

25 ஆண்டுகளுக்கு முன்னர், ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் 75-வது பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில், கல்கி வார இதழ் சிறப்பு மலரை (26.11.2000) வெளியிட்டது. அந்த மலரில், சத்ய சாயிபாபாவின் சிறப்புகள் குறித்துத் தொகுக்கப்பட்ட பல கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன.
இப்போது, ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் நூற்றாண்டு (2025) விழாவையொட்டி, அந்த இதழிலிருந்து ஒரு சிறப்புக் கட்டுரை இப்போது உங்கள் பார்வைக்கு....
26.11.2000 அன்று வெளியிட்ட பாபாவின் சிறப்பு மலரை படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
அந்த ஐம்பதெட்டு வயது ஈராக்காரர், ஸ்வீடனில் வசிக்கிறார். இப்போது புட்டபர்த்தி வந்திருக்கிறார். இது அவருடைய இரண்டாவது புட்டபர்த்தி விஜயம். பத்தாண்டுகளுக்கு முன்னர் பாபா பற்றி ஒரு யோகா மாஸ்டர் மூலம் முதல்தடவையாகக் கேள்விப்பட்டாராம். "என்னவோ தெரியவில்லை அதன்பிறகு பாபா என் கனவில் அடிக்கடி வர ஆரம்பித்தார். பாபா பற்றி நிறைய புத்தகங்கள் படித்தேன். ஈராக் போர் காரணமாக எங்கள் குடும்பம் பல தொல்லைகளுக்கு ஆளானது. என் தம்பியையும், தங்கையையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு. எனவே பலதடவை புட்டபர்த்தி வர விரும்பியும், பொருளாதார நிலை தடுத்தது. இப்போது எல்லாம் செட்டிலாகிவிட்டது. நான் சுதந்தரமாகிவிட்டேன். போன வருடம் வந்தேன். இதோ மறுபடியும்' என்று கூறும் இவர் பெயர் ஜமால் முகமது ராம்சே.
நாம் பார்த்த அயல்நாட்டு பக்தர்களில் தொண்ணூறு சதவீதத்தினரின் கழுத்தில் இருந்த செயினில் சிலுவையும். கூடவே சாயிபாபா டாலரும் இருந்ததைக் காண முடிந்தது.
ஆண்டுதோறும் பல நாடுகளிலிருந்து பக்தர்கள் பாபாவை தரிசிக்கப் புட்டபர்த்தி வருகிறார்கள். இன்ன நாடு என்று கணக்கில்லை. "கபான் என்று ஒரு நாட்டின் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆப்ரிக்காவில் இருக்கும் சின்னஞ் சிறு நாடு. அந்தக்கால பிரெஞ்சு காலனி. மொத்த ஜனத்தொகையே பன்னிரண்டு லட்சம்தான். அங்கேயிருந்து ஒரு பக்தர் வந்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்' என்கிறார் அயல்நாட்டு பக்தர்களுக்காக பிரசாந்தி நிலைய வளாகத்தில் உள்ள பிரத்யேகப் பிரிவில் சேவை செய்யும் ஒரு சாயி பக்தர்.
* கரென் கிறிஸ்டின், பிரிசெலி இருவரும் அமெரிக்கப் பெண்மணிகள். கரென், இன்டீரியர் டிசைனிங் நிபுணர். பிரிசெலி அவரது உதவியாளர். புட்டபர்த்தியில் கட்டிக்கொண்டிருக்கும் மில்லெனிய மியூசியத்தில் பணிபுரிய அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறார்கள். "தொழில் நிமித்தம் இங்கே வந்தாலும், இங்கே நாங்கள் காண்பவை எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. இத்தனை பேரை உலகம் முழுவதிலிருந்தும் கவர்ந்திழுக்கும் சக்தி கொண்டிருக்கிறார் பாபா!" என்கிறார்கள் இந்த இருவரும்.
* ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நர்ஸ் மவூரி. 1992ல் ஒரு புத்தகத்தின் வாயிலாக பாபா பற்றி அறிந்ததுமுதல் அவர் மீது பக்தி ஏற்பட்டுவிட்டது இவருக்கு. சென்ற ஆண்டு, உடல்நலம் குன்றியிருந்த தன் கணவரை அழைத்துக்கொண்டு, புட்டபர்த்தி வந்திருந்தார் இவர். சில மாதங்களுக்கு முன் கணவர் இறந்துவிட்டார். ஆனாலும், இப்போது புட்டபர்த்தி வந்திருக்கிறார். இரண்டு மாதம் இங்கே தங்கியிருக்கப் போகிறார். புட்டபர்த்தியில் உள்ள பொது மருத்துவமனையில் நடக்கவிருக்கும் மருத்துவ முகாமில் சேவை செய்யப் போகிறார்.
ஆஸ்திரேலியாவில் நர்சாக சேவை புரிவதற்கும், இங்கே சேவை புரிவதற்கும் என்ன வித்தியாசம் காண்கிறீர்கள் மவூரி?
"அங்கே நான் சேவை செய்யவில்லை; சம்பளத்துக்குப் பணிபுரிகிறேன். இங்கே நான் செய்வது வசதியில்லாத ஏழை மக்களுக்குச் சேவை. அங்கே வாழ்க்கைக்கு வசதி கிடைக்கிறது: இங்கே மனத்துக்கு நிம்மதி. இந்த சந்தோஷமே அலாதி!"
* புட்டபர்த்தியில், அயல்நாட்டு பக்தர்களுக்கான சிறப்புப் பிரிவில் இருக்கும் விஸ்வநாதன், "முந்தைய பிறப்பில் ஷிர்டி ஸ்தலத்துடன் தொடர்புடையவர்கள்தான் இந்த அயல்நாட்டு பக்தர்கள். இல்லையெனில் பாபாவுடனான தொடர்பு இவர்களுக்கு ஏன் திடீரென்று வரவேண்டும்? என்று கேட்கிறார்.
"பாபா, பக்தர்களுக்காக விபூதி வரவழைப்பது, லிங்கம் வரவழைப்பது எல்லாம் அறபுதங்களே அல்ல, ஒவ்வொரு தனி மனிதர் மனத்திலும், வாழ்க்கையிலும் இவர் நடத்திய, நடத்திக்கொண்டிருக்கிற அற்புதங்கள் இருக்கின்றனவே அவை ஏராளம். பெரும்பாலும், அயல்நாட்டு பக்தர்கள் வாழ்க்கையில் ஏதாவது ஓர் அற்புதம் நிகழ்ந்திருக்கும். அதைச் சொன்னால் பலர் நம்பமாட்டார்கள். ஆனால் அவை அனைத்தும் நிஜம்" என்கிறார் இவர்.
இங்கு வரும் அயல்நாட்டு பக்தர்களால், புதிய பிரச்னைகள் ஏதும் வந்துவிடக்கூடாது என்று கவனமாக இருக்கிறது பிரசாந்தி நிலையம். அயல்நாட்டு பக்தர்கள் வந்து இறங்கியவுடன் அவர்களது பாஸ்போர்ட் விசா ஆகியவை பரிசோதிக்கப்படுகின்றன. இவர்களுக்கென்றே மேற்கத்திய பாணி உணவு வகைகள் கிடைக்கும் கேன்டீன் ஒன்றும் செயல்படுகிறது.
அயல்நாட்டுப் பக்தர்களுக்கென்றே தினமும் காலை எட்டுமணிக்குப் பிரத்யேக சொற்பொழிவு ஒன்று நடக்கிறது. அதில் பிரசாந்தி நிலைய விதிமுறைகள், மரபுகள், பற்றி எடுத்துரைக்கப் படுகிறது.
பக்தர்களின் பாஸ்போர்ட், விசா சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு ஆலோசனை கூறி, உதவுவதற்கென்றே ஆந்திர அரசின் காவல் துறை அதிகாரி ஒருவர் இங்கு இருக்கிறார். உள்ளூர்வாசிகளும், சமூக வீரோதிகளும், அயல்நாட்டுப் பக்தர்களுடன் தொடர்புகள் ஏற்படுத்திக்கொண்டு பிரச்னைகள் ஏற்படுவதைத் தடுப்பதில் பிரசாந்தி நிலையம் பிரத்யேக அக்கறை காட்டுகிறது.
பாபாவின் அருள்பார்வை மொழி, மதம், நாடு கடந்ததாயிற்றே!
- கௌதம் ராம்
படங்கள்: யோகா