

சிகாகோவிலிருந்து தங்கை (சிற்றப்பா மகள்) ராதாவின் திருமணத்திற்காக வந்த ராஜேஷ், ஒரு வாரம் முன்பு நடந்த அவளது திருமண ஆல்பத்தை அவளோடு அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு போட்டோவாகப் பார்த்து ஏதாவது சொல்லவும் அதை ரசித்து ராதா சிரிப்பதுமாக இரண்டு மணி நேரம் கழிந்தது.
அம்மா "சாப்பிட வரலாம்" என்று அழைத்ததும் எழுந்த ராதாவிடம் ஒரு போட்டோவைக் காட்டி "இவள் யார்?" என்று கேட்டான்.
ராதா அவன் முக பாவத்தைப் பார்த்தே அவன் மனதில் ஓடும் எண்ணங்களை புரிந்து கொண்டாள். "அவள் என் மிக நெருங்கிய தோழி. சிறுவயது முதலே பழக்கம். பள்ளிப்படிப்பு முதல் கல்லூரி வரை ஒன்றாக படித்தோம். எதற்காக கேட்கிறாய்? அவளை உனக்கு தெரியுமா?" என்று கேட்டாள் ராதா.
அவன் பதில் சொல்வதற்கு முன் அம்மாவிடமிருந்து மீண்டும் சாப்பாட்டுக்கு அழைப்பு வந்ததால். "பிறகு பேசலாம் ராஜேஷ்" என்று எழுந்து ஓடினாள்.