

அன்று எனது பயிற்சி நிறைவடையும் நாள். அன்று மாலை எனது நண்பர் ஒருவர் என்னோடு மிகவும் அன்பாக பழகுபவர், (என்னிடம் மட்டும் அல்ல அனைவரிடமும்தான்) “இனி என்ன செய்ய போகிறாய்?” என என்னிடம் வினவினார். நான் அதற்கு “பயிற்சிக்கு முன்னால் என்ன செய்தேனோ, அதையே வீட்டில் பள்ளி மாணவர்களுக்கு கோச்சிங் சென்டர்தான்” என்றேன்.
அதற்கு அவர், “இன்னும் சிறிது காலத்தில் நமக்குதான் வேலை கிடைத்து விடுமே... ஏன் இப்போது அதே வேலையைச் செய்து சம்பாதிக்கணும்?” என்றார். எனது குடும்ப நிலையை எண்ணித்தான் நான் அதனை செய்து வந்தேன்.
அப்போது அந்த நண்பர், “அது சரி... வேலை உடனே கிடைத்ததும் நான் சொல்வதை செய்வாயா?” என கூறினார்.
“நிச்சயம்” என வாக்கு அளித்தேன். அதன்படி ஒரு மாதத்திலேயே வேலை கிடைத்தது. அது ஒரு பொது துறை நிறுவனம்.
அவர், “உங்கள் வீட்டுக்கு அருகிலேயே ஒரு சமிதி உள்ளது. அங்கு சென்று, அங்கு வரும் மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்க வேண்டும்.” என்றார்.
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 'பகவான் பாபா' புத்தகத்தை வாங்க கீழே உள்ள Link-கை கிளிக் செய்யவும்!
எனக்கு மிக்க மகிழ்ச்சி. இதனை இறைவன் தந்தாக நினைத்தேன். ஆம் அந்த நண்பர் திரு. குருதத். அவருக்கு நன்றி சொல்ல என்றும் கடமை பட்டவனானேன்.
அங்கு சென்று பார்த்ததில் அது ஒரு சத்ய சாய் சமிதி. எனக்குச் சீரடி பாபாவைத்தான் தெரியும். ஆனால், புட்டபர்தி சாய்பாபா மேல் பக்தி வருவதற்கு ஏனோ மனம் உடனடியாக ஏற்கவில்லை. ஆனால், அங்கு மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் எனக்கு ஏதும் சங்கடமாக இல்லை. அதைத் தொடர்ந்து வந்தேன்.
அப்போது அந்தச் சமிதியில், புட்டபர்த்தியில் நடக்க இருக்கும் மூன்று நாள் ‘மனித மதிப்புகள் குறித்த கல்வி’ (EDUCATION ON HUMAN VALUES) பயிற்சி என்றும் அதனை பாபாவே நடத்த இருப்பதனையும் கூறினர். அதற்கு என்னை அனுப்புவது என்று கூறியபோது அந்த தலைப்பு பிடித்திருந்தாலும் எனக்கு இந்தப் பாபாவை பிடிப்பதில் பேதம் இருக்கவே செய்தது.
அந்த நாளும் வந்தது, இரு மனதோடு பேருந்தில் ஏறி அமர்ந்தேன். வண்டி அசைந்து ஆடி சென்றுகொண்டிருந்தது; என் மனவோட்டமும்தான். அப்போது என் மனதில் ஒன்று தோன்றியது, இங்கு பஜனையில் பல பாடல்கள் பாடுவதை நான் கேட்டதுண்டு. அதில் ஒரு மூன்று பாடல்கள் அங்கு பாபாவே பாடினால் அவரை சீரடி சாய்பாபாவின் மறு அவதாரம் என்று நான் ஏற்கின்றேன். இல்லை எனில் அவரை ஏற்பது சிரமம்தான் என முடிவு செய்தேன்.
இன்றும் என்னால் நம்பவே முடியவில்லை. நான் தேர்வு செய்த அதே பாடல் வரிசையில் ஒவ்வொரு நாள் அவரின் பிரசங்கம் முடித்ததும், நான் விரும்பிய வண்ணம் பாடியது கேட்டு அதிர்ந்தேன். காரணம் யாரிடமும் நான் சொல்லாததே. மனத்தில் நான் நினைத்ததை அப்படியே அவர் பாடியது வியப்புதான்.
இந்த நம்பிக்கையில் எனது இரண்டாவது குழந்தை பையன் பிறந்தால் ‘சத்தியநாராயணன் என பெயர் வைப்பேன்’ என நானும் என் மனைவியும் தீர்மானித்ததில் அப்படியே நடந்தேறியது எனக்கு மிகவும் சந்தோஷம்தான். அவனுக்கு பெயர் சத்தியநாராயணன் என பெயர் வைத்து இன்று பல அதிசயங்களை என் வாழ்வில் கண்டு 70 ஆம் வயதில் பாபாவை எண்ணி வாழ்ந்துகொண்டிருக்கிறேன். எனது இல்லத்திற்கும், ‘சாய் அருள்’ என பெயர் வைத்துள்ளேன்.
- வேதகிரி லோகநாதன்