சிறுகதை - மனைவி வேலை வாங்குறாங்களா?

ஓவியம்: தமிழ்

 
ஓவியம்: தமிழ்  

- வித்யா குருராஜன்

“வசந்தி... பஸ் ஸ்டாண்ட் போய் மாமாவைக் கூட்டிக்கிட்டு வந்துடுறேன்.” வாசலில் வண்டியில் ஏறி அமர்ந்துகொண்டு உள்ளே இருந்த மனைவி வசந்திக்கு குரல் கொடுத்துவிட்டு கிளம்பினான் மாறன்.

இவர்களின் ஊரில் நடக்கவிருக்கும் ஒரு உறவினர் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக மாறனின் தாய்மாமா வருவதாய் உள்ளது. மாறனின் அப்பாவும் அம்மாவும் வெளியூருக்குப் போயிருந்தபடியால் மாமாவை வரவேற்று உபசரிப்பது மாறன் பொறுப்பாகிப் போனது.

பேருந்து நிலையம் சென்று மாமாவை வரவேற்று வீட்டுக்கு அழைத்துவந்து இரண்டு நாட்கள் எக்குறைவுமின்றி உபசரித்தனர் மாறன்-வசந்தி தம்பதியர்.

அந்தத் திருமண நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு அடுத்த மூன்றாவது நாள் கிளம்பினார் மாமா. மீண்டும் அவரை பஸ் ஏற்றிவிட அழைத்துப் போனான் மாறன்.

“நீங்க இரண்டு நாள் தங்கியிருந்ததுபத்தி ரொம்ப சந்தோஷம் மாமா...”

“ஆனா எனக்கு ஒன்னும் சந்தோஷம் இல்லைடா மாறா...”

“ஏன் மாமா... உபசரிப்புல எதுவும் குறை வச்சிட்டோமா?”

“அதெல்லாம் இல்ல. என் அக்கா உன்னை எப்படி வளர்த்தா?  நீ கல்யாணத்துக்கு அப்புறம் இப்படி கஷ்டப்படறதைப் பாக்கும்போது வேதனையா இருக்கு மாறா...”

“நான் என்ன கஷ்டப்படுறேன் மாமா? நான் நல்லாத்தானே இருக்கேன்?”

“என்ன நல்லாருக்க?  உன் பெண்டாட்டி உன்னை எப்படி வேலை வாங்குறான்னு இரண்டு நாளா நான் கவனிச்சுக்கிட்டுத்தான் இருந்தேன்.  பாத்திரம் கழுவறதும், துணி மெஷின்ல போட்டு எடுத்து உலத்தி மடிச்சு வைக்கிறதும், வீடு துடைக்கிறதும், காய் நறுக்கித் தர்றதும், உன் ரெட்டை குழந்தைகளுக்கு யூனிபார்ம் அயன் பண்ணி வைக்கிறதும்... என்னடா இதெல்லாம்? நல்லாவா இருக்கு?  இப்படி இறங்கி வேலை செஞ்சா உனக்கு என்னடா மரியாதை இருக்கும்? வேலைக்கு போகிற நீ வீட்டுக்கு வந்து ரெஸ்ட் எடுக்கிறதை விட்டுட்டு… என் மாமா, அதான் உன் அப்பா... அவரு எப்படி கெத்தா இருந்தாரு தெரியுமா? என் அக்காதான் வீட்டு வேலை அத்தனையும் பாத்துக்கிட்டா. அவளும்தான் வேலைக்கு போனா. உன்னையும் எப்படியெல்லாம் தாங்கி வளர்த்தா? கல்யாணத்துக்கு முன்னவரைக்கும் ஒரு வேலை செய்ய விட்டிருந்தாளா உன்னை?  இப்ப பாரு. எனக்கே வயித்தெரிச்சலா இருக்கு. இனிமேலாவது பெண்டாட்டிக்கு வேலை செய்யறதை முதல்ல நிப்பாட்டு. உன் இடத்துல இருந்து என்னிக்கும் இறங்கவே கூடாது” என்று படபடவென கொட்டி முடித்தார் மாமா.

அவரை பார்த்துப்  புன்னகைத்தான் மாறன்.  “அப்பா அம்மா எங்க போயிருக்காங்க உங்களுக்குத் தெரியுமா மாமா?”

“ஏதோ வெளியூர் போகறதா அக்கா சொன்னா...”

“சிகிச்சைக்காக கேரளா போயிருக்காங்க.”

“சிகிச்சையா... அய்யய்யோ... என்னாச்சுடா அக்காவுக்கு?”

“மஸ்குலா ஸ்கெலிட்டல் டிஸ்ஆர்டர்.”

“அப்படின்னா?”

“தசை, எலும்பு, தசை நார்களில் ஏற்படுற பிரச்னை.”

“அய்யய்யோ... அக்காவுக்கு ஏன்டா இது வந்தது?”

“இப்போ நீங்க சொன்னீங்களே... எல்லா வேலையும் அக்காதான் செஞ்சான்னு‌. அதனால வந்ததுதான்.”

“என்னடா சொல்லுற?”

