
"மாலினி! அவன் இன்னுமா வரவில்லை? ராத்திரி பதினோரு மணி போல் ஆயிடுத்தே, "என்று மருமகளைக் கேட்டாள் மதுரம். அரைத் தூக்கத்தில் இருந்து எழுந்து வந்தவளைப் பார்த்து, "அம்மா! காலையிலேயே சூர்யா, இன்று வர லேட் ஆகும் என்று தானே சொல்லியிருந்தான்? போன் போட்டேன் அவன் எடுக்கவில்லை. வண்டியில் வந்து கொண்டிருப்பான். நீங்கள் போய் படுங்கள். வந்ததும் உங்களை வந்து பார்ப்பான்" என்று மாலினி பதிலளிக்க, மதுரம் "இருக்கட்டும்! அவனைப் பார்த்துவிட்டே போகிறேன், "என்று மாலினியின் எதிரில் அமர்ந்தாள்.
மதுரத்திற்கு இரண்டும் பிள்ளைகள். பெண் குழந்தை இல்லாத குறையைப் போக்கினாள், மருமகள் மாலினி. மதுரத்திற்கும் அவள் கணவர் ராமநாதனுக்கும் அவள் செல்ல ம-பெண். சின்னவன், சந்திரன் மாலினியிடம் ஒரு சிநேகிதன் போல் பழகுவான். தினம் சிட்னியிலிருந்து மாலினிக்கு அவன் ஃபோன் பண்ணி விடுவான். என்னதான் அப்படி அண்ணியிடம் பேசுவானோ! சூர்யாவுக்கும் மாலினிக்கும் காதல் திருமணம்தான். தெலுங்கு நாயிடு அவள் பிறந்தகம். அப்படியே இவர்களிடம் மாலினி கலந்து ஐக்கியமாகி விட்டாள்.