
பவுனம்மாள் கணக்குப் பார்த்தாள். பக்கத்தில், கணவர் சொக்கநாதன் சற்றே நெளிந்தபடி அமர்ந்திருந்தார்.
‘‘டோட்டல் போட்டுக்கோங்க. என்னோட பென்ஷன் 15 ஆயிரம், உங்களோட பென்ஷன் 25 ஆயிரம். ஆச்சா, முதியோர் இல்லத்திலே மாசா மாசம் இருபத்திரெண்டாயிரம் கொடுத்தா போதும், கரண்ட் பில் மட்டும் நம்மளைக் கட்டச் சொல்லுவாங்க. மிச்சபடி எந்தப் பிக்கலும் இல்லே, பிடுங்கலும் இல்லே. எப்ப சாப்பாடு போடுவாங்களோன்னு வெறும் தட்டையையும், சமையலறையையும் மாறிமாறி பார்த்துகிட்டிருக்க வேண்டாம். டாண்ணு மணியடிச்சாப்பல காலையில டிபன், மதியம் சாப்பாடு, மாலையில பிஸ்கட், காபி, ராத்திரி நல்ல டிபன் எல்லாம் நேரம் தப்பாம கிடைக்கும்….‘‘
‘‘பவுனு... இதெல்லாம் சரிப்படுமா? பென்ஷன் வாங்கற தைரியத்திலே இப்படியெல்லாம் முடிவெடுக்க வேண்டாம்மா...’’ சொக்கநாதர் தயங்கியபடியே சொன்னார்.
‘‘சும்மா இருங்க. இன்னும் எத்தனை நாளைக்குதான் மருமகளை எதிர்பார்த்துகிட்டிருக்கறது? பசிக்கற நேரத்ல சாப்பிடறதுதானே முறை? அதை விட்டுவிட்டு, தன்னால் எப்ப போட முடியுமோ அப்பதான் சாப்பாடுன்னா, பசி அதுவரைக்கும் காத்திருக்குமா? வயித்தையே தின்ன ஆரம்பிச்சுடுமே!’’