சிறுகதை: "சோம்பேறிக் கொழந்த"!

Tamil Short Story - Lazy boy!
Boy - College student
Published on

“டேய் தீபக், எழுந்துருடா, மணி 8 ஆகுது.”

போர்வைக்குள்ளிருந்து ஒரு தூக்கம் நிரம்பிய குரல்... “அம்மா, இன்னிக்கி சண்டே, காலேஜ் கெடயாது. கொஞ்சம் நிம்மதியாத் தூங்க விடு.”

“எப்பப் பார்த்தாலும் தூக்கம் தான். சண்டேயாயிருந்தா என்ன? 6 மணிக்கு எழுந்து படிக்கலாம், இல்ல வீட்டு உதவி பண்ணலாமே..” கடுப்புடன் நகர்ந்தாள் 

9 மணிக்கு தீபக் எழுந்து வந்தபோது அப்பா காலை உணவருந்திக் கொண்டிருந்தார். 

“சுபா, தீபக் வந்துட்டான்.”

“வரேன், வரேன். என்னத்த வெட்டி முறிக்கப்போறான். வெயிட் பண்ணட்டும்.”

தினேஷ் - சுபா தம்பதியரின் ஒரே மகன் தீபக். பீ. ஈ. மெக்கானிக்கல் 3 வது வருடம். 

ஸ்கூல் படிக்கும்போது எல்லா ஆசிரியர்களும் அவனைப் பற்றி சொன்ன அபிப்ராயம் ஒன்றுதான் – “அவன் இன்னும் கொஞ்சம் முயற்சி செஞ்சா ஸ்கூல் டாப்பராக முடியும்!”

தீபக் 12 ம் வகுப்பில் 92% எடுத்து சுபாவின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டான். இன்னும் 4 - 5% அதிகமாக வாங்கியிருக்க முடியும் என்று ஸ்கூல் ப்ரின்ஸிபல் சொன்னபோது சுபா கிட்டத் தட்ட அழாத குறைதான். 

“பக்கத்து வீட்டு ரவி 94% + டென்னிஸ் சாம்பியன். அத்தை பையன் விக்னேஷ் 95% + செஸ் புலி. சித்தப்பா பெண் ப்ரபா 95% + பரதநாட்டியம். நீ வேற எதுவும் கத்துக்காம வெறுமன படிச்சும் 92% தான்...” என்று சுபா சொன்னபோது தீபக்கின் பதில் ஒரு புன்னகைதான். 

“இவன் ஏங்க இப்படி கமுக்கமா ஸ்மைல் பண்றான்?” என்று அவள் புருஷனைக் கேட்ட போது அவர், “நோ கம்பேரிஸன்ஸ்” என்று சொல்லிவிட்டார். “இந்தக் காலத்துப் பசங்கள குறைச்சலா மதிப்பிடக்கூடாது.”  

பீ. ஈ. முடிச்சுட்டு எம். எஸ். பண்ண யு. எஸ். போகணும் என்று அவள் சொன்னபோது தீபக் “பாக்கலாம்மா“ என்று விட்டேத்தியாக சொல்லிவிட்டான்.

இன்றிரவிலிருந்து அவன் பத்து நாள் பெங்களூரு போவதாகத் திட்டம்.

“தீபக்...” அப்பா பேசினார். “ரஞ்சனிக்கு ஒன் பஸ் டைமிங் பத்தி சொல்லிட்டியா?” 

“ஓயெஸ்.”

“ராத்திரி எத்தன மணிக்கு பஸ்?” சுபா கேட்டாள் 

“9 மணிக்கு. பெங்களூரு நாளை மார்னிங்க் 4 மணிக்கி போய் சேரும்.”

“அங்க அக்காவுக்கும் மாப்பிள்ளைக்கும் உதவியா இரு. சும்மா தூங்கிக்கிட்டுருக்காத.”

“தெரியும்மா, நா கொழந்தயில்ல.”

“சோம்பேறிக் கொழந்த” சொல்லிவிட்டுப் பன்ச் டயலாக் அடித்த திருப்தியுடன் நகர்ந்தாள் சுபா. 

இதையும் படியுங்கள்:
சிறுகதை: தோல்வி!
Tamil Short Story - Lazy boy!

