
“என்னாச்சு? ஏன் அழறீங்க?” பதைபதைத்தாள் பாமா.
கண்கள் குளமாயிருந்தது அப்பாவுக்கு
“ஒன்னுமில்லை!” என்றார் கோதண்டராமன்.
“இல்லை. ஏதோ மறைக்கறீங்க! என்னிடம் சொல்லக்கூடாதா?” பரிவாய் கேட்டாள்
"அது வந்து.. வந்து..”
“சொல்ல இஷ்டமில்லைனா வேணாம். ஏன்னா சில ப்ராப்ளம் ஆறப்போட்டால் தானே தீர்ந்துடும். சிலது யாரிடமாவது சொன்னால் தீர்வாயிடும். பலது மற்றவங்க யோசனையக்கேட்கனும். உங்களோடது எந்த டைப்னு தெரியலை. என்னிடம் சொல்லலாம்னா சொல்லுங்க; ஹெல்ப் பண்ணமுடியுமா பார்க்கிறேன்.” இதமாய் பேசினாள்.
“புரியுது. என்னால் பிரிச்சு சொல்லமுடியலை. இந்த வீட்டில் நீதான் ரொம்ப படிச்சவ. நல்ல வேலையிலுமிருக்கே. என் மளிகக்கடை வியாபாரத்தில், ஏற்பட்ட நஷ்டம், கடன் எல்லாத்தையும் அடைச்சே. தம்பியை படிக்க வைச்சே. அக்கா கல்யாணக்கடன், அம்மாவுக்க மெடிகல் செலவு, என் ஆஸ்துமாவுக்கு மருந்து எல்லாம் பெரிய மனுஷியாட்டம் பாத்து பாத்து செய்யறே! நாங்க எல்லாம் தண்டமா தின்னுட்டு, உன் பணத்தில் சுகபோக வாழ்க்கை வாழறோம்! உன்னை பொதி சுமக்கிற மாடு மாதிரி ஆக்கிட்டோம்..” நா தழுதழுத்தது.