
பர்வதம் வாசலில் யோசித்து கொண்டே உட்கார்ந்திருந்தாள். மூன்று மாதமாக வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட வில்லை. இரண்டு மாதமாக ஏதோ காரணத்தை சொல்லி சமாளித்து விட்டாள். இன்று நேடரடியாக மேனேஜரைப் பார்த்து எப்படியாவது எதாவதை சொல்லி சமாளிக்க வேண்டும், என்ன சொல்வது என்ற யோசனையில் உட்கார்ந்து கொண்டிருந்தாள்.
மணி 09.45 ஆகி விட்டது. 10.00 மணிக்கு கிளம்பலாம் என்று காத்து கொண்டிருந்தாள்.
பர்வதத்திற்கு ஒரே மகன். கணவர் மகனுக்கு பத்து வயது இருக்கும் போதே இறந்து விட்டார். இவள்தான் ஒரு பெரிய துணிக் கடையில் இத்தனை வருடங்களாக வேலை செய்து மகனை படிக்க வைத்தாள்.
அவள் கணவர் உயிரோடு இருக்கும் போதே சொந்தமாக வீடு ஒன்றை கட்டி விட்டார். ஆகவே பர்வதத்திற்கு அந்த ஒரு கவலை இல்லாமல் இருந்தது. கடையில் வரும் வருமானத்தோடு நிறுத்தாமல் வீட்டிலேயே நேரம் கிடைக்கும் போதெல்லாம் அக்கம் பக்கத்தினருக்கு துணி தைத்து கொடுத்து அதிலும் சிறிது சம்பாதித்தாள்.