
ரேணுகா எழுந்து உட்கார்ந்தாள்.
"அம்மா சிவா வருவாரா?" என்றாள்.
"படும்மா. பாபு எப