என் வீட்டுத் தோட்டத்து
ப்ளூபெர்ரி குறுமரம்
கருநீல பழங்களால் நிரம்பி வழிந்தது!
சில நாட்களிலேயே
நம்ம ஊரு தேன் சிட்டு மாதிரி
சிறிய பறவை கூடு கட்ட ஆரம்பித்தது!
காலையில் அலுவலகம் செல்லும் போது தலை சாய்த்து
என்னைப் பார்க்கும்!
மாலையில் வீட்டுக்கு வரும்போது
பழங்களை கொத்தியபடியே
கூர்மையாய் என்னை நோக்கும்!
மரத்துக்கு அருகிலேயே
பச்சை மஞ்சள் கருப்பு
என மூன்று நிறங்களில்
இடுப்பளவு குப்பை டப்பாக்கள் மூடியுடன்!
வாரத்தில் இரண்டு முறை வந்து
குப்பைகளை எடுத்துச் செல்பவர்களிடம்
கூறிவிட்டேன்
'மரத்தை தொந்தரவு செய்ய வேண்டாமென்று'
சாப்பாட்டுக் கழிவுகளை
கருப்பு நிற டப்பாவுக்குள் போடும் போது
'எனக்கும் தாயேன்' னென பார்க்கும்!
விடுமுறை நாட்களில்
பழைய பேப்பர்களை
பச்சை நிற குப்பை கூடைக்குள்
போட வரும்போது
'கீச்.... கீச்' என் றென்னை கூப்பிடும்!
எனக்கும்
பெயர் சொல்லி அதை அழைக்க ஆசைதான்!
பெயர் தெரியாவிட்டால் என்ன!
நான் கூப்பிடும் போதெல்லாம்
கருவண்ண கழுத்துமுடி சிலும்ப
சிறு தலை வெளி நீட்டி
அழகாக என்னைப் பார்க்கிறதே!
- ஜேசுஜி, ஜெர்மெனி