என்னை துறந்து சென்றவனும் என்னால் துறக்கப்பட்டவனும்!

Short Story in Tamil
ஓவியம்; தமிழ்
Published on

காதலித்தவன் காலம் கடந்து வந்து காலில் விழக்காத்துக் கிடக்கிறான். அவன் கடந்த காலத்தில் எனக்குச் செய்த துரோகத்தை எப்படி நான் மறப்பேன்! என் நெஞ்சைச் சுக்கு நூறாக உடைத்தவனாயிற்றே! என்னென்னவெல்லாம் பேசினான்! என்னை உருகி உருகிக் காதலித்தான். அவனே உலகமென்று நம்பி இருந்தேன். விபரம் தெரிந்த நாள் முதலாய் அவனைத்தானே என் கணவனாக வரித்திருந்தேன்!. என்னைவிட அவன் பத்து வருடங்களுக்கு மூத்தவன் என்றபோதும் அதை ஒரு பொருட்டாக நினைக்காமல் அவன் மீது உயிராய்க்கிடந்தேனே! அவன் எனது ஒன்றுவிட்ட அத்தையின் மகன் என்பதால் அவனுக்கு என்னைக் கொடுக்கத் தயாராகத்தான் இருந்தனர் எனது குடும்பத்தார். அவன் கிராம நிர்வாக அலுவலராகத் முதன் முதலில் பணியில் சேர்ந்தபொழுது நான் அடைந்த மகிழ்ச்சி கொஞ்சமா நஞ்சமா! அதுவே எனது வாழ்க்கையை சூனியமாக்கப் போகிறது என்பதை கொஞ்சமும் அப்போது  நான் யூகித்திருக்கவில்லை.

காதலில் நிலைத்து கனவினில் திளைத்திருந்த அந்தக் காலத்தை எண்ணிப் பார்க்கிறேன்! எத்தனை ஆசைகள்; எத்தனை கற்பனைகள்; இமைப்பொழுதும் தெளியாத காதல் போதையில் அல்லவா மூழ்கிக் கிடந்தேன் நான்! அவனது அம்மா எனது அப்பாவைவிட மூத்தவர். ஒரு நாள் வீட்டிற்கு வந்த அவர்,

“தம்பி, முத்து! ஒரு விசயம் பேசணும்ப்பா” என்றார்.

“சொல்லுங்கக்கா” என்றவரைப் பார்த்து,

“காலம்  கடந்து போறதுக்கும் முன்னால கல்யாணத்த முடிச்சுப்புடணும்ப்பா”என்றார் அத்தை.

“இப்ப என்னக்கா அவசரம். இன்னுங் கொஞ்ச நாளாகட்டும். நானும் கொஞ்சம் காசு கன்னிய சேக்கணுமில்ல!” என்றார் அப்பா.

"நெறயப் பேரு பொண்ணு குடுக்குறோம்னு வாராகப்பா! நீ என்ன சொல்லுறண்டு தெரிஞ்சுக்கிட்டுல்ல முடிவு சொல்லணும். நீ பொண்ணுக்கு என்னா செய்வ ஏது செய்வன்னு தெரிஞ்சுக்கிட்டா முடிவெடுக்க வசதியா இருக்கும்...” என்றார் அத்தை.

அப்பா சற்று யோசிக்க ஆரம்பித்துவிட்டார். எனது அம்மா இடையில் புகுந்து படபடவென்று பேச ஆரம்பித்தாள்.

"என்ன மதினி எதுவும் தெரியாதது மாரி கேக்குற! எங்களுக்கு மூணு பொம்பளப் பிள்ளைக இருக்கு. இவ கடைசிப் பிள்ள. மூத்தவ ரெண்டு பேருக்கும் நாப்பது நாப்பது பவுனு நக போட்டோம். நாட்டு வழக்கப்படி செய்யவேண்டிய சீரெல்லாம் செஞ்சோம். இவளுக்கும் அது மாரித்தான் செய்வோம்!”

