சிறுகதை: எங்கிருந்தோ வந்தான்!

Tamil short story He came from nowhere!
A man drinks juice
Published on

1997ஆம் ஆண்டு, வளைகுடா நாடான எமிரேட்டில் ஒரு கம்பீரமான அடுக்கு மாடி கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் 201 ஆவது  பிளாட்டில் ஸ்ரீலங்கன் லேடி சந்திரிகா அன்று காலை முதல் பதட்டத்துடனேயே இருந்தாள். வயது 32. ஆளுமை மிளிரும் அழகி. சிங்கள ஜீன். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏர் ஹோஸ்டஸ் பர்சனாலிட்டி. பெரிய ஆஸ்பத்திரியில் நர்சிங் சுப்பரின்டெண்டன்ட் வேலை. ஆனால் அவள் கணவன், மகள் இலங்கை வாசம். 

வார விடுமுறையான வெள்ளிக்கிழமையான இன்று இங்கிருந்து போகிறோமே என்ற ஒருவித பிரியா விடை (மெலன்கலி) உணர்வுடன் வீட்டை சுற்றும் முற்றும் பார்த்தாள். 

ஆம். அன்றிரவு, தான் பல வருடங்கள் வாழ்ந்த இந்த நாட்டை விட்டு நிரந்தரமாக போகப்போகிறாள். 

இலங்கையில் அவள் குடும்பத்துடன் புதிய வாழ்க்கை தொடங்கப்போகிறாள். ஆனால் பயணப்படுவதற்கு முன் அவள் ஒரு வேலையை கட்டாயம் முடிக்கவேண்டும்.

இன்னும் சிறிது நேரத்தில் டெஸ்மாண்ட் இங்கே வந்து விடுவார். டெஸ்மாண்ட் வயது 35. மனைவியை இழந்தவர். 'கோல்ட் சூக்'கில் 'சிலோன் ஜுவெல்லர்ஸ்' என்ற  மிகப்பெரிய நகை மாளிகையின் முதலாளி. கோடீஸ்வரர். 

இலங்கையில் உள் நாட்டுப்போரால் வணிகத்தில் நலிந்திருந்த சந்திரிகாவின் கணவர் மகேஸ்வரனுக்கு அவள் மூலமாக பல லட்சம் உதவி செய்து வந்தார்.

டெஸ்மாண்ட்டும் இலங்கைதான். துபாயில் பணம் திருப்பித்தராவிட்டாலும், இலங்கையில் அவளிடமிருந்து திரும்ப பெற்று விடலாம் என்ற தைரியத்தில் அவ்வப்போது ஏராளமாக கொடுத்து வந்தார். சந்திரிகாவின் அழகு, தனிமை, கம்பீரம், மற்றும் சுயேச்சை வாழ்க்கையை பயன்படுத்திக்கொள்ளவும் விரும்பினார். 

ஆனால் அவள் அவர் தூண்டிலில் சிக்காது அவரை நேர்த்தியுடன் நடத்தி வந்தது அவரை மேலும் வெறி கொள்ள வைத்தது. 

அரபு நாடுகளில் முறைதவறிய தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வது கண்டுபிடிக்கப்பட்டால் கசை அடி கூடிய கடும் தண்டனைக்கு  உள்ளாக நேரிடும் என்பதை அறிந்த சந்திரிகா, அவரிடம் ஜாடை மாடையாக குறிப்பால் உணர்த்தி அவரை சமாளித்து வந்தாள். 

ஒரு கட்டத்தில் அவர் எல்லை மீற ஆரம்பித்தார். ஒரு பக்கம் லட்சக்கணக்கில் அவருக்கு திருப்பித்தர வேண்டிய கடன், மறுபக்கம் அவர் மோகவலை, அவளை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. 

இங்கு மட்டும் அல்ல, இலங்கை வந்தும் அவர் நச்சரிப்பார் என்று தெளிந்த அவள் இதற்கு ஒரு முடிவு கட்ட விரும்பினாள். வேலையை ராஜினாமா செய்து விட்டு, பணி புரிந்த மருத்துவமனையிலிருந்து இறுதி ரொக்க செட்டில்மெண்ட் பெற்று, விமான டிக்கட்டையும் வாங்கி ஒரேயடியாக தாய்நாட்டுக்கு கிளம்பத் தயாரானாள்.

