
“திரும்ப சொல்லு முல்ல” குணசேகர் அதிர்ந்து போய்க் கேட்டார்.
“கிட்டத்தட்ட ஒரு கோடி ஆகும்ப்பா”
“ஏண்டி, ஒனக்கு பைத்தியமா என்ன?” விஜயா குரலில் பீதி!
முல்லை பெற்றோர்களை நேருக்கு நேர் பார்த்தாள், “நா கல்யாணம் பண்ணிக்கணும்னா அது க்ராண்டாத்தான் இருக்கணும்.”
“அதுக்காக ஒரு கோடி ரூவா நம்மளால செலவு பண்ண முடியுமாம்மா?” குணசேகர் சொன்னார். “ஆறு மாசத்துல பாண்டியன யூ.எஸ் அனுப்பணும். அதுக்கு பணம் வேண்டாமா? அதையும் சேலத்துல இருக்கற நெலத்த வித்துதான் பண்ண முடியும். உனக்கே தெரியும், அது நமக்கு இருக்கற ஒரே சொத்து.”
“அப்பா, நம்ம குடும்பத்தோட இந்த நெலமைக்கு காரணமே நீங்க தானேப்பா?"
“முல்ல” விஜயா சீறினாள் “என்ன, மரியாத கொறயுது?”
“அவ சொன்னது உண்மைதானே விஜயா. கோடி கோடியா இருந்த சொத்து எல்லாத்தயும் வியாபாரத்துல கண்மூடித்தனமா ஏமாந்து அழிச்சேன். நல்லா இருந்த குடும்பத்த வாழ்ந்து கெட்ட குடும்பமா ஆக்கிட்டேன்.”