
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள ஒகடாவில், அக்டோபர் 10 ம் தேதி 2025 ம் ஆண்டு 48 வது மிஸஸ் யுனிவெர்ஸ் (Mrs Universe 2025) போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 120 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இறுதிச்சுற்றில், இந்தியாவை சேர்ந்த ஷெர்ரி சிங் (sherry singh) என்பவர் 2025 ஆம் ஆண்டுக்கான மிஸஸ் யுனிவெர்ஸ் என்ற பட்டத்தை வென்றார். 48 ஆண்டுகளாக மிஸஸ் யுனிவெர்ஸ் போட்டி நடைபெற்று வரும் நிலையில், முதல் முறையாக இந்தியாவை சேர்ந்த ஒருவர் இந்த பட்டம் வென்றுள்ளார்.
மிஸஸ் யுனிவெர்ஸ் கிரீடம் வென்றது குறித்து பேசிய அவர், "இந்த வெற்றி எனக்கானது மட்டுமல்ல, வரம்புகள் இல்லாமல் கனவு காண துணிந்த அனைத்து பெண்களுக்குமானது. பெண்ணின் அழகு என்பது அவளது கருணை, வலிமை, மீள்தன்மையிலே உள்ளது" என தெரிவித்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த இவருக்கு 9 ஆண்டுகளுக்கு முன்னர் சிக்கந்தர் சிங் என்பவருடன் திருமணமாகி, ஒரு ஆண் குழந்தை உள்ளது.
2025 ஜூலை 28 ம் தேதி ஜார்ஜியா நாட்டில் உள்ள பதுமி நகரில் ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் தொடர் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான 38 வயதான கோனேரு ஹம்பி, சகநாட்டைச் சேர்ந்த 19 வயதான சர்வதேச மாஸ்டரான திவ்யா தேஷ்முக்குடன் மோதினார். இரண்டு கிளாசிக்கல் ஆட்டமும் டிராவில் முடிவடைந்ததை தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிப்பதற்கான டைபிரேக்கர் ஆட்டம் நடைபெற்றது.
இதில் கோனேரு ஹம்பியை 2.5-1.5 என்ற கணக்கில் வீழ்த்தி உலக சாம்பியன் பட்டம் வென்றார் திவ்யா தேஷ்முக். மகளிர் உலகக் கோப்பையில் இந்திய வீராங்கனை சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதன்முறையாகும். உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள அதே நேரத்தில் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தையும் பெற்றுள்ளார் 19 வயதுள்ள நாக்பூரை சேர்ந்த திவ்யா தேஷ்முக்.
82வது வெனிஸ் சர்வதேச திரைப்பட விழா ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 6, 2025 வரை இத்தாலியில் உள்ள வெனிஸ் லிடோவில் நடைபெற்றது. இந்த வெனிஸ் திரைப்பட விழாவில் ஒரிசோன்டி பிரிவில் சிறந்த இயக்குனருக்கான விருதை தனது 31 வந்து வயதில் வென்று வரலாறு படைத்திருக்கிறார் இயக்குனர் அனுபர்ணா ராய். ‘சாங்ஸ் ஆப் பர்ஹாட்டன் டிரீஸ்’ (songs for forgotten trees) படத்திற்காக அவர் இந்த விருதைப் பெற்றிருக்கிறார். மேற்கு வங்காளம் புருலியாவில் பிறந்த அறிமுக திரைப்படத் தயாரிப்பாளர் அனுபர்ணா ராய்.
இதன் மூலம் இந்த பிரிவில் சிறந்த இயக்குனருக்கான விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அனுபர்ணா ராய் பெற்றிருக்கிறார். சுமார் 80 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படம் இயக்குனர் அனுபர்ணா ராயின் முதல் படைப்பு. இதற்கு முன் ‘ரன் டூ தி ரிவர்’ எனும் குறும்படத்தை இவர் இயக்கியிருக்கிறார்.
சீத்தல் தேவி (Sheetal Devi) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் கிஷ்துவார் மாவட்டத்தில் உள்ள லோய்தர் கிராமத்தில் பிறந்தவர் "போதே ஃபோகோமெலியா" என்ற அரிய நோயால் இரு கைகள் இன்றி பிறந்தவர். கால்களால் வில் வித்தையை பயிற்சி செய்து தேர்ந்தார். 2025 ம் ஆண்டு செப்டம்பர் 22-28 வரை தென் கொரியாவின் குவாங்ஜு ல் நடந்த உலக வில்வித்தை பாரா சாம்பியன்ஷிப்பில் காம்பவுண்ட் பெண்கள் போட்டியில் தங்கம் வென்று, பாரா உலக பட்டத்தை வென்ற முதல் கைகள் இல்லாத பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.
சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெறும் ஆசிய கோப்பையில் போட்டியிடும் நாட்டின் திறமையான கூட்டு அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் ஒரு இந்திய பாரா வில்வித்தை வீரர் சாதாரண நிலையில் உள்ள வீரர்களுடன் விளையாட உள்ள முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
சென்னை தாம்பரம் அருகே மண்ணிவாக்கம் பகுதியில் வசித்து வருகிறார் விருதுநகர் மாவட்டம், ஜோகில் பட்டியைச் சேர்ந்த முத்தமிழ் செல்வி. இவருக்குத் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளது. இவருக்கு மலையேற்றம் பிடித்தமான பொழுது போக்கு. இதன் காரணமாக இந்தியாவின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தை 2023 ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி தொட்டார்.
அதன் பின் தொடர்ச்சியாக ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா மற்றும் வட அமெரிக்கா கண்டத்தில் உள்ள வட அமெரிக்காவின் மவுண்ட் தெனாலிமலை சிகரத்தை 2025 ஜூன் 16 ம் தேதி அடைந்தார். இதன் மூலம் மிகக் குறைந்த காலத்தில் 7 கண்டங்களின் உச்சிகளைத் தொட்ட முதல் இந்தியப் பெண் மற்றும் முதல் தமிழ்ப் பெண் என்ற இரு சாதனைகளை படைத்தார்.