
மேலிருந்து எள்ளைப் போட்டால் கீழே விழாத அளவுக்குக் கூட்டம் அரண்மனை மண்டபத்தில் நிறைந்திருந்தது. மன்னரும், ராணியும் வந்து அமர்ந்ததும் பின் ட்ராப் சைலன்ஸ் நிலவியது. முக்கிய அமைச்சரோ எகத்தாளமாக அமர்ந்திருக்க, மன்னரின் ஆணைக்காக அதிகாரிகள் காத்து நின்றார்கள்! மன்னர் ஆரம்பிக்கலாம் என்று கைகளால் சைகை காட்டியதும் ஒரு காவலர் சிறு பெட்டியில் திருவுளச் சீட்டுகளைக் கொண்டு வந்து மன்னரின் முன்னால் வைத்தார்.
ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த குற்றவாளிக் கூண்டில், தன் விதியை நொந்தபடி அந்த எழுத்தர் நின்று கொண்டிருந்தார். எழுத்தரின் மனைவியோ கண்ணீரும், கம்பலையுமாக முருகக் கடவுளை முழுதாய் எண்ணியபடி களைப்புற்றுக் காணப்பட்டார். ராணியின் கண்களில் ஒரு தீட்சிதம் தெரிந்தது.
அது மன்னராட்சிக் காலம். மன்னர் நல்லவர்தான். முக்கிய அமைச்சரோ அன்றாடம் அழகிய பெண்களைத் தன் வயமாக்கிக் கொள்ளும் தகாத குணம் கொண்டவன். அதற்காக எந்த மகாபாவத்தையும் செய்யத் துணிந்தவன். எழுத்தரின் அழகு மனைவி அவன் கண்ணில்பட, வழக்கம்போல் அவளை எளிதாய் அடைந்து விடலாமென்று எண்ணி அணுகினான். அவளோ பத்திரகாளியாகி அவனைப் பயமுறுத்த, காமுகர்களுக்கு அது போன்ற பெண்களின் மீதே ஆசை அதிகமாகும் என்பதற்கிணங்க அவளை அடைந்தே தீருவதென்று முடிவெடுத்தான்.