங்க பெண் ஜாதகம் அப்பழுக்குஅற்ற அருமையான ஜாதகம். கூடிய விரைவில் அவளுக்கு கால்கட்டு போடப்படும். கவலை வேண்டாம்."
குருராஜனுக்கோ மிக்க மகிழ்ச்சி. தன் சந்தேகத்தை நிவர்த்தி செய்துக்கொள்ள, "ஜாதகத்தில் தோஷம் ஏதோ இருக்கு என்கிறார்களே, பரிகாரம் எதாவது செய்ய வேண்டுமா..!" என்று வினவினார்.

அந்த ஜோதிடர், "பேஷான ஜாதகம். பரிகாரம் ஒன்றும் வேண்டாம் . இன்னும் 63 நாட்களில் கால்கட்டு தொடர்பாக செய்தி வரும் நிச்சயம்..!" என்று கூறியதுடன், கலியாணத்திற்கு அழைக்க மறந்துவிடாதீர்கள், என்றும் கூறினார்.

குருராஜன் அவருக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு, மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார். தன் மனைவியிடம் ஜாதகத்தில் தோஷம் எதுவும் இல்லை, நிச்சயம் கலியாணம் நடக்கும் என்று ஜோதிடர் சொன்னதாக விவரித்தார்.

அவரது உள்மனம் சொன்னது, 63 நாள் விவரம் இப்பொழுது கூற வேண்டாம் என்று.  ஏனென்றால் அவரது மனைவி ஆசையை வளர்த்துக்கொள்வாள், கூடவே எதிர்பார்ப்பையும். நல்லது நடந்தால் பிறகு கூறிக் கொள்ளலாம், என்று இருந்துவிட்டார். அவரது மகளுக்கு, தன் தந்தை அந்த ஜோதிடரைச் சந்தித்ததே தெரியாது. வழக்கம்போல் நாட்கள் நகர்ந்துக் கொண்டிருந்தன. ஒரு செய்தியும் வரக் காணோம்.

அன்று மிருதுளா அவசர அவசரமாக லோக்கல் ட்ரெயின் பிடிக்க ஸ்டேஷன் மாடி படியில் ஏறி நடைபாதையில் சென்று அந்தக் கடைசி பிளாட்பாரத்திற்குச் செல்லும் பொழுது, அந்த நிகழ்வு எதிர்பார்க்காத விதமாக நடந்தது.
வேகமாக வந்த இளைஞன், இவள் மீது மோத, இருவரும் கீழே விழுந்தனர். சுதாரித்துக்கொண்டு எழுந்த அந்த இளைஞன், "சாரி , அடி பலமா?", என்று கேட்டுவிட்டு வேகமாக அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டான்.
மிருதுளாவும் ஒரு மாதிரி எழுந்து நடக்க முயன்றாள், முடியவில்லை. அந்தச்சமயத்தில் அங்கு வந்த அவள் சிநேகிதி தாராவின் உதவியுடன் ஒரு வழியாக வீடு திரும்பினாள்.

இதையும் படியுங்கள்:
எவராலும் அபகரிக்க முடியாத ஒரே சொத்து இதுதான்..!
ஓவியம்; பிரபுராம்

வலி அதிகமாயிற்று. டாக்டர் வந்து பார்த்து காலில் கட்டுப் போட்டு, பத்து நாட்களுக்கு பெட் ரெஸ்ட் இருக்க வேண்டும்! என்று கூறி சென்றது எல்லாம் அன்றே ஒன்றன் பின் ஒன்றாக அரங்கேறின.

குருராஜன், தகவல் அறிந்து வீடு திரும்பினவரை, கால் கட்டுடன் கட்டிலில் இருந்த மிருதுளா வறட்டு சிரிப்புடன், வரவேற்றாள்.

சுவற்றில் தொங்கிய நாள் கிழிக்கும் காலண்டரின் தேதியை குருராஜன் பார்த்ததும் திடுக்கிட்டார். அதில் அன்றைய தேதி தாளில் வட்டத்திற்குள் எழுதியிருந்த 63 என்ற எண் அவரைப் பார்த்து சிரித்தது.

ஜோதிடர் வாக்கு பலித்துவிட்டது. இப்பவும் மிருதுளாவிற்கு குருராஜன் தம்பதியினர், மாப்பிள்ளை தேடிக்கொண்டு இருக்கின்றனர். தோதான வரன் உங்களில் யாருக்காவது தெரிந்திருந்தால் தெரியப்படுத்துங்களேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com