
கிருஷ்ண ஜெயந்தி வைபவங்கள் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. கோகுலத்தில் யசோதா தன் கைபேசியைப் பார்த்தபடியே சோகமாக அமர்ந்திருந்தாள். பக்கத்து வீட்டுப் பரிமளா அங்கே வந்ததைக்கூட அவள் கவனிக்கவில்லை. பரிமளா அவள் அருகே சென்று அவளை உலுக்கினாள். கைபேசியிலிருந்து கண்களை அகற்றி, எந்தவித உற்சாகமும் இல்லாமல் யசோதா பரிமளாவைப் பார்த்தாள்.
பரிமளா அவளிடம், "என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு கவலையா இருக்க நீ? உலகமே உன் பையன் பர்த்டேவைக் கொண்டாடிண்டு இருக்கு. உனக்கு ஏன் இந்தச் சோகம்?" எனக் கேட்டாள்.
'யாராவது கேட்க மாட்டார்களா? யாரிடமாவது தன் கவலையைக் கொட்டித் தீர்த்துவிட மாட்டோமா' என இருந்தவளிடம், மடமடவென ஆதங்கம் வார்த்தைகளாக வெளியேறியது.