"நோ என்றால் நோ தான்" - ஸ்ரீ பிரியங்காவிற்கு அப்படி 
என்ன கோபம்?

"நோ என்றால் நோ தான்" - ஸ்ரீ பிரியங்காவிற்கு அப்படி என்ன கோபம்?

டந்த பத்தாண்டுகளாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார் ஸ்ரீ பிரியங்கா. இவரின் திறமையை அங்கீகரிக்கும் வகையில் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘தமிழ்குடிமகன்’ படத்தில் சேரனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். நமது மங்கையர் மலர் ஆன் லைன் இதழுக்காக சந்தித்தபோது, கொஞ்சம் கோபத்துடன் பேசத் தொடங்கினார்.

"சார் சில வருடங்கள் முன்பு நான் நடித்த ‘மிக மிக அவசரம்’ படம் வெளியானது.  வெளியிடங்களில் டூட்டியில் இருக்கும் பெண் காவலர்கள் சந்திக்கும்  இயற்கை உபாதைகள்  பற்றியும் வெளி இடங்களில் பெண்கள் கழிப்பறை தேவைகள் பற்றியும் இந்த படம் பேசியது. இதை பல பெண் காவலர்கள் பார்த்து பாராட்டினார்கள்.  இந்த படம் வந்த பிறகு  தமிழக அரசு பல்வேறு இடங்களில் நடமாடும் கழிப்பறை கட்டித்தந்தது. ஆனாலும் பாருங்கள், நான் சில மாதங்கள் முன்பு சூட்டிங்கிற்க்காக பயணம் மேற்கொண்டேன். செல்லும் வழியில் ஒரு பெட்ரோல் நிலையத்தில் உள்ள கழிப்பறையை பயன் படுத்திக்கொள்ள நினைத்தேன். கழிப்பறை பூட்டி இருந்தது. சாவி முதலாளியிடம் இருந்தது. சாவிக்காக அலைக்கழித்தார்கள். இறுதியில் கழிப்பறையை பயன் படுத்தாமல் சென்றுவிட்டேன். 33 சதவீத ஒதுக்கீடு தந்தும் கூட கழிப்பறை முதல் காதல் வரை பெண்களுக்கு சுதந்திரம் இல்லை இந்த நாட்டில்.”

Q

காதலில் என்ன சுதந்திரம் இல்லை?   

A

ரு பையனை பிடிப்பதும் பிடிக்காததும் ஒரு பெண்ணின் சுதந்திரம். நோ என்று சொல்வதற்கு பெண்ணிற்கு உரிமை இருக்கு. ஒரு பொண்ணு பிடிக்கலைன்னு சொன்னதுக்கு அப்புறமும் அவ பின்னால் வந்து டார்ச்சர் பண்ணுவது என்ன நியாயம்? நோ என்றால் நோ தான். (பாய்ஸ் கொஞ்சம் நோட் பண்ணுங்கப்பா)

Q

இவ்வளவு முற்போக்காக பேசுறீங்களே. பிரியங்கா என்ற உங்கள் பெயரை ஸ்ரீ பிரியங்கா என்று மாற்றியது ஜோதிடம் மீதுள்ள நம்பிக்கையில்தானே? 

A

பிரியங்கா என்ற பெயரில் நிறைய பேர் சினிமாவில் இருக்காங்க. அதனால் குழப்பம் இல்லாமல் இருக்க ஸ்ரீ பிரியங்கா என்று வைத்துகொண்டேன். மற்றபடி வேறு எந்த நம்பிக்கையும் எனக்கு இல்லை.                                                   

Q

என்னதான் திறமை இருந்தாலும் சில தமிழ் ஹீரோயின்கள் பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லையே...?                             

A

முன்பை விட இப்போது தமிழ் பெண்கள் அதிக அளவில் நடிக்க வராங்க. ஆனால் அவர்களுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் தர டைரக்டர்கள் முன் வருவதில்லை. நான் ஒவ்வொரு மேடையிலும் தமிழ் பெண்களுக்கு வாய்ப்பு தாங்க என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன். பிற மாநிலத்திலிருந்து வரும் பெண்களுக்கு எந்த விதத்திலும் நாங்க குறைந்தவர்கள் அல்ல. 

Q

சினிமாவில் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை என்பதால் டி.வி. பக்கம் வந்து விட்டீர்களோ?                                                  

A

சினிமாவில் என் திறமையை வெளிப்படுத்தியதால்தான் சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு வந்ததாகக் கருதுகிறேன். சினிமாவில் காலை 6 முதல் இரவு 9 மணி வரை வேலை நேரம். டி.வி.யில் காலை 9 மணி முதல் இரவு 6 மணி வரை வேலை. வேறு எந்த பெரிய வேறுபாடும் இல்லை.           

Q

மன அழுத்தம் இப்போது பேசு பொருளாக உள்ளது. இதை தவிர்க்க என்ன செய்யலாம்?                                 

A

வுன்சிலிங்தான் தீர்வு. சினிமா துறையை சேர்ந்த பல இளம் பெண்களுக்கு பல்வேறு காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது. இது தற்கொலைக்கு தூண்டுகிறது. இதை தவிர்க்க சினிமா சார்ந்துள்ள பெண்களுக்கு கவுன்சிலிங் தேவை. விஜய் ஆன்டனி சார் மகள் தற்கொலை செய்துகொண்டது வருத்தத்தை ஏற்படுத்தியது. முறையான கவுன்சிலிங் தந்திருந்தால் இந்த இளம் பெண்ணின் தற்கொலையை தவிர்த்து இருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது.                                           

Q

Me Too பற்றி உங்கள் பார்வை என்ன?                                               

A

பெண்கள் தனக்கு நேரும் பாலியல் தொந்தரவுகளை பற்றி சம்பவம் நடக்கும் நேரத்தில் சொல்ல முடியாமல் போகலாம். காலம் வரும் போது தனக்கான நியாயத்தை எதிர்பார்க்கிறார்கள். இப்படிதான் Me Tooவை பார்க்கிறேன். பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக்கும் அவல நிலை நம் சமூகத்தில் இருக்கிறது. இது மிகப் பெரிய தலைகுனிவுதானே?

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com