

அந்த பங்களாவின் வாசலில் நின்றிருந்தார் காவலர். நான் பக்கத்திலிருந்த நிறுத்தத்தில் பேருந்தைப் பிடிப்பதற்காகக் காத்திருந்தேன்.
அப்போது பங்களாவிற்கு ஒரு தம்பதி வந்தனர். கிரில் கதவைப் பாதி திறந்து வெளியே வந்த காவலர், அவர்களிடம் யார், என்ன என்று விவரம் கேட்டார். கணவர் ஏகத்துக்கு சத்தம் போட்டார். ‘‘நாங்க யாருன்னு தெரியாம எங்களைத் தடுக்கறே நீ!‘‘ என்ற அவருடைய கோபக்குரல் அந்தத் தெரு முழுவதுமே கேட்டது. காவலரோ, ‘‘உங்களை உள்ளே விடச் சொல்லி எனக்கு உத்தரவு இல்லை; ஆகவே இங்கேயே இருங்கள்; நான் உள்ளே சென்று பங்களா சொந்தக்காரரிடம் கேட்டு வருகிறேன்‘‘ என்று பதில் சொன்னார்.
ஆனாலும், கணவருக்குக் கோபம் குறையவில்லை; மனைவியும் அவருக்குச் சாதகமாக தூபம் போட்டுக் கொண்டிருப்பது அவளுடைய கோபமான முக பாவத்திலிருந்து தெரிந்தது. ‘‘நீ என்ன உள்ளே போய் கேட்கறது? நானே அவங்களை போனில் விசாரிக்கிறேன்‘‘ என்ற கணவர், மொபைலில் தொடர்பு கொண்டார்.
ஒரு சில விநாடிகளுக்கெல்லாம், வீட்டிலிருந்து ஒரு பெண்மணி வெளியே வந்து, ‘‘ஏம்ப்பா, ஏன் இவங்களை வெளியே நிறுத்தினே? உள்ளே விட வேண்டியதுதானே!‘‘ என்று காவலரைக் கடுமையான குரலில் கடிந்து கொண்டார். பிறகு, தம்பதியிடம் மன்னிப்புக் கோரும் தோனியில், ‘‘நீங்க உள்ள வாங்க,‘‘ என்று உபச்சாரமாகச் சொல்லி அழைத்துச் சென்றார். அந்தத் தம்பதியால் அந்த அம்மையாருக்கு ஆக வேண்டிய விஷயம் ஏதோ இருக்கிறது போலிருக்கிறது!
காவலருக்கு முகம் வாடினாலும், உடனே சுதாரித்துக் கொண்டு, இயல்பு நிலைக்கு மாறினார்.
இதைப் பார்த்த எனக்கு, அந்தக் காவலரிடம் ஆறுதலாகப் பேச வேண்டும் என்று தோன்றியது. அப்போது நான் செல்ல வேண்டிய பேருந்து வந்தபோதும், அதைப் புறக்கணித்து விட்டு, பங்களா வாசலுக்குச் சென்றேன்.
என்னைப் பார்த்த அவர், ‘‘யார் சார், என்ன வேண்டும்?’’ என்று கேட்டார்.
நான் சற்று முன் நடந்த சம்பவத்தை கவனித்ததை அவரிடம் சொன்னேன். அவர் மெல்லச் சிரித்துக் கொண்டார். ‘‘ஆனாலும் காவலர் என்பதற்காக, வீட்டுக்காரப் பெண்மணி உங்களை இவ்வளவு கேவலமாக நடத்தக் கூடாது,‘‘ என்று அனுதாபமாகச் சொன்னேன்.
‘‘சார், நானே அமைதியாயிட்டேன், நீங்க எதுக்கு வீணா டென்ஷன் ஆகறீங்க?‘‘ என்று அவர் நிதானமாகக் கேட்டது என்னை திகைப்படைய வைத்தது.
‘‘வீட்டு சொந்தக்காரங்க, ‘யாரையும் உள்ளே விடக்கூடாதுன்னு எனக்கு உத்தரவு போட்டிருந்தாங்க; ஆனா இப்ப வந்தவங்க ரொம்பவும் வேண்டியவங்க போலிருக்கு. அதனால அவங்களை சந்தோஷப்படுத்த என்னைத் திட்டிட்டுப் போறாங்க. என்னுடைய வேலையே அவங்க சொல்றபடி நடந்துக்கறதுதான். அப்ப வேணாமின்னாங்க; இப்போ வேணுங்கறாங்க. நான் இரண்டையும் கேட்டுக்க வேண்டியதுதான். அது மட்டுமல்ல, உள்ளே போன தம்பதி திரும்ப வரும்போது என்னை கேலியாகப் பார்த்துவிட்டோ, ஏதேனும் நக்கலாகப் பேசிவிட்டோ போகலாம். அதுக்கும் நான் தயாரா இருக்கணும்….‘‘
‘‘ஆனாலும் மனிதருக்கு மனிதர் இப்படி அவமானப்படுத்துவது சரியில்லே…‘‘ எனக்கு ஆற்றாமை குறையவில்லை.
‘‘சார், பொணம் தூக்கற வேலைக்கு வந்தாச்சு; தலைப் பக்கம் தூக்கினா என்ன, கால் பக்கம் தூக்கினா என்ன? அதுபோல உத்தரவுப்படி நடக்க சம்மதிச்சு காவல் வேலைக்கு வந்தாச்சு, அவங்க என்ன உத்தரவு போட்டாலும் கேட்டுக்கத்தான் வேணும்….‘‘ என்று சர்வ சாதாரணமாகச் சொன்னார் அவர்.
நான் நீண்ட பெருமூச்சுடன் அங்கிருந்து அகன்றேன். அப்போதைக்குப் பேருந்து பிடிக்க மனசில்லை; வீட்டிலிருந்து வரும் தம்பதி இவரைக் கேவலப்படுத்தக்கூடும். அதைப் பார்த்து ஏன் இன்னும் என் டென்ஷனை அதிகரித்துக்கொள்ள வேண்டும்? மெல்ல நடந்து அடுத்த பேருந்து நிறுத்தத்தை நோக்கிச் சென்றேன்.