

1. குமுதாவின் பொய்கள்:
குமுதா வீட்டு வேலைக்கு வந்து மூன்று மாதங்கள் நிறைவு. இது வரை அவள் சொன்ன பொய்கள் என்னவென்று தேதி வாரியாக குப்புசாமி குறிக்க ஆரம்பித்தார்.
முதல் பொய் ரோட்டில் போன ஒரு மோட்டார் சைக்கிள் அவள் கணவன் மீது மோதி கால் எலும்பு முறிந்து, நடக்க முடியாமல் ஆஸ்பத்திரியில் படுத்து இருக்கான். மூன்று நாட்கள் லீவும் முன் பணம் இரண்டாயிரமும் தந்தாள் மனைவி.
அன்று மாலை டாஸ்மாக் வாசலில் அவனைப் பார்த்தார் குப்புசாமி. இவரை தூரத்தில் பார்த்ததும் துண்டால் முகத்தை மூடிக் கொண்டு ஓடி ஒளிந்தான் குமுதா கணவன்.
ஒரு வாரம் கழித்து சென்னையில் வசிக்கும் அவள் நாத்தனார் பெண் வயசுக்கு வந்து விட்டதாகச் சொல்லி ஆயிரம் பணமும் இரண்டு நாள் லீவுமாகச் சென்றாள் குமுதா. அன்று மாலை அவளை ரேஷன் க்யூவில் யாரோ பார்த்து விட்டு வந்து சொன்னார்கள்.
அதற்குப் பத்து நாள் கழித்து அவள் மாமியார் என்று ஒரு கிழவி வந்து ஜுரமாய் குமுதா படுத்திருப்பதாகச் சொல்லி நூறு ரூபாயுடன் போனாள். குமுதா இலவச பஸ் பிரயாணம் பண்ணி ஒரு கோவிலில் கிடா வெட்டி பிரியாணி சாப்பிட்டதை இவரே பார்த்தார்.
குமுதா மகன் ஆட்டோ டிரைவர். ஆட்டோ ரிப்பேராகி பத்தாயிரம் செலவு வைத்து விட்டதால் வேலைக்கு பத்து நாளாய் போகவில்லை. "யாரிடமாவது வட்டிக்கு பணம் வாங்கித் தரமுடியுமா?" என்று கேட்டாள். அதெல்லாம் உன்னால் வட்டி கட்டி மாளாது என்று சம்பள முன் பணமாக இரண்டாயிரம் தந்தாள் குப்புசாமி மனைவி.
அன்று மாலை புது ஆட்டோவை பாங்க் வாசலில் நிறுத்தியபடி அவள் மகன் குப்புசாமியைப் பார்த்து சல்யூட் அடித்து “மூணரை லட்சம் சார் வண்டி புதுசு.. இரண்டு லட்சம் லோன்..” என்றான்.
போன வாரம் குமுதாவின் அக்கா காலமாகி விட்டதாக விழுப்புரம் போவதாய் சொல்லிப் போனாள். குப்புசாமி விசாரித்ததில் அவளுக்கு அக்கா என்று யாரும் கிடையாது இவள் ஒரே பெண்.
நேற்று தெருவில் யாருக்கோ காதுகுத்து மூவாயிரம் மொய் எழுதணும் என்று சொல்லிப் போனவள் இன்னும் வரவில்லை.
இது பொய் இல்லை நிஜம்!
குமுதாவுக்கு என்ன ஆச்சோ...?
2. ரிப்பேர்:
“ஹலோ.. கணேசன் கம்பெனியா.. சார் உங்க கம்பெனியில் டிஷ் வாஷர் போன மாசம் வாங்கினோம். தண்ணி ஓட மாட்டேங்குது. ஆமாம் சுந்தரம் தான் என் பெயர். எப்போ வருவார் மெக்கானிக்.. நாளைக்கு காலை பதினொன்னுக்கா.. வரச் சொல்லுங்க.. கமலா நாளைக்கு மெக்கானிக் வருவார் கொஞ்சம் பெல் அடிச்சா கதவைத் திற.”
கமலா உடனே, “ஒரு நாள் லீவு போடுங்க.. என்னாலே அதை எல்லாம் கவனிக்க முடியாது.. இந்த மிக்ஸி ஜாரில் அரைக்க முடியலே.. பிளேடு மாத்தி டைட் வைக்கணும்.. பஜார் தெருவில் ஒரு மிக்ஸி ரிப்பேர் கடையில் கொடுங்க.”
“சரி.. ஒரு கட்டை பையில் வச்சு குடு”
“என்னங்க.. ஃப்ரிட்ஜ் கூலிங் ஆக மாட்டேங்குது. கம்பெனி ஆளை நீங்க இருக்கும்போது வந்து பார்க்கச் சொல்றீங்களா?”
“போன மாசம் வந்தவன் பார்த்துட்டு புதுசு தான் வாங்கணும்னு சொன்னான்.. பத்து வருஷம் ஆயிடுச்சே வாங்கி?”
கமலா, “ இந்த டிவியை மாத்தணுங்க.. மாடியில் இருக்கிறவங்க வீட்டில் உள்ள ஆண்டிராய்டு மாடலில் கலர் கண்ணைப் பறிக்குது..”
“மாத்தலாம்.. இந்த டிவியை ஆயிரம் ரூபாய்க்கு தான் எடுத்துக்குவாங்க.. எக்ஸேன்ஜ் திட்டத்தில்.”
“டிசம்பரில் தள்ளுபடி விலையில் வரும் போது கிரைண்டரையும் மாத்தணுங்க. வாஷிங் மெஷினும் பழசாயிட்டு… ஒண்ணு ஒண்ணா மாத்திடுங்க” என்றாள் கமலா.
இதை எல்லாம் வேடிக்கை பார்த்தபடி ஈஸி சேரில் அமர்ந்திருந்த தாத்தா கைலாசம், தன் மனைவி பார்வதி உருவப்படத்தைப் பார்த்தபடி “பார்வதி.. நீ எப்படி நாற்பது வருஷம் இந்த மாதிரி எதுவும் என்னிடம் சொல்லாம குடித்தனம் பண்ணினே...?” என்றார் மனசுக்குள்.