
“பூங்கதவே தாழ் திறவாய்“ முணுமுணுப்பாய்ப் பாடிய கிருஷ்ணன், இலேசாய்த் தட்டியும் கதவு திறக்கப்படாது போக, கை விரலால் பலமாகத் தாளமிட்டு, தன் மகள் மீனாவை துயில் எழுப்ப, சத்தமாய்ப் பாடினார் கிருஷ்ணன்.
‘பட்’ கதவு திறந்தது.
மீனாவின் பெரிய விழிகளில், தூக்கம் தொலைய மறுத்து துயிலுக்கு மீண்டும் அழைக்க,
“காபி, காபி” இரயில்வே காபி இராகத்தில் பாடிய கிருஷ்ணன்,
பக்கத்தில் இருந்த டேபிளில் காபியை வைத்துவிட்டு, வேகமாய் உள்ளே பாய்ந்து, தரையில் கிடந்த மீனாவின் மெத்தையை சுருட்டினார்.
“ஐயோ, அப்பா. போன வருஷம் வரைக்கும் தான் காலேஜ் படிப்புன்னு என்னை நீங்க தூங்க விடல. இப்ப, எனக்கு ஆபீஸ் தானே. அதுவும் பத்து மணிக்கு..” குறுக்கே வந்த கொட்டாவியை இடையில் விட்டு கோபமாய்க் கத்த,
“கூல், கூல்“ எனச் சமாதானப்படுத்திய கிருஷ்ணன்,
“இதே உங்கம்மா கீதா இருந்திருந்தா, உனக்கு என் தொல்லையே இருக்காது. என்ன செய்ய? அவ மேலே போய் வருஷம் ஆறு ஆயிடுச்சு.“ சென்டிமெண்டலாய் மீனாவின் மனதைத் தொட,