இதைக் கேட்ட அத்தை,

“காத்தம்மா! நான் சொல்றேன்னு கோவிச்சுக்கிறாத! என் மகன் அரசாங்க உத்தியோகம் பாக்குறான். நூறு பவுனு போடுறேன் நூத்தம்பது பவுனு போடுறேன்னு பலபேரு சொல்லி வாராக. சொந்தம் விட்டுப் போகக் கூடாதுன்னுதான் நான் இங்க வந்து நிக்கிறேன். நீங்க ஒரு எம்பது பவுனா போட்டுறுங்க! கல்யாணத்த முடிச்சுப்புடுவோம்,” என்றார்.

அடுப்பங்கரையில் இருந்து இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த எனக்குத் தலைசுற்றியது. அப்பா என்ன சொல்லப் போகிறாரோ என்று கூர்ந்து கவனித்தேன். அவர் சொன்னார்,

“அக்கா நீங்க வெளிப்படையாக் கேட்டுட்டீங்க. நன்றி! ஒரு பிள்ளைக்கு ஒரு ஞாயம் இன்னொரு பிள்ளைக்கு இன்னொரு ஞாயம் செய்யமுடியாது. அப்பிடிச் செய்றதுக்கு எங்களுக்குச் சத்தும் இல்லை. ஒரு காலத்துல எங்க வீட்டுல பொண்ணெடுத்தாப் போதும்னு இருந்தீங்க. இப்ப மகனுக்கு கெவுருமெண்டு வேல கெடச்சதும் பேச்ச மாத்திப் பேசுறீங்க. எங்களால நாப்பது பவுனுதான் போடமுடியும். அதுக்குச் சம்மதம்னா வாங்க சம்மந்தம் பேசுவோம்! மேக்கொண்டு வேணும்னா உங்களுக்குத் தோதான எடத்தப் பாத்துக்குங்க!”

அதற்கு அத்தை என்ன சொன்னார் என்றோ, அவர் எப்பொழுது சென்றார் என்றோ எனக்குத் தெரியாது. அப்பா பேச்சை முடிப்பதற்கு முன்பே என் சித்தம் கலங்கிவிட்டது. பித்துப் பிடித்தவள்போல் தரையில் உட்கார்ந்திருந்த என்னை அம்மா தொட்டு எழுப்பினாள். நினைவு தெளிந்தவுடன் அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அம்மாவைக் கட்டிக்கொண்டு அழுதேன். 

“நீ அழுகுறது அப்பாவுக்கு தெரிஞ்சா ரெம்ப வருத்தமும் கோபமும் படுவாறு மைதிலி. கண்ணீரைத் தொடச்சுக்க “ எனச் சொல்லி கண்ணீரைத் துடைத்துவிட்டாள் அம்மா. அழுது அழுது ஓய்ந்த பின்பு அலைபேசியில் கேசவனை அதாவது எனது காதலனைத் தொடர்புகொண்டு பேசினேன். ஆரம்பத்தில் அக்கறையோடுதான் பேசினான். போகப் போக அவனது பேச்சு மாறத் தொடங்கியது. இறுதியாகவும் உறுதியாகவும் அவன் சொன்னது.

இதையும் படியுங்கள்:
இயற்கையிடம் சுறுசுறுப்பை கற்றுக் கொள்ளுங்கள்!
Short Story in Tamil

“மைதிலி, நான் சொல்லுறத பொறுமையா நிதானமாக் கேளு! செல்லம்ட்டியில இருந்து ஒரு அலயென்ஸ் வந்திருக்கு. பொண்ணு டீச்சர் வேல பாக்குது. நூறு பவுனு நகை போட்டு ஒரு பைக்கும் வாங்கித் தர்றதா சொல்றாக. உங்க அப்பா என்னடான்னா நாப்பது பவுனத் தாண்டமாட்றாரு. எங்கம்மா செல்லம்பட்டிப் பொண்ணத்தான் கட்டணும்னு ஒத்தக் கால்ல நிக்கிறாங்க. என்னால அம்மா பேச்ச மீறமுடியாது. உனக்கு நல்ல எடமா அமையணும்னு ஆண்டவன வேண்டிக்கிறேன். இனிமேல் என்னிய ஃபோன்ல கூப்பிடாத. ஐ ஆம் ஸாரி. “

அதன் பின்பு என் வாழ்கை தலைகீழாக மாறிவிட்டது. என்னை வேறொரு இடத்தில் கட்டிக் கொடுத்து விட்டார்கள். எனது விருப்பு வெறுப்பையெல்லாம் யாரும் பொருட்படுத்தவில்லை.

