சில வருடங்களுக்கு முன்...
அம்மா! “இந்த வருட ஸ்ரீவரலட்சுமி நோன்பிற்கு நீங்கள் இங்கே வாருங்கள்” வெளிநாட்டில் வசிக்கும் மகனும் – மருமகளும் மாறி – மாறி வாட்ஸ் ஆப், வீடியோ கால் என அழைத்தனர்.
“ஏதாவது இங்கிருந்து கொண்டு வர வேண்டுமா?”
“முக்கியமாக தேங்காய்தான் தேவை. மற்றவைகள் இங்கே டோக்கியோவில் கிடைக்கும். வாங்கிக் கொள்ளலாம். எனது ஃப்ரெண்ட்டுக்கு இரு தேங்காய்கள் வேண்டும். ஆறு தேங்காய்கள் கொண்டு வந்தால் நல்லது. முடியுமா?” என்றாள் மருமகள்.
“முடியும்!” என்று சொல்லியபிறகு மற்ற வேலைகளை கவனிக்க ஆரம்பித்தேன். டிக்கெட் எல்லாம் புக் பண்ணி மகன் அனுப்பிவிட்டான்.
அரை டஜன் தேங்காய்களை இரண்டிரண்டாக தனித் தனி டவலில் நன்றாக சுற்றி சூட்கேஸில் வைத்தபின், தனியாக நான்கு தேங்காய்களை உடைத்து, துருவி தேங்காய்ப் பூவை இரண்டு ஜிப்-லாக் பைகளில் போட்டு மூடினேன்.
நோன்பிற்கு மூன்று நாட்கள் முன்பாக டோக்கியோ சென்றேன். மறுநாளே அவளது ஃப்ரெண்ட் வந்து இரு தேங்காய்களை வாங்கிச் சென்றாள்.
நோன்பிற்கு முதல் நாள் மாலை எங்கள் இருவரின் அம்மன் முகங்களை மருமகள் அழகாக அலங்கரித்ததைக் காண்கையில் பிரமித்துப் போனேன். கூடமாட உதவினேன். அங்குமிங்கும் பேத்தி ஓடி அதையும் – இதையும் எடுக்கையில், சமாளிப்பது பெரிய சவாலாகத்தான் இருந்தது. அரை கிராம் தங்கப் பொட்டு கட்டிய கருகமணியை கலசத்தின் கழுத்தில் மறக்காமல் கட்டினாள். அது வழிவழியாக வரும் கருகமணி தங்கம்.
பொதுவாக, வரலட்சுமி பூஜை சமயம், வீட்டில் இரு அம்மன்கள் இருந்தால், ஒரு அம்மனை கலசத்தின் மீதும், மற்றொன்றை அதன் அருகே கீழே வைப்பதும் வழக்கம். டீப்பாய் மண்டபம் அலங்கரிக்கப்பட்டு மாவிலைகள் கட்டப்பட்டன.
மறுநாள் பூஜை. மகன் நன்றாக கொழுக்கட்டை செய்வான் என்பதால் அன்றைய தினம் அரைநாள் விடுமுறை எடுத்துவிட்டான்.
பூஜையன்று, கொழுக்கட்டை மாவைக் கிளறி எடுத்து பாத்திரத்தில் போட்டு, தட்டில் பூரணத்தை உருட்டி வைத்து அவனிடம் கொடுத்துவிட்டு, மற்ற வேலைகளை நாங்கள் பார்த்துக்கொண்டோம். இரு அம்மன்களையும் முறையாக அழைத்து மொபைல் ஆப் மற்றும் புத்தகம் ஆகியவைகளின் உதவியோடு பூஜையை நன்கு முடித்தோம்.
மாலையில் அவர்களுக்குத் தெரிந்தவர்கள் பலர் வந்து அம்மனை வணங்கினர். அவர்களுக்கு கொழுக்கட்டை, இட்லி, சாம்பார், எலுமிச்சை சாதம் என எல்லாவற்றையும் கொடுக்க, ருசித்து, ரசித்து சாப்பிட்டு, தாம்பூலம் பெற்றுச் சென்றனர்.
எங்கள் வீட்டு வழக்கப்படி, வெள்ளிக்கிழமையன்று பூஜை செய்யும் ஸ்ரீவரலட்சுமி அம்மனுக்கு அன்று மாலை, மறுநாள் சனிக்கிழமை காலை மற்றும் மாலை பூஜை செய்து ஏதாவது நிவேதனம் செய்ய வேண்டும்.
சனிக்கிழமை இரவு கலசத்துடன் அம்மனை அரிசி பாத்திரத்தினுள் வைத்துவிட்டு ஞாயிறு காலைதான் எடுக்க வேண்டும். அவ்வாறே நடந்தது.
ஞாயிறு காலை பூஜை செய்த இடத்தில் இருந்த வாடிய மலர்கள் மற்றும் இதர குப்பைகளை எடுத்து பெரிய கவரினுள் போட்டு ஓரமாக வைத்தபின், அம்மன் முகம், கலசம், நகைகள் ஆகியவைகளை எடுத்து ஒரு டப்பாவினுள் வைத்தேன். பின்னர் சமையல் சாப்பாடென ஒரே பிஸி. டயர்டாகிவிட்டது.
சிறிது நேரம் ரெஸ்ட் எடுத்துவிட்டு, டப்பாவில் வைத்திருந்த அம்மன் நகைகளை அலமாரியில் வைக்க எடுக்கையில், கருகமணி மாலையிலிருந்த தங்கப்பொட்டு காணவில்லை. அரை கிராம் தங்கம்தான் என்றாலும் ஆகிவந்த தங்கப் பொட்டு அது. ஒருவரிடமும் தெரிவிக்கவில்லை. மனது வேதனைப்பட்டது.
வரலட்சுமி தாயே! இது என்ன சோதனை? எங்கே போனது? மண்டை காய்ந்ததுதான் மிச்சம்.
திங்கள் கிழமை காலையில் விளக்கேற்றி கும்பிட்டு, “சித்தி விநாயகரே! ஐந்து தேங்காய் வடல் போடுகிறேன். வழிகாட்டு!” என மனதார வேண்டிக்கொண்டிருந்த நேரம்,
“அம்மா! இந்த பூ குப்பை பையை வெளியில கொண்டு வைத்துவிடவா?” என மகன் கேட்கையில், திடீரென உன் மனதில் ஏதோ தோன்றியது.
“இரு! இரு! என்று சொல்லி, அவனிடமிருந்து அதை வாங்கி, பெரிய நியூஸ் பேப்பரில் அக்குப்பையைக் கொட்டினேன்.
“என்னம்மா? என்ன செய்றீங்க? என்ன ஆச்சு?” கேள்வி மேல் கேட்ட மகனையும் மருமகளையும் பார்க்காமல், ஒரு பெரிய கரண்டியை எடுத்து பூக்குப்பையை கிளறினேன். அப்போது, வாடிய பூ ஒன்றுடன் ஒட்டிக்கொண்டிருந்த கருகமணி தங்கப்பொட்டு பளிச்சென மினுமினுத்தது.
வரலட்சுமி அம்மனும், சித்தி விநாயகரும் கைவிடவில்லை!