
அடிக்கடி கைக்கடிகாரத்தைப் பார்ப்பதும் ஆபீஸ் வாயிலைப் பார்ப்பதுமாக நிலை கொள்ளாமல் தவித்தார் ஐராவதம். அன்று ரியல் எஸ்டேட் அதிபர் சுரேந்தர் குமாருக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட பெர்மிட் உண்டா இல்லையா என்ற அவரது முடிவைச் சொல்ல வேண்டும். கட்டிடம் நட்டநடு ஏரியில் ஒரே மழையில் சர்வ நிச்சயமாக பல்லை இளிக்கும் இடத்தில் பிளான் செய்யப்பட்டிருந்தது.
பின் எந்த தைரியத்தில் பில்டர் ப்ராஜெக்ட் பண்ணுகிறார்? அதை விட அதிசயம், எந்த தைரியத்தில் வீடுகளை வாங்கக் க்யூவில் நிற்கிறார்கள்? பட், இதையெல்லாம் விடப் பெரிய ஆச்சரியம், அவர் பெர்மிட் வழங்குவார் என்று சுரேந்தர் எப்படி எதிர்பார்க்கிறார்? இம்மாதிரியான விவகாரங்களில் தன் ‘ஒத்துழையாமை‘ ஊரரிந்த ஒன்றாயிற்றே!
ஐராவதம் அம்மாதிரி நேர்மையான அதிகாரியாக இருப்பதற்குக் காரணம் அவர் உயிராக மதித்த அவருடைய தகப்பனார் புண்ணியகோடி . “ஐரா! உன் பேருக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு? ஐராவதங்கரது தேவேந்திரனின் யானை. அது மத்த யானைகள் மாதிரி கருப்பு நிறம் இல்ல, தூய வெண்மை நிறம். அது மாதிரி நீயும் கறை படியாத கரங்களுடன் சர்வீஸ் பண்ணி ரிடையர் ஆகி என் பேரைக் காப்பாத்தணும்“, என்று சொன்னதைப் பிடித்துக் கொண்டு விட்டார் ஐராவதம்.