அதுவொரு விவசாயக் குடும்பம். எனக்கு வாய்த்த கணவன் நிலத்தைப் பண்படுத்தி விவசாயம் செய்வதில் கைதேர்ந்தவனாகத்தான் இருந்தான். ஆனால் ஒரு பெண்ணின் மனதைப் புரிந்துகொள்ளும் பக்குவமும் பண்பும் அவனிடத்தில் கிஞ்சித்தும் இல்லை. நான் வாங்கி வந்த வரம் அது என்று அந்த வாழ்வை நான் ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்டேன். வீட்டு வேலை முடிந்தால் காட்டு வேலை, காட்டு வேலை முடிந்தால் வீட்டு வேலை என்று தொடர்ந்து என்னை வேலை வாங்குவதுதான் அவனது தலையாய வேலையாக இருந்தது.

இவற்றையெல்லாம் தாண்டி வாழ்க்கை என்று ஒன்று இருக்கிறது என்பது அவனுக்குத் தெரியாது. மனதிற்கு இதம்தரும் கலைகள், கலாச்சார நிகழ்வுகள், கலகலவென்ற பேச்சு, சிரிப்பு போன்றவை குறித்தெல்லாம் அவன் எவ்வித அக்கறையும் கொள்வதில்லை. இவற்றையெல்லாம் கூட என்னால் சகித்துக்கொள்ள முடிந்தது. உணவில் சிறு குறையைக் கண்டாலோ அல்லது செய்கின்ற வேலையில் சின்னச் சின்ன சுணக்கம் ஏற்பட்டுவிட்டாலோ என்னைக் கை நீட்டி அடிக்க ஆரம்பித்துவிட்டான். அந்தக் காட்டுமிராண்டித் தனத்தை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதைவிடவும் ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்றும் நான் கேள்விப்பட்டேன். அவன் எனக்கு உண்மையாக நடந்துகொள்ளவில்லை என்பதுதான் அது. இதற்கிடையில் எங்களுக்குப் பெண்குழந்தை ஒன்றும் பிறந்துவிட்டது.

இரண்டு மூன்றுமுறை கோபித்துக்கொண்டு குழந்தையுடன் அப்பா வீட்டிற்கு வந்துவிட்டேன். அங்கு பேருக்கு என்னை ஆதரித்தார்களே ஒழிய, நான் கோபித்துக்கொண்டு வந்தது அவர்களுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஒருமுறை அப்பா சொன்னார்.

“இங்க பாரு மைதிலி, கல்யாணத்துக்கப்புறம் புருசன்தான் ஒனக்கு எல்லாம். அடிச்சாலும் மிதிச்சாலும் அவன் கூடத்தான் நீ வாழ்ந்தாகணும். அவன் ஒன்னை அடிக்கிறான்னா நீ அவனுக்குக் கோபம் வர்றது மாதிரி ஏதாவது செஞ்சிருப்ப! ஆம்ப்ள சும்மா அடிக்கமாட்டான். இன்னைக்கு நாங்க இருக்கோம் அதனால நீ வார. நாளைக்கே நாங்க இல்லாமப் பூய்ட்டா நீ என்ன செய்வ? கெளம்பிப் போம்மா! போயி சமத்தா பொழச்சுக்க.” 

எனக்கிருந்த கடைசிப் புகலிடமும் தகர்ந்து போனது. உலகமே இருண்டுவிட்டது போல் இருந்தது. எனது கணவன் படுத்தும் கொடுமை தரும் வலியை விடவும் அதிகமான வலியை அப்பாவின் பேச்சு எனக்குக் கொடுத்தது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: பாட்டி அறிமுகப்படுத்திய ஆத்மதோழி!
Short Story in Tamil

