சிறு தானியங்கள்... தரும் பெரும் பலன்கள்!

சிறு தானியங்கள்... தரும் பெரும் பலன்கள்!

கோடை காலம் வந்தவுடன் ‘வெயில் தாங்கலியே’ என்று பழக் கடைகளையும் குளிர்பானங்களைத் தேடி ஓடுகிறோம். தள்ளுபடி கிடைக்கிறதோ இல்லையோ பருத்தி ஆடை வாங்கி விடுகிறோம். ஏ.ஸி, ஃப்ரிட்ஜ் இல்லாமல் இருக்க முடிகிறதா? எல்லாம் சரி. சாப்பாட்டு விஷயத்தில்...உடலை குளுமையாக வைக்க வெறும் பழங்கள் மட்டும்தான் தீர்வா, குளுமைதரும் தானியங்கள் உள்ளனவே!”

கேழ்வரகு;

கேழ்வரகு, உடம்புக்குச் சூடுன்னு நினைக்கிறவர்களும் உண்டு. ஆனால் 100 கிராம் கேழ்வரகில், புரோட்டீன் 7.3 கிராம், நார்ச்சத்து 3.6 கிராம், இரும்புச்சத்து 3.9 கிராம், கால்சியம் 344 மில்லிகிராம் என உடலுக்கு அன்றாடம் தேவையான அத்தியாவசிய சத்துக்களும் மற்றவையும் இருக்கின்றன.

இதை கூழ் மாதிரி இரவு கிளறி வைத்துக்கொண்டு காலையில் சாப்பிட்டால் உடலுக்கு நல்ல குளிர்ச்சி ஆயிற்றே! வழக்கமான தோசை மாவில் பாதிக்குப் பாதி கலந்து தோசை செய்து சாப்பிட்டால் நீரிழிவு நோயாளி களுக்கும் நல்லது. மற்றவர்களுக்கும் பிடிக்கும். களியாய் செய்து மோரில் கலந்து சாப்பிடும்போது, உடல் சூடு ஓடிப்போகும். பாலோ, மோரோ கலந்து கஞ்சியும் குழந்தைகளுக்கும் தரலாம்.”

கம்பு;

‘ஆமாம் கம்புச் சாதம் உடலுக்கு எவ்வளவு நல்லது தெரியுமா? உடைத்த கம்பு குருணையை குக்கரில் போட்டு சமைக்கலாம். முழு கம்பு எனில் ஊறவைத்து வேக வைக்கலாம். 100 கிராம் கம்பில், 11.6 கிராம் புரோட்டீன், 1.2 கிராம் நார்ச்சத்து, கால்சியும் 42 மில்லிகிராம், இரும்புச்சத்து 8 மில்லிகிராம் இருக்கின்றது.

அதிலும் முளை கட்டிய கம்பு வைட்டமின் சி, வைட்டமின் டி இரண்டையும் உற்பத்தி செய்து அப்படியே நமக்கு அருமையாகத் தருகிறது.

கம்பு முளை கட்ட எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும்?

“ரொம்ப எளிது. அலம்பி விட்டு ஒரு இரவு முழுக்க ஊறப்போட்டால் போதும். நீரை வடிகட்டி வைத்தால் அரைமணி நேரத்தில் முளை வந்து விடும். முளை வந்த பிறகு அதை அலம்பக் கூடாது. அப்படி செய்தால், அதில் இருக்கும் ‘புரோட்டீன் என்சைம்’ (ENZYME) போய்விடும். கடையில் வாங்குவதைக் கழுவும் போதும் என்சைம் போய்விடும். வீட்டில் செய்வதுதான் நல்லது.

கம்பு உடலுக்கு ரொம்ப குளிர்ச்சி. அதிலும் சற்றே புளிக்க வைத்த கம்பங்கூழ், கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து நிச்சயம் காப்பாற்றும்.”

வரகரிசி;

“இந்த வரகரிசி இருக்கிறதே அதில் உப்புமா செய்து சாப்பிட்டுப் பாருங்களேன், ருசியாகவும் இருக்கும். அதே சமயம் அதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதாலும், கிளைசீமிக் இண்டெக்ஸ் (GLYCEMIC INDEX) மிகவும் குறைவு என்பதாலும், நீரிழிவு நோய் வராமல் தடுக்கும், ஏற்கெனவே இருப்பவர்களுக்கும் சர்க்கரை அளவைக் குறைக்கும். இதில் 100 கிராமில், 8.3 கிராம் புரோட்டீன், 9 கிராம் நார்ச்சத்து, (மற்றவற்றை விட அதிகம் பாருங்கள்!) இரும்பு 5 கிராம், கால்சியம் 27 மில்லிகிராம் என்ற அளவில் சத்துக்கள் கிடைக்கும்.

சாமை அரிசி;

“சாமை அரிசி என்றாலும், இது தானிய வகையில்தான் சேர்க்கப்பட்டுள்ளது. நாம் தினசரி சாப்பிடும் அரிசியில் உள்ளதை விட இதில் நார்ச்சத்து மிக அதிகம். நம் வெள்ளை அரிசியில், 2 கிராம் மட்டுமே நார்ச்சத்துக் உள்ளது. ஆனால் இதில் 7.6 கிராம் இருப்பதால், கொஞ்சம் சாப்பிட்டாலும் வயிறு நிறைந்து விடும், வாய்க்கும் ருசி, நார்ச்சத்தும் மிகுதி, உடலுக்கும் குளிர்ச்சி. தவிர புரோட்டீன் 7.1 கிராம், இரும்புச்சத்து 9.3 மில்லிகிராம், கால்சியம் 17 மில்லிகிராம் என மற்ற சத்துக்களும் இருக்கின்றன. இதை மிஸ் பண்ணலாமா?”

“இதே போல சத்துக்கள் நிரம்பியதுதான் குதிரை வாலி என்ற (கவர்ச்சியான) பெயர் கொண்ட அரிசியும், நார்மல் அரிசியை விட அதிக நார்ச்சத்துக் கொண்டது.”

இப்படி அளவற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன சிறுதானியங்கள் உண்டால் உடலில் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும். இதயநோய், சர்க்கரை நோய் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் பருமனை குறைக்கும் எனவே தினமும் சிறுதானியம் சாப்பிடுங்க ஆரோக்கியமா சந்தோஷமா வாழுங்க…

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com