இன்றைக்கு பொழுது எப்படி முடியப்போகுதோ?
காலங்காத்தால எழுந்து குளிச்சு முடிச்சு மஞ்சப்புடவை, ருத்ராட்ச மாலை, நெற்றி நிறைய குங்குமம் வைச்சுக்கிட்டு பூசை மற்றும் பார்வையாளர்கள் அறையை ஈரத்துணி கொண்டு துடைக்க ஆரம்பித்தாள் காமாட்சி.
வீட்டுக்காரர் கடலுக்குப் போன காலமெல்லாம் அஞ்சாறு வருசத்துக்கு முன்னாடியே முடிஞ்சி போச்சு. ஒரு நாள் கடற்பாடு முடிஞ்சு சாயங்காலம் தண்ணி அடிச்சிட்டு வீட்டுக்குள்ள நுழைஞ்ச மனுசனுக்கு வலது காலும் வலது கையும் இழுத்துடுச்சு. அப்புறம் எவ்வளவு வைத்தியம் பார்த்தும் பெரிசா எந்த முன்னேத்தமும் இல்ல. கவர்மென்ட் ஆஸ்பத்திரில கபாலத்தை ஸ்கேன் எடுத்துப் பார்த்துட்டு மூளையில இலேசா இரத்தக்கசிவு வந்ததால இந்த மாதிரி ஆயிடுச்சுன்னு சொன்னாங்க. கொடுத்த மருந்து மாத்திரையில அதுக்கு மேல நிலைமை மோசமாகாம காப்பாத்த முடிஞ்சதே தவிர கை, கால் அசைவுல பெரிய முன்னேத்தமெதுவுமில்ல.