
"அம்மா! உங்களுக்கு 84 வயசாயாச்சு. இன்னமும் வள-வளன்னு என்ன பேச்சு? அப்பா இருக்கறவரைக்கும் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தார். எங்களால முடியாது. எனக்கு நேரமில்லை. உங்க பேச்சைக் குறையுங்க!" - மகன் மகேஷ் சற்றே கடிந்து சொல்கையில் கண்களில் நீர் கசிந்தது பார்வதிக்கு.
சிறு வயதிலிருந்தே பத்து பேர்கள் கொண்ட குடும்பத்தில் கடைக்குட்டியாக பார்வதி பிறந்த காரணம், சகோதர- சகோதரிகளிடம் வாய் ஓயாமல் வள-வளவென பேசி அரட்டையடிப்பாள். பேச்சே பார்வதியின் மூச்சு என்று கூட சொல்லலாம்.
புகுந்த வீட்டிலும் கூட்டுக் குடும்பமாக இருந்ததால், எல்லோரும் பேசுவார்கள். கணவர் சங்கரனும் அரட்டையடிப்பார். பேச்சைக் குறைப்பதென்பதே கிடையாது. மேலும், மொபைல் மற்றும் ஃபோனில் அரட்டை. நாளடைவில், கூட்டுக் குடும்பம் மைக்ரோ குடும்பமானது.
பார்வதி-சங்கரன் தம்பதியினருக்கு, மகேஷ் ஒரே மகன். நன்றாக படிக்க வைத்தனர். கை நிறைய சம்பளம். காதல் திருமணம் செய்து கொண்டவன் ஆஸ்திரேலியாவில் வாசம். அளவோடு பேசுபவன். மருமகளோ மூடு இருந்தால் சில வார்த்தைகள் பேசுவாள். பேரன் பிரசன்னா, ரஷ்யாவிலுள்ள மெடிகல் காலேஜில் நான்காவது வருடம் படித்துக் கொண்டிருக்கிறான்.