

வலது கையும் வலது காலும் விழுந்ததுவிட்டன. மூன்று மாதங்களாகப் படுத்த படுக்கையாகிக் கிடக்கிறான் குமார். இந்த மூன்று மாதங்களில் அவன் கண்ணைத் திறந்து பார்க்கவும் இல்லை வாயைத் திறந்து பேசவும் இல்லை. வயது என்னவோ நாற்பத்தைந்திற்குள்தான் இருக்கும். குடியென்றால் குடி ஓயாத குடி. முடிவு இப்படி ஸ்ட்ரோக் வந்து படுத்ததுதான் மிச்சம்.
பதினைந்து வருடங்களுக்கு முன்பு அவனுக்குத் திருமணம் நடந்தது. அதுவும் காதல் திருமணம். ஒரு பையனும் ஒரு பெண்ணும் பிறந்தார்கள். தற்பொழுது பள்ளியில் படிக்கிறார்கள். அழகான அமைதியான குழந்தைகள். அவர்களின் அம்மாவைப் போல என்று சொல்லலாம். இருந்தும் என்ன இவனுக்குத்தான் வாழ்க்கையை நல்லபடியாக வாழத் தெரியவில்லையே. அம்மாவின் பேச்சைக் கேட்டு மனைவி விமலாவைப் படாத பாடுபடுத்தினான். அவன் ஒரு வட்டிக்கடையை நடத்திக்கொண்டிருந்தான். விமலா ஆரம்பப் பள்ளி ஒன்றில் டீச்சராக வேலை பார்த்துவந்தாள்.
ஆரம்பத்திலிருந்தே இவனது அம்மாவிற்கு விமலாவைப் பிடிக்காது. மாமியாருக்கும் மருமகளுக்கும் ஒத்துப் போகவில்லை.