ருக்மிணி தேவி அருண்டேல் இப்போது இருந்திருந்தால்,
பிப்ரவரி 29 அன்று 120ஆவது வயதை எட்டியிருப்பார். இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராவதற்கான முன்மொழிவை நிராகரிப்பதில் அன்றே தைரியம் காட்டியவர். ‘உலகத்தாய்’ எனும் பாத்திரத்தை இவருக்கு வழங்க விரும்பிய கணவர் ஜார்ஜ் அருண்டேல், அதற்கான ஆன்மிகத் தீட்சைகளை மேற்கொள்ளச் செய்தார். நெதர்லாந்தில் உலகத்தாய் என பிரதிஷ்டையும் பெற்றார். ஆனால், இதையும் ருக்மிணி தேவி ஏற்காமல் விலகினாரென்பது அதிகம் அறியப்படாத விஷயமெனக் கூறப்படுகிறது.
20ஆம் நூற்றாண்டின் ஆரம்பக் காலகட்டங்களில், பரதநாட்டியம் என இன்று நாம் கூறும் நடனக்கலை, சதிராட்டமென அழைக்கப்பட்டது. இக்கலையை தேவதாசிகள் என்ற தனிப்பிரிவினர் மட்டுமே பயின்று வந்ததால், சாமானியக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு இக்கலையை பயில அனுமதி இல்லாமல் இருந்தது. மேலும், ஆண்களிடம் பயில்வதையும், மேடையில் நடனமாடுவதையும் அவமானமாகப் பெண்கள் எண்ணியதை முற்றிலுமாக மாற்றினார் ருக்மிணி தேவி அருண்டேல்.
அன்னி பெசன்ட் அம்மையாருடன் ருக்மிணி தேவி நெருக்கமாகப் பழக வாய்ப்பு கிடைத்தக் காரணம், பெண்கள் சுதந்திரம் போன்ற பல முற்போக்குச் சிந்தனைகளால் அவரும் கவரப்பட்டதுதான். அன்னி பெசன்ட் அம்மையாரின் உதவியாளராகிய ஜார்ஜ் அருண்டேலை காதல் திருமணம் செய்து, அநேக வெளிநாடுகள் சென்றார். ஒரு முறை ஆஸ்திரேலியாவிற்கு கப்பலில் பயணிக்கையில், பாலே நடனக் கலைஞர் ஒருவரைக் காண, அவரது நடனத்தால் கவரப்பட்டு, அதைக் கற்றுக்கொள்ள ருக்மிணி தேவி முயற்சி செய்தார். ஆனால், பாலே நடனக் கலைஞர் இந்திய நாட்டுப் பாரம்பரிய நடனத்தைக் கற்றுக்கொள்ள ருக்மிணி தேவிக்கு அறிவுறுத்தினார்.
அதன்படியே இந்தியா திரும்பியதும் ருக்மிணி தேவி, பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் நடனம் பயின்றார். தன்னுடைய முதல் நடனத்தை தியோஸாபிக்கல் சொஸைட்டி விழா ஒன்றில் அற்புதமாக அரங்கேற்றினார். இதனைத் தொடர்ந்து, குடும்பப் பெண்கள் பலரும் தைரியமாக இக்கலையைக் கற்க முன்வந்தனர். ஆனால், ஆண்களிடம் கற்க, அநேக பெண்கள் யோசித்தனர்.
இதைக் கண்ட ருக்மிணி தேவி, பாதுகாப்பான முறையில் மாணாக்கர்களுக்குப் பயிற்சியளித்து, நடனக்கலையை வளர்க்க எண்ணி, கலாக்ஷேத்திரா என்கிற குரு குலப் பள்ளியொன்றை திருவான்மியூரில் ஆரம்பித்தார். பல்வேறு புதுமைகளைப் படிப்படியாகப் புகுத்தினார். பரதக்கலையின் பெருமையை உலகிற்கு உணர்த்திய
முதற் பெண்மணியாக விளங்கினார்.
இவரை நாமும் வணங்கிப் போற்றுவோமாக!