

ரகுவிற்கு மிகத் தீவிரமாக பசித்தது. மதியம் அத்தனை வீம்பு பிடித்திருக்க வேண்டாமோ என்று தாமதமாக ஞானோதயம் எழுந்தது.
ஞாயிற்றுக்கிழமை கூட அலுவலக வேலையைப் பார்க்க வேண்டி வந்ததும், லேப்டாப்பையே காலையிலிருந்து உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்ததும், தலைவலியையும் லேசான எரிச்சலையும் ஏற்படுத்தியிருக்க, சாப்பிட்டு விட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்டால்தான் சரியாகும் என்று நினைப்பில் டைனிங் டேபிளுக்கு வந்து பார்த்தான். இரண்டு மணி ஆகியும் ஏனோ அது துடைத்து வைத்தாற் போல வெறுமையாகக் காட்சியளித்தது. அடுக்களைக்குள் எட்டிப் பார்த்து, “என்ன இந்து இன்னுமா சமையல் முடிக்கல?” என்றான்.
அவனுக்கு முதுகு காட்டி நின்றுகொண்டு, மைக்ரோவேவ் அவனில் எதையோ வைத்துக்கொண்டிருந்தவள் “ஒரு பத்துப் பதினஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க. ரெடியாயிடும். யூடியூப் பார்த்து புதுசா டிஷ் ட்ரை பண்ணேன். அதான் கொஞ்சம் லேட்” என்றாள் திரும்பாமலேயே.