
“அட, இந்த இறைவன் படைப்புதான் எத்தனை அற்புதம். எவ்வளவு அதிசயம். நான் உன்னைப் பார்க்கிறப்போ எல்லாம் என் மனசு அப்படித்தான் நினைக்கும்” என்றான் ஒரு அபரிதமான புன்னகையுடன் சரண், அவள் கையை இறுக்கமாகப் பிடித்தபடி.
“என்னடா... என்னமோ புதுசு புதுசா வசனம் பேசறே?” அவளும் அவனிடம் இருந்து கைகளை விலக்கிக்கொள்ள விருப்பமில்லாமல் இன்னும் கொஞ்சம் உரசியபடியே கேட்டாள்.
அவன் சிரித்தான். "சரள்... இது ஒரு புதுப் பெயர். எனக்கு ரொம்பப் பிடித்து விட்டது."
“சரண், நீ பெரிய இடத்துப் பையன். உங்கம்மா நீ உண்டானதுமே ஆணா இருந்தா இந்தப் பெயர்... பெண் குழந்தையா இருந்தா இந்தப் பெயர்னு யோசிச்சு யோசிச்சு முடிவு செய்திருப்பாங்க. ஆனா என் நிலை தலைகீழ். அப்பன் குடிகாரன். அம்மா பெரிய வீடுகளின் வேலைக்காரி. பள்ளிக்கூடத்துல குடிகார அப்பன் என்ன பெயர் சொன்னானோ தெரியாது. ஆனா, அவங்களே இரக்கப்பட்டு நல்ல பெயர்னு இப்படி வெச்சிருக்காங்க.