

25 ஆண்டுகளுக்கு முன்னர், ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் 75-வது பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில், கல்கி வார இதழ் சிறப்பு மலரை (26.11.2000) வெளியிட்டது. அந்த மலரில், சத்ய சாயிபாபாவின் சிறப்புகள் குறித்துத் தொகுக்கப்பட்ட பல கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன.
இப்போது, ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் நூற்றாண்டு (2025) விழாவையொட்டி, அந்த இதழிலிருந்து ஒரு சிறப்புக் கட்டுரை இப்போது உங்கள் பார்வைக்கு....
26.11.2000 அன்று வெளியிட்ட பாபாவின் சிறப்பு மலரை படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
சென்னை அடையாறில் உள்ள 'சுந்தரம்' ஆலயத்தில் பாபா பிறந்த நாள் பஜனைக்காக வந்திருந்த பக்தர்கள் சிலரைச் சந்தித்தோம்... பாபா தங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய சில அற்புதங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டனர்.
டி.பி. பாலசுப்ரமணியன்: புட்டபர்த்தி சென்றிருந்த ஒரு பக்தர், புதுமையான பேனா ஒன்றை என் மனைவிக்குக் கொடுத்திருந்தார். அதைப் பிரஸ் செய்தால், பேனாவின் உடலில் பாபாவின் பொன் மொழிகள் தோன்றும். அதைப் பார்க்கவே எல்லோரும் கூடத்தில் கூடியிருந்தோம். அப்போது சமையலறையிலிருந்து 'டமார்' என்று திடீர் சத்தம். ஓடிச் சென்று பார்த்தால், குக்கர் வெடித்துச் சிதறியிருந்தது. குக்கருக்கு நேர்ந்த கதியைப் பார்த்தபோது எல்லோருக்கும் உடல் நடுங்கியது.
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 'பகவான் பாபா' புத்தகத்தை வாங்க கீழே உள்ள Link-கை கிளிக் செய்யவும்!
மனைவியும் குழந்தைகளும் வழக்கமாகச் சமையலறையில் இருந்திருக்க வேண்டிய நேரம் அது. தோன்றாத் துணையாக எங்கும் நிறைந்திருக்கும் சாய்பாபாவின் பெருங்கருணையே, பொன்மொழிப் பேனாவை அனுப்பி சமையலறையிலிருந்து என் குடும்பத்தைக் காத்தது. அன்றுமுதல் ஆண்டுதோறும் புட்டபர்த்தி சென்று சுவாமியை தரிசனம் செய்வதோடு, அங்கே ஒருவாரம் தங்கியிருந்து இயன்ற தொண்டும் செய்து வருகிறோம்.
வி. வாசுதேவன்: பத்தாம் வகுப்பு முடித்தபிறகு பாபாவின் ஒயிட் பீல்டு பள்ளியில் சேர்ந்து படித்தேன். பின்னர் எம்.பி.ஏ பாபாவின் அறுபதாவது பிறந்தநாளில் நடந்த நாடகத்தில் ஆதி சங்கரராக நடிக்கும் வாய்ப்பை பாபா எனக்குக் கொடுத்தார்கள். எனக்கு நடிக்க வரவில்லை. உன்னால் முடியும் என்று பாபாவே பயிற்சி கொடுத்தார். அவரே காஸ்ட்யூம் போட்டுவிட்டார். நாடகம் தொடங்க சில நிமிடங்கள் வரை நடுங்கிக்கொண்டிருந்த நான் கடவுள் கையில் ஒரு பொம்மைபோல் ஆனேன். நாடகம் முடிந்ததும் வாசுவா இப்படி நடித்தது என்று எல்லோரும் தழுவிக்கொண்டார்கள். பிரமித்தார்கள். பாபா மட்டும் அமைதியாகச் சிரித்தார்.
அரங்கநாதன்: அது 1974ஆம் வருடம். என் மனைவியோ பாபாவின் பக்தை. எனக்குப் பாபாவை பிடிக்காது. மனைவிக்காக புட்டபர்த்தி புறப்பட்டோம். ஆசிரமம் சென்றதும் தரிசனத்துக்காக காத்திருந்த பக்தர்களோடு அமர்ந்தோம். பாபா வந்தார். என்மனைவி, பிள்ளைகளுக்கு ஆசீர்வாதம் தந்தவர். என்னைப் பார்த்து ஒரு மர்ம புன்னகை செய்துவிட்டுப் போய்விட்டார்.
கொஞ்ச நேரத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெங்காலி டாக்டர் ஒருவரை வீல் சேரில் அமர்த்தி தள்ளி வந்தனர். பாபா மீண்டும் வந்தார். அவரை வீல் சேருடன் உள்ளே தள்ளிச் சென்றார். சிறிது நேரத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர் கையிரண்டையும் தலைக்குமேல் குவித்து வணங்கியபடி மெல்ல மெல்ல நடந்து வந்தார். அப்போதே சாய்ராம் என்று என் வாய் கதறியது.
புவனேஸ்வரி சேதுராமன்: காஸ் சிலிண்டர் வெடித்து மைத்துனரின் முகம் கருகிவிட்டது. அவரை கீழ்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தோம். சென்னையிலிருந்து, நடந்தே புட்டபர்த்தி செல்லும் ஊதுபத்தி வியாபாரி ஒருவர் மருத்துவமனைக்கு வந்து, 'இங்கு யாரேனும் காஸ் சிலிண்டர் வெடித்து சிகிச்சைக்கு வந்திருக்கிறார்களா?' என்று விசாரித்து அவருக்குத் திருநீறு கொடுத்துவிட்டுச் சென்றார். இன்னொரு பக்கம் வீட்டுப் பூஜை அறையில் இருந்த பாபாவின் உருவப் படத்தில், அவரது முகம் கறுப்பு நிறமாக மாறியிருந்தது. எனது மைத்துனர் குணமாக குணமாக, பாபாவின் முகமும் மாறிக்கொண்டே வந்ததை, பஜனைக்கு வந்த எல்லோரும் பார்த்து ஆச்சர்யப்பட்டார்கள்.
சந்திப்பு: ஜெயன் ; படங்கள்: வெங்கடேஷ்