

என் அம்மாவின் உத்தரவு. குலசாமிக்கு அர்ச்சனை செய்ய சொந்த கிராமம் வந்திருந்தேன். என் இரு சக்கர வாகனத்துலயே வந்தேன். கிராமத்துக்கு போகும் முன் வழக்கமாக நான் தாண்ட வேண்டியது நான் பிறந்து, வளர்ந்து, படித்த நகரம். அதில் இருந்து பத்து கிலோ மீட்டரில்தான் என் சொந்த கிராமம். இப்போது நான் படித்த நகரத்தில் இறங்கி, கைலாசநாதர் கோயிலை தரிசிக்க சென்றேன்.
ஒரு ஒட்டடை குச்சி வாலிபன் துர்க்கை அம்மனை சுற்று சுற்றி வந்தான். அவன் முக ஜாடை... அப்படியே என் பள்ளித்தோழன் ஓமக்குச்சி கோவிந்தன் ஜாடை தான்.
"ஏ தம்பி!" அவனை அழைத்தேன். 'வருகிறேன் பொறு' என்பதாக கையால் சைகை செய்து விட்டு சுற்றிக்கொண்டிருந்தான். அதற்குள் நான் கோயிலை முழுவதுமாக சுற்றி விட்டு மீண்டும் துர்க்கை சன்னதி வந்த போது மூச்சு இரைக்க வந்து அமர்ந்தான்.