தீபக் இரவு 9 மணி பஸ் ஏறியதும் குடும்ப வாட்ஸ்அப் க்ரூப்புக்கு மெசேஜ் செய்தான். அடுத்த மெசேஜ், நாளை காலை என்று முடித்தான். 

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தினேஷ் மொபைல் ஃபோன் அடித்ததும் சட்டென்று எடுத்தார். 

“அப்பா, தீபக் ஹியர். பஸ் ஆக்ஸிடன்ட் ஆயிடுச்சு. வெல்லூர் தாண்டி ஒரு 50 கிலோ மீட்டர் தள்ளி.”

சுபாவும் முழித்துக் கொண்டுவிட்டாள் “தீபக், வீடியோ கால் பண்ணு...” குரலில் அழுகையுடன்  சொன்னாள். 

“முன்னாடி போன லாரி சடன் ப்ரேக் போட்டதுனால எங்க பஸ் மோதிருச்சு. பின்னாடி வந்த இன்னொரு பஸ் எங்க பஸ்ஸ மோதிருச்சு. அம்மா, எனக்குக் கைல லேசா காயம். கொஞ்ச பேருக்கு ஸீரியஸ் இன்ஜூரி. அவங்களத் தவர மத்தவங்கள பக்கத்து ஹாஸ்பிட்டல்ல ஃபர்ஸ்ட் எய்ட் குடுத்துட்டு அடுத்த பஸ்ல அனுப்பிடுவாங்க. ஐ வில் கீப் யூ போத் அப்டேட்டட்.”

இரவு முழுவதும் இருவரும் சரியாகவே தூங்கவில்லை. சுபா இரண்டு முறை சுவாமி அறைக்குள் சென்று ப்ரார்த்தனை செய்துவிட்டு வந்தாள்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: நித்யா!
Tamil Short Story - Lazy boy!

காலை 4 மணிக்கு தீபக்கிடமிருந்து செய்தி வந்தது. “இப்போதான் மாற்று பஸ் கிடைத்தது. பயணம் தொடர்கிறது.”

அன்றைய டைம்ஸ் ஆஃப் இன்டியாவில் முதல் பக்கத்தில் “சென்னை – பெங்களூரு சென்ற பஸ் நேற்று இரவு வெல்லூர் அருகில் விபத்துக்கு உள்ளானது. மூன்று பேர் பலி. 25 பேர் பலத்த காயம். முழு விவரம் 8 ஆம் பக்கத்தில்...” என்று வந்திருந்தது. தினேஷூம் சுபாவும் மேலும் தொடர்வதற்குள் மொபைல் ஃபோன் அடித்தது. ஸ்பீக்கரில் வைத்தார் தினேஷ்.

“கங்க்ராட்ஸ் சார்” பக்கத்து வீட்டு ஜகன் ஃபோனில். 

“எதுக்கு ஜகன் சார்?” இருவருக்கும் புரியவில்லை. 

“பேப்பர்ல தீபக் ஃபோட்டோ வந்துருக்கு. பாருங்க” சொல்லிவிட்டு வைத்தார். 

8 ஆம் பக்கத்தில் தீபக் படம். கூடவே கொட்டை எழுத்தில் “மாணவரின் உதவியைப் பாராட்டினார் டிஸ்ட்ரிக்ட் கலெக்டர்". தலைப்புக்குக் கீழே விவரம்...

“நேற்று நடந்த பஸ் விபத்தில் அடிபட்ட பல பிரயாணிகளை உடனடியாக மருத்துவ மனைக்கு அனுப்பும் பணியில் கல்லூரி மாணவர் தீபக் கொட்டும் மழையில் அரசு உதவிக் குழுவினருடன் மிகுந்த சமயோசிதம் மற்றும் விரைவுடன் ஈடுபட்டார். தீபக் மற்ற இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு.”

தினேஷ் சுபாவைப் பார்த்துப் புன்சிரித்தார். “நம்ம பிள்ளய நீயே புரிஞ்சுக்கல. சோம்பேறி மாதிரி இருப்பான்; ஆனா தேவைப்பட்ட அடுத்த நொடி ஸ்பீட மாத்திடுவான்.”

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com