SWOT என்றால் என்ன?

SWOT என்றால் என்ன?
Published on

ஸ்வாட் பகுப்பாய்வு என்றால் என்ன?

ஸ்வாட் (SWOT) அலசுதல் என்ற பகுப்பாய்வு முறை 1970களில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது. இதன் மூலம், சாதாரண மனிதர்கள் முதல் பிரம்மாண்டமான நிறுவனங்கள் வரை, தங்களைச் சுயபரிசோதனை செய்து, எதிர்காலத்துக்கான திட்டமிடலைச் செய்ய முடியும். இத்தகைய ஸ்வாட் பகுப்பாய்வின் மூலம், கோக்கோ கோலா நிறுவனம் மிகப்பெரிய அளவில் பயன் கண்டுள்ளது. ஸ்வாட் பகுப்பாய்வைப் பற்றி விரிவாகக் காண்போம்.

ஸ்வாட் என்றால் என்ன?

ஸ்வாட் (swot) என்பதில் உள்ள எழுத்துக்கள் திறன் (Strength), பலவீனம் (Weakness), வாய்ப்பு (Opportunity), அச்சுறுத்தல் (Threat) என்பதைக் குறிக்கின்றன. இந்த நான்கு பரிமாணங்களில் நிறுவனம் தன்னைத்தானே சுயபரிசோதனை செய்ய முடியும். தான் சந்தையில், மற்ற எதிராளி நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் எந்த நிலையில் உள்ளேன். மேலும், சரியான திட்டமிடலின் மூலம், எவ்வாறு எனது எதிர்காலத்தினை வளமாக்கிக் கொள்ள முடியும் என்று அந்த நிறுவனம் ஸ்வாட் பகுப்பாய்வு செய்ய முடியும்.

திறன், பலவீனம் என்ற முதல் இரண்டு பரிமாணங்கள் நிறுவனத்தின் உள்ளடங்கிய அகம் சார்ந்தவை; வாய்ப்பு, அச்சுறுத்தல் என்ற அடுத்த இரண்டு பரிமாணங்கள் நிறுவனத்திற்கு அப்பாற்பட்ட சந்தை சார்ந்த, புறம் சார்ந்தவை.

திறன்: ஒரு நிறுவனம் சிறப்பாகச் செய்யும் விஷயங்கள். மற்ற எதிராளி நிறுவனங்களிடமிருந்து அதனை மேம்படுத்திக் காட்டும், பிரத்யேக அம்சங்கள். உதாரணமாக, விசுவாசமான வாடிக்கையாளர்கள், நிறுவனத்தின் பொருட்களின் தரம், குறைந்த விலை போன்றவை

பலவீனம்: ஒரு நிறுவனம் தடுமாறும் அம்சங்கள். எதிராளி நிறுவனங்கள், இவற்றில் திறன் மிகுந்தவையாக இருக்கலாம். உதாரணமாக, கடன் சுமை, இடுபொருட்கள் சரியாகக் கிடைக்காமல் இருப்பது போன்றவை.

வாய்ப்புகள்: ஒரு நிறுவனத்துக்கு, அதன் திறன் காரணமாக, சந்தையில் உள்ள வாய்ப்புகள். அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம், அவை எதிர்காலத்தில் அதன் திறன்களாக மாறும். உதாரணமாக, மின்சார வாகனங்கள் நிறுவனத்துக்கு, எரிபொருள் விலை ஏற்றம் காரணமாக, மின்சார வாகனங்கள் அதிக அளவில் மக்களால் வாங்கப்படுகின்றன.

அச்சுறுத்தல்கள்: ஒரு நிறுவனத்துக்கு அதன் பல வீனங்கள் காரணமாக, சந்தையில் உள்ள அச்சுறுத் தல்கள். இந்த அச்சுறுத்தல்களைக் கையாளாவிட்டால், அவை எதிர்காலத்தில் பலவீனங்களாக ஆகிவிடும். உதாரணமாக, பொருட்களை நேரடியாக மட்டுமே விற்கும் நிறுவனத்துக்கு, இணையம் வாயிலாக பொருட்களை விற்கும் நிறுவனங்கள் அச்சுறுத்தல்களைத் தருகின்றன

எனவே, ஸ்வாட் பகுப்பாய்வின் மூலம், நிறுவனம் பின் வரும் விஷயங்களைச் செய்ய வேண்டும்.

1. திறன்களை அதிகப்படுத்த வேண்டும்.

2. பலவீனங்களைக் குறைக்க வேண்டும்.

3. வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு, அவற்றை தனது திறனாக மாற்ற வேண்டும்.

4. அச்சுறுத்தல்களைக் குறைத்து, தனது பலவீனங்களை குறைக்க வேண்டும்.

இதனை, ஒரு தனிமனிதன் தனது எதிர்காலத்துக்காகவும் செய்யலாம். தனது திறன், பலவீனம், தனக்கு முன்புள்ள வாய்ப்புகள், அச்சுறுத்தல்களைக்கொண்டு, தனது எதிர்கால வாழ்க்கைப் பாதையை முடிவு செய்யலாம்.

ஒரு தனிமனிதன் பின்வரும் விஷயங்களை ஸ்வாட் பகுப்பாய்வின்போது செய்யவேண்டும்.

1. மற்றவர்களிடமிருந்து தன்னைத் தனித்துக் காட்டும், தனது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

2. மற்றவர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்தும், தனது பலவீனங்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

3. தனக்கு வெளியே, தனது பிரத்யேகத் திறன்களை ஒட்டியுள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதனைச் சார்ந்த திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

4. தனக்கு வெளியே, தனது தனிப்பட்ட பலவீனங்களை ஒட்டியுள்ள அச்சுறுத்தல்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அதனைச் சார்ந்த பலவீனங்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

ஸ்வாட் பயன்படுத்தி, நமது வாழ்க்கையை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com