“ஆமா... பெண்கள் உடம்பு என்ன இரும்புலையா செஞ்சிருக்கு.? இல்ல எத்தனை உழைச்சாலும் அப்படியே இருக்கற வரத்தைப் பெண்களுக்கு ஆண்டவன் வாரி வழங்கிருக்கானா?

இதையும் படியுங்கள்:
மாமியார் - மருமகள் இடையே உற்சாகம் தரும் 3 உந்து சக்திகள்!
ஓவியம்: தமிழ்

 

கல்யாணம் ஆனதிலேருந்து, பெராலிஸில்ல இருந்த பாட்டி, குடும்பத்து வேலைகள் எதிலையும் பங்கெடுக்காத அப்பா, நான், அக்கா, இப்படி எங்க எல்லாருக்கும் ஒத்தை ஆளா அம்மாதான் எல்லா வேலைகளும் செஞ்சாங்க. அவங்களும் வேலைக்குப் போனாங்க. ஆரம்பத்திலேருந்தே தெரிஞ்ச சில நோய் அறிகுறிகளை அவங்க அலட்சியம் பண்ணிட்டாங்க. பெண்கள் புறம் தள்ளுற முதல் விஷயமா அவங்க ஆரோக்கியம்தானே இருக்கு. உடம்பும் எத்தனைதான் தாங்கும்?

நீங்க சொன்னது சரிதான் மாமா. என்னை அம்மா எந்த வேலையும் விட்டதில்ல. ஆனா என் கல்யாணத்துக்கு முன்னாடி கால் உடைஞ்சு மூணு மாசம் வீட்டில இருந்தேன். அப்பத்தான் அம்மா எத்தனை வேலை செய்யுறாங்கன்னு கண்ணுக்குத் தெரிஞ்சுது. சாப்பிட்ட தட்டைக்கூட அம்மா எடுக்கட்டுமின்னு மனசாட்சியே இல்லாம எழுந்து போயிருக்கேன். இதெல்லாம் தப்புன்னு அந்த மூணு மாசத்திலதான் ‌புரிஞ்சிக்கிட்டேன். ஒரு‌ நாள் அம்மாகிட்ட வாய்விட்டு மன்னிப்பே கேட்டேன்.

அதுக்கு அம்மா “இப்பவாவது உனக்கு புரிஞ்சதே! சந்தோஷம். உண்மையாவே‌ உன் ‌மனசு உறுத்திச்சுன்னா,  உன் மனைவிக்கு இதை செய்யாதன்னு”‌ சொன்னாங்க. அதுக்கு அப்பறம் அம்மாகிட்ட இருந்தே எல்லா வீட்டு வேலைகளையும் கத்துக்கிட்டு அதன்‌ பிறகுதான் கல்யாணமே பண்ணிக்கிட்டேன்.

“சரி மாறா... அதுக்காக நீ எல்லா வேலையுமே இல்ல பாக்குற!?”

“என் மனைவி கல்யாணமான புதுசுல நான் வீட்டு வேலை செஞ்சா கிடந்து தவிப்பா மாமா! நான் செய்யுறேன்னு வம்பு பண்ணுவா. வீட்டு வேலை பெண்களோடதுன்னே சொல்லிச் சொல்லித்தான் அவளையும் வளர்த்திருந்தாங்க. வசந்தியை அதிலேருந்து வெளிய எடுக்க ரொம்ப சிரமப்பட்டேன். எனக்கு அவ ஆரோக்கியம் முக்கியம். எல்லாத்தையும் இழுத்து போட்டு செஞ்சு இன்னைக்கு ஆரோக்கியம் இல்லாம அம்மா படுற கஷ்டத்தை அவ படக்கூடாதுன்னு நினைக்கிறேன்.

காலம் போய் அப்பா இதைப் புரிஞ்சிக்கிட்டிருக்காரு. வயசு காலத்தில அம்மாவோட வேலைகளைப் பகிர்ந்துக்கிட்டிருக்கலாமேன்னு புலம்பறாரு‌. அம்மாவும் வேலைகளைப் பகிர்ந்து கொடுத்திருக்கலாமேன்னு புலம்பறாங்க. நாங்களும் நாளைக்கு இப்படி புலம்ப விரும்பல்ல. வாழ்க்கையைப் பகிர்ந்துக்கற‌ மாதிரி வேலைகளையும் பகிர்ந்துக்கறோம். அவ்வளவுதான்” என்று மாறன் முடிக்கவும் பேருந்து வரவும் சரியாய் இருந்தது.

மாறனிடம் விடைபெற்றுக் கிளம்பினார் மாமா. செல்லும் வழி முழுதும் மாறன் சொன்னவைகளை அசைபோட்டபடியே போனார்.

வீட்டில் சென்று இறங்கியதும் காரைத் துடைத்துக் கொண்டிருத்த தன் மனைவியிடமிருந்து துணியை வாங்கி துடைக்கத் துவங்கினார். “வலது கை குடையுதுன்னு அன்னைக்கி சொன்னியே... அப்பறம் ஏன் காரைத் துடைச்சுக்கிட்டிருக்க?  நீ போ.. நான் செய்யுறேன். கை‌ வலி பரவாயில்லையா..” என்று கேட்ட மாமாவை பேரதிர்ச்சியில் பார்த்துக்கொண்டிருந்தார் அவரின் மனைவி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com