இன்னும் சற்று நேரத்தில் டெஸ்மாண்ட் வருவார் என்பதால் அவருக்கு பிடித்த 'ப்ளாக் ஃபாரஸ்ட்' கேக்கும் ஆரஞ்சு ஜூசும் தயார் செய்து ஹாலில் டீபாய் மீது வைத்துவிட்டு வேலைக்காரியிடம் "நம்ம வீட்டுக்கு இப்போ ‘டிப் டாப்’பாக டிரஸ் போட்டுக்கொண்டு ஒருத்தர் வருவார். அவரை 'கேக்'கும் 'ஜூசு'ம் சாப்பிடச்சொல். நான் உள்ளே வேலையாக இருக்கேன்னு சொல்லு" என்று உத்தரவிட்டுவிட்டு உள்ளே வந்து படுக்கையில் அமர்ந்தாள். 

ஆயிரம்தான் இருந்தாலும், ஆயிரக்கணக்கில் கடன் கொடுத்த ஒரு மனிதன் அவள் கண் முன்னே துடிதுடித்துச் சாவதை பார்க்க அவளுக்கு தைரியம் இல்லை. 

படுக்கையில் கிடந்த பாஸ்போர்ட், விமான டிக்கட், சூட்கேஸ் அவள் பதற்றத்தை சற்று அதிகரித்தது. பொறுமையுடன் காத்திருந்தாள். 

வாசலில் அழைப்பு மணி ஒலித்தது. உள்ளே வந்தவரை, வேலைக்காரி, எஜமானி உத்தரவுப்படி, “உங்களை சாப்பிடச்சொன்னாங்க! அம்மா உள்ளே வேலையா இருக்காங்க இப்போ வந்துருவாங்க!” என்று சொல்லிவிட்டு, வேலைக்காரி கதவை சாத்தி விட்டு அவள் தன் வீட்டுக்கு புறப்பட்டுச்சென்று விட்டாள்.

பொறுமையாக வெகு நேரம் படுக்கையிலேயே பதட்டத்துடன் சந்திரிகா காத்திருந்தாள். டென்ஷன்  அதிகரித்தபோதெல்லாம் “நாளை இந்நேரம் இலங்கையில் இருப்போம் நம் குடும்பத்தோடு நிம்மதியாக வாழலாம்” என்று ஆசுவாசப்படுத்திக்கொண்டாள்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: கணவன்மார்களும்…காத்திருப்போர் சங்கமும்!
Tamil short story He came from nowhere!

அரை மணி கழித்து, மெல்ல ஹாலுக்கு வந்தாள். 

எப்பொழுதும் 'டிப்டாப்'பாக கோட்டும் 'சூட்டும் டை'ய்யும் அணிந்திருக்கும் டெஸ்மாண்ட் நாற்காலியில் உட்கார்ந்த நிலையிலேயே தலை பின்பக்கமாக சாய்ந்து பிணமாக அமர்ந்திருந்தார். 

ஜூஸ் கிளாஸ் கீழே கார்ப்பெட்டில் விழுந்து கிடந்தது. டீபாய்மீது வைத்திருந்த கேக் துண்டுகள் காலி!

நிம்மதி பெருமூச்சடைந்த அவள் உள்மனதில் எங்கோ ஒரு அபாய மணி ஒலித்தது. 

அருகே சென்று சற்று உன்னித்துப் பார்த்த சந்திரிகா சிலையாக உறைந்தாள். 

கேக்கும் ஜூசும், கடுமையான சயனைட் விஷம் கலக்கப்பட்டது என்று தெரியாமல் ஆசை ஆசையாக  சாப்பிட்டு விட்டு இறந்து கிடந்தது, சில தினங்கள் முன்பு  ஆஸ்பத்திரியில் சந்தித்தபோது “வெள்ளிக்கிழமையன்று இந்த நேரத்திற்கு வீட்டிற்கு வா! விரிவாகப்  பேசுவோம்” என்று அப்பாயிண்ட்மெண்ட்  கொடுக்கப்பட்ட, டிப் டாப்பாக கோட்டும் 'சூட்டும் டை'ய்யும் அணிந்த பிரிட்டானிகா என்சைக்ளோபீடியா விற்பனை பிரதிநிதி!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com