
“ரொம்பவே கஷ்டமப்பா, அவங்க கிட்ட பேசி ஜெயிக்கறது”.
“யாருகிட்ட“?
“பொண்டாட்டிகிட்டதான்”
“என்னா மாமா! இப்படி சொல்லிட்டிங்க, ஒங்க பொண்ணுகிட்ட கூடவா?“
”என் பொண்ணு இல்ல, என் பொண்டாட்டி, அதாவது ஒன் மாமியார், உலகத்துல இருக்குற பெண்கள் அத்தனைப்பேரிடம், அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப்டோட ஒய்ப்பாக இருந்தாலும், அப்படித்தான். பெண்களின் மனது ஆழமப்பா ஆழம்..."
“நான் ஒங்க பொண்ணை ஜெயித்துக் காட்டிட்டா?”
“என்னோட இன்னொரு பொண்ணைக் கட்டிக்கோங்க“
“பேஷ், பேஷ், பலே மாமா, இதுபோல எல்லா மாமனாரும் இருந்தா ஜோரோ... ஜோருதானே."
“விடுங்க ச்சும்மா தமாஷ்க்கு சொன்னேன், விஷப்பரிட்சை ஒரு தடவைதானே வைக்க முடியும்!“
சப்பென்றானது சாரதிக்கு. "சரி ஒங்க பொண்ணை ஜெயிக்க முயற்சிக்கிறேன்.“
கல்யாணமான புதிதில்...
"அடியே"ன்னு கூப்பிடுவது நாகரிகமாக இருக்காதுன்னு “இன்னாம்மா, இங்க வாம்மா”ன்னு கூப்பிட்டான்.
அமுதாவோ, ”என்னங்க! என்னைய போய் 'இன்னாம்மா'ன்னு கூப்பிடறீங்களே, ஒங்க கண்ணுக்கு 'அம்மா' மாதிரியா தெரியறேன், ஸ்கூல்க்கு போற பிள்ளையான என்னை ஒங்களுக்கு கட்டி வைச்சா இப்படியா பேசறது?” பிலுபிலுவென பிடித்துக் கொண்டாள்.