ஸ்ரீ சத்ய சாயி 100: பாட்டு டாக்டர்!
25 ஆண்டுகளுக்கு முன்னர், ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் 75-வது பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில், கல்கி வார இதழ் சிறப்பு மலரை (26.11.2000) வெளியிட்டது. அந்த மலரில், சத்ய சாயிபாபாவின் சிறப்புகள் குறித்துத் தொகுக்கப்பட்ட பல கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன.
இப்போது, ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் நூற்றாண்டு (2025) விழாவையொட்டி, அந்த இதழிலிருந்து ஒரு சிறப்புக் கட்டுரை இப்போது உங்கள் பார்வைக்கு....
26.11.2000 அன்று வெளியிட்ட பாபாவின் சிறப்பு மலரை படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் பணிபுரிகிறார் டாக்டர் ஹீராமாலினி சேஷாத்ரி.
இவர் நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்தால் அதில் வியப்படைய எதுவுமில்லை. ஆனால் இவர் ஒன்றுக்கு மூன்றாக ஒலி நாடாக்களை வெளியிட்டிருக்கிறார். அத்தனையும் பாபாவைப் பற்றிய பாடல்கள். நாம சங்கீர்த்தனம் எனப்படும் பஜனைப் பாடல்கள் பாபா குறித்துப் பல இயற்றப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த ஒலி நாடாக்களில் இடம் பெற்றுள்ளவை கர்நாடக சங்கீதக் கீர்த்தனைகள். இவற்றை எழுதியதோடு பாடவும் செய்திருக்கிறார் இந்த டாக்டர்.
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 'பகவான் பாபா' புத்தகத்தை வாங்க கீழே உள்ள Link-கை கிளிக் செய்யவும்!
"நான் எங்கே எழுதினேன்? பகவானல்லவா என் மூலம் எழுதியிருக்கிறார்?" என்றவரிடம் "ஒருபுறம் தர்க்கரீதியான விஷயங்களுக்கு மட்டுமே இடமளிக்கும் அறிவியலின் ஒரு பிரிவான மருத்துவம், மறுபுறம் லீலைகளுக்காகவும் பெயர் பெற்ற பாபா பக்தி ஆகிய இரண்டிலும் ஆழ்ந்து ஈடுபடுவதில் ஒருவித முரண்பாடு தெரியவில்லையா?" என்று கேட்டோம்.
"இதில் எங்கே முரண்பாடு வந்தது? பிரேதத்திற்கும் நடமாடும் மனிதனுக்குமிடையே உள்ள வேற்றுமை என்பது ஆத்மாதானே. இந்த உலகிலுள்ள அத்தனை ஆத்மாவையும் ஆட்டி வைப்பவன் பரமாத்மா. அந்தப் பரமாத்மாவை நான் பாபாவின் வடிவில் தரிசிக்கிறேன். மருத்துவராக நான் மருந்தைக் கொடுக்கலாம். நோயாளி அதை உட்கொள்ளலாம். ஆனால் அந்த மருந்து எப்படி வேலை செய்கிறது, எப்படி குணமளிக்கிறது என்பதெல்லாம் 'அவர்' செயல்தான் என்பது என் கருத்து" என்ற டாக்டரின் (பக்தையின்) பாபா ஈர்ப்பு, வளர்ந்த சூழலால் வந்ததல்ல. அதாவது இவரது பெற்றோர்கள் தீவிர பாபா பக்தர்கள் அல்ல. இவருக்கும் இவரது இரு சகோதரிகளுக்கும் எல்லாவிதங்களிலும் பரிபூரண சுதந்தரம் வழங்கப்பட்டதாம். 'கடவுள் நம்பிக்கையை வளர்த்துக்கொள்கிறாயா? சரி. இல்லையா? அப்போதும் சரி' என்கிறவிதத்தில்.
"என் அப்பா கொல்லத்தில் கலெக்டராகப் பணியாற்றியபோது, அந்தப் பகுதிக்குப் பாபா வந்திருந்தார். அப்போது எங்கள் குடும்பத்தினரை ஆசீர்வதித்தார். யாரோ ஒரு சாமியார் என்று மட்டுமே அப்போது எனக்குப்பட்டது. பிறகு 1991ல்தான் ஸ்வாமி என் வாழ்க்கையை வழி நடத்தத் தொடங்கினார். அந்த வருடம் என் அம்மா இறந்தது எனக்குத் தாங்கமுடியாத அதிர்ச்சி. அதைவிட "அம்மா இப்போது எங்கே இருக்கிறாள்?" என்ற கேள்விக்குப் பதில் கிடைக்காவிட்டால் அமைதியே கிடைக்காது என்று தோன்றியது.
அம்மா அலமாரியில் பலவித தெய்வப்படங்களை வைத்திருந்தாள். அவற்றுக்கு நடுவே, தெரிந்த ஒருவர் அனுப்பியிருந்த பகவான் சாயிபாபாவின் போஸ்ட் கார்ட் உருவமும் இருந்தது. அம்மா இறந்த சில நாட்களுக்குப் பிறகு அம்மாவின் புகைப்படத்தில் விபூதி நிறையத் தென்பட்டது. அதேபோல் பாபாவின் உருவத்தின் மீதும்! "உன் அம்மா என்னிடம்தான் இருக்கிறாள்" என்று பாபா எனக்கு உணர்த்துவதாக எண்ணினேன். அதன்பிறகு நான் பாபாவின் பக்தையாகி விட்டேன்."
பக்திக்கான விளக்கம் இது. பாட்டுக்கானது என்ன?
அப்பாவுக்கு அடிக்கடி உத்தியோக மாற்றம் என்பதால் தொடர்ந்து ஒரே ஆசிரியரிடம் இசை பயில முடியவில்லையாம். பள்ளிப் பருவம் வரை நாலைந்து ஆசிரியர்களிடம் கர்நாடக இசை பயின்றிருக்கிறார்.
''ஒருமுறை 'பவன்ஸ் ஜர்னல்' இதழைப் படித்தபோது அதில் கல்கி சதாசிவம் பற்றிய ஒரு கட்டுரை வந்தது. சுதந்தரப் போராட்டத்தின்போது அவர் எந்த அளவில் அதில் ஈடுபட்டார் என்பதையெல்லாம் விவரித்திருந்தார்கள். என் குழந்தைகளுக்கு அவரைப் போன்ற ஒரு சுதந்தரப் போராட்ட வீரரை அறிமுகம் செய்தால் அவர்களுக்கு சுதந்தரத்தின் அருமை தெரியுமே என்று பட்டது. அவரையே சந்தித்தால் என்ன என்று தோன்ற, உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். காரியதரிசி "அப்புறம் பார்க்கலாமே" என்கிற வகையில் பதிலளிக்க, தற்செயலாக அந்தத் தொலைபேசியின் வேறொரு இணைப்பை எடுத்த சதாசிவம் மாமா "வாயேன், இன்னிக்கே குழந்தைகளுடன் வா" என்றார். பரவசத்துடன் போனோம்.
எம்.எஸ். இருந்தார். இட்லி கொடுத்து உபசரித்தார்கள். வேலூர் சிறைச்சாலையில் தாம் அனுபவித்த தண்டனையை சதாசிவம் மாமா உற்சாகத்துடன் விவரித்தார். பிறகு இக்காலக் குழந்தைகளின் மனத்தைக் கெடுப்பதில் தொலைக்காட்சி பெரிய பங்கு வகிக்கிறது என்றார். "சத்ய சாயிபாபா கூடச் சொல்லியிருக்காரே. அது டெலிவிஷன் இல்லே, டெலி விஷம்னு" என்றார். தொடர்ந்த பேச்சில் ''பாபா ஒரு அவதாரம்' என்றார் எம்.எஸ்.
சரஸ்வதி தேவியின் அவதாரம் எம்.எஸ். என்று நாங்கள் கருதுகிறோம். அன்று வீட்டுக்குத் திரும்பியதும் பாபா தன்னைப் பற்றிய கிருதியை என்னை எழுத வைத்தார்."
அதற்குப் பிறகு இவர் எழுதிய பல கீர்த்தனைகளைத் தமது மகளோடு இணைந்து மேடைகளில் பாடியிருக்கிறார். விரைவிலேயே 81 கிருதிகள் அடங்கிய புத்தகம் ஒன்றையும் வெளியிட இருக்கிறார். சிவபெருமான். கிருஷ்ணர், சாமுண்டேஸ்வரி ஆகிய பல தெய்வங்களைப் பற்றிய பாமாலை என்றாலும் அத்தனையிலும் 'சாயி முத்திரை' இருக்குமாம். தாம் எழுதிப் பாடிய ஒலிநாடாக்களைப் பல கர்நாடக இசை வித்வான்கள் பாராட்டியிருப்பது பெரும் ஆனந்தம் தருவதாகக் கூறும் இவருக்கு, இந்தப் பாடல்களை வித்வான்கள் மேடைகளில் பாடினால் பெரு மகிழ்ச்சியாக இருக்குமாம்.
- ஜி.எஸ்.எஸ்.
படம்: ஸ்ரீஹரி




