கூல் சம்மர் டிப்ஸ்!

கூல் சம்மர் டிப்ஸ்!

*பொடியாக நறுக்கிய தக்காளி, வெள்ளரிக்காய் 1 கப், கமலா ஆரஞ்சு நான்கு சுளை, கொட்டை நீக்கிய தர்பூசணி – ½ கப், ஆலீவ் ஆயில் – 1 ஸ்பூன், மிளகு பொடி – ½ டீஸ்பூன் ருசிக்கேற்ப உப்பு சேர்த்த சாலட் வயிறை ஜிலுஜிலுப் பாக்கிவிடும்.

தினமும் ½ டீஸ்பூன் ஜீரகப் பொடி கலந்த மோர் குடிக்க, குடல் வறட்சி பறந்துபோகும்.

- சீனு சந்திரா, மயிலாப்பூர்.

*அன்னாசி பழச்சாறுடன், பால் அல்லது பால் பவுடர் கலந்து முகத்தில் பூசி ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை ஊற வைத்து, பின்பு கழுவினால் கோடை வெப்பத்தால் எண்ணெய்ப் பசை வடிவது மறைந்து பளிச் சென்றிருக்கும்.

- அ.திவ்யா, காஞ்சிபுரம்.

*சோற்றுக் கற்றாழையை எடுத்து, அதன் மேல்தோலை சீவி உள்ளிருக்கும் சதைப் பகுதியை ஏழு முறை நன்றாகக் கழுவி, மிக்ஸியில் அரைத்து அதனை மோரில் கலந்து, உடன் மிளகுத் தூள், சீரகத்தூள், உப்பு, சிறிதளவு சேர்த்துக் குடிக்க, கோடையின் உடல் உஷ்ணப் பிரச்னைகள் அனைத்தும் நீங்கும்.

*தர்பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய், வெள்ளரி போன்ற நீர்க்காய்களின் தோல்களை வீணாக்காமல் துவையல் அரைத்து சாப்பிட கோடைக்கு உடல் கூல்தான்!

- பி.சுமித்ரா, பெரம்பூர்.

* நமது வீட்டில் தேவையில்லாத சாமான்களை, குப்பைகளை அகற்றி, மின் விசிறிகளைத் துடைத்து, பால்கனியில் சிறிய வாளிகளில், நீரூற்றி, ஜன்னல்களுக்கு வெட்டிவேர் தட்டி போட்டு, அவ்வப்போது நீர் தெளித்து, elf போன்ற ப்ளோரெஸெண்ட் பல்பு போட்டு ஜமாய்த்தால் நமது வீடு சும்மா குளுகுளுன்னு இருக்கும்.

- விஜயலக்ஷ்மி, மதுரை.

* ரோஜாப் பூ இதழ்களுடன் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல்சூடு குறையும். வாயும் வாசனையாக இருக்கும்.

- உஷா ராமச்சந்திரன், திருச்சி.

* வெயில் காலத்தில் தலையில் அரிப்பெடுக்கும். இதற்கு வேப்பிலையுடன் 3 சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து தலையில் ஊற வைத்து, பத்து நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்கவும். இதனால் அரிப்பு நீங்கி, முடி மிருதுவாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும்.

- வசந்தா மாரிமுத்து, சென்னை.

* சர்க்கரைக்கு பதில் வெயில் நாட்களில் வெல்லம் சேர்ப்பது மிகவும் நல்லது. சூட்டைக் குறைப்பதுடன் வெல்லத்தில்  இரும்புச்சத்தும் உள்ளது. வெளியில் அடிக்கடி ஜூஸ் சாப்பிடாமல் வெல்லத்தில் பானகம் தயார் செய்து எலுமிச்சை, ஏலம், சுக்கு சேர்த்துக் குடித்தால் வெயிலால் ஏற்படும் சோர்வு, பித்தம் குறையும்.

- எஸ். காயத்ரி, சென்னை.

* விளா மரத்தின் இலையை குளியல் மஞ்சளுடன் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் தேய்த்துக் குளிப்பதன் மூலம் சொரி, சிரங்கு, வேர்க்குரு போன்றவை நீங்கி உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

- என். மகாலட்சுமி நடராஜ், சிதம்பரம்.

* வெள்ளை முகப் பவுடருடன் சிறிதளவு சந்தனப் பவுடர் கலந்து முகப்பவுடர் அடித்தால் நீண்ட நேரம் முகப்பூச்சு நிலைத்து நிற்கும். வியர்வையின் காரணமாக முகத்திலும், கழுத்திலும் பவுடரானது  வழிவதைத் தடுக்கலாம்.

- ஜெகதா நாராயணசாமி, சென்னை.

* குறுமிளகு, வெட்டிவேர், கிஸ்மிஸ், கல்கண்டு இவற்றை தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்துவர, அதிக உடல் சூடு இன்றி, உடல் குளிர்ச்சியாய் இருக்கும்.

* காலையில் பேரீச்சம் பழம், கிஸ்மிஸ், பொடித்த கசகசா மூன்றையும், தண்ணீிரில் போட்டு, கொதிக்க வைத்து வடிகட்டி, இதை வெளியில் கிளம்பும்முன் குடிக்க, சன்ஸ்ட்ரோக்கே வராது.

- மகாலெக்ஷ்மி சுப்ரமணியன், புதுச்சேரி.

* ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடாக்கி, தலையில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, பின்பு அலசினால் கோடை வெயிலின் தாக்கத்தால் வறண்டு போன தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்.

- எஸ். ஜெயந்திபாய், மதுரை.

* கோடைக்காலம் ஆரம்பித்ததும், ஓலைகளை மொட்டை மாடியில் அழகாக வரிசையாக பரப்பி வையுங்கள். எப்பொழுதெல்லாம் ஓவர் சூட்டை உணர்கிறீர்களோ அப்போது ஓலைகளின் மீது தண்ணீரைத் தெளியுங்க! அப்புறமென்ன... விரல் சொடுக்கிற நேரத்தில் உஷ்ணம் ஓடிப்போகும்.

- க.தி.வேணுகோபால், பாண்டிச்சேரி.

*  அரை மூடி தேங்காயைத் துருவி மிக்ஸியில் அரைத்து கெட்டியாக பால் எடுக்கவும். பலாப் பழத்தைப் பொடிப் பொடியாக வெட்டி மிக்சியில் அரைத்துக்கொள்ளவும். அரைத்த விழுதில் தேங்காய்ப்பால், வெல்லப் பொடி, சுக்குப் பொடி, ஏலப்பொடி கலந்து நன்கு நுரைக்க அடித்து குளிர்ச்சியாகப் பரிமாறலாம். சுவையாகவும், கூலாகவும் இருக்கும். உடம்புக்கும் நல்லது.

- கே. ராஜேஸ்வரி, திருச்சி.         

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com