அப்பாவின் வீட்டில் இருக்கும்போது அரளி விதையை அரைத்துக் குடித்துவிட்டேன். சாவு கூட என்னை ஏமாற்றிவிட்டது. ஆம்! மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று என்னைக் காப்பாற்றிவிடார்கள். அதன்பின்பு பிடிவாதமாக அப்பா வீட்டிலேயே இருந்துவிட்டேன். எல்லோரையும்போல் நானும் சத்துணவு அமைப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பம் செய்தேன். தெய்வாதீனமாக எனக்கு வேலை கிடைத்துவிட்டது. உள்ளூரிலேயே வேலை. என் வாழ்விலும் ஒரு நல்ல காரியம் நடந்துவிட்டது ஆச்சரியமான செயல்தான். என் கணவனிடமிருந்து நாட்டு வழக்கப்படி துரும்பை வாங்கிக்கொண்டு வந்துவிட்டேன். அதாவது விவாகரத்து பெற்றுக்கொண்டேன்.

சில வருடங்கள் வாழ்கை அமைதியாகப் போய்க் கொண்டிருந்தது. என் மகளுக்கு ஆறு வயது ஆகிவிட்டது. என் வாழ்வில் என்னைத் துறந்து சென்றவனையும் என்னால் துறக்கப்பட்டவனையும் சற்று மறந்திருந்தேன். அந்த இருவராலும் என் மனதில் ஏற்பட்ட ரணங்கள் ஆறிக்கொண்டிருந்தன.

இந்த நேரத்தில்தான் முன்னாள் காதலன் என் முன்னால் வந்து நின்றான். செல்லம்பட்டிப் பெண்ணுடன் நான்கு வருடங்கள் குடும்பம் நடத்தியும் குழந்தைப் பேறு இல்லை அவனுக்கு. அதுமட்டுமல்ல. அந்தப் பெண் இளம் வயதிலேயே புற்றுநோய்க்கு ஆளாகி இறந்தும்விட்டாள். இப்பொழுது கேசவன் என்னைத் தேடி வந்திருக்கிறான். 

“ஒனக்கும் ஒரு வாழ்க வேணுமில்ல, மைதிலி! ஏதோ பணத்தாசையில அப்போ வேணாம்னுட்டுப் போய்ட்டான். இப்ப அடிபட்டுத் திருந்தி வந்திருக்கான். ஓம் பிள்ளையையும் தானே வளத்துக்கிறேன்னு சொல்லுறான். நல்ல கொணமான பையன் வேற. ஒன்னிய மதிப்பா வச்சுக்கிருவான். நீ மட்டும் சரின்னு ஒரு வார்த்த சொன்னாப் போதும். மதுர மீனாட்சி அம்மன் கோயில்ல வச்சுக் கல்யாணத்த முடிச்சுப்புடலாம்” என்று அம்மா கூறினார். 

ஒருநாள் கழித்து பதில் சொல்வதாகச் சொல்லிவிட்டேன். என்னையும் மீறிக்கொண்டு மனதின் ஆழத்தில் உறைந்து கிடந்த காதல் உயிர் பெற்றுச் சிறகு முளைத்துப் பறக்க ஆரம்பித்துவிட்டது. என்னால் எதையும் தெளிவாகச் சிந்திக்க முடியவில்லை. ஆனந்தப் பரவசத்தில் மனம் லயித்திருந்தது. அவன் என்மீது கொண்டிருந்த காதல் குறைபாடுடையதாக இருக்கலாம். ஆனால் அவன் மீது நான்கொண்ட காதல் தூய்மையானது, நேர்மையானது. கடந்த காலத்தில் எனக்குச் செய்தது துரோகம்தான். இன்றுதான் அவன் மனம் திருந்தி வந்திருக்கிறானே! இப்படியெல்லாம் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க இரவுமுழுக்க கண்ணயர்ந்து தூங்காமல் கிடத்தேன். அதிகாலையில் ஆழ்ந்த உறக்கம் என்னைக் கவ்விக்கொண்டது.

விடிந்ததும் மனம் தெளிந்திருந்தது.

“அவன் வேண்டாம்; அவன்மட்டுமல்ல, வேறு எந்த ஆணும் என் வாழ்வில் வேண்டவே வேண்டாம். நானும் என் மகளுமாகத் தனித்திருந்து சிறப்பான வாழ்க்கையை வாழமுடியும். இதுவே எனது முடிவு” என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு வேலைக்குக் கிளம்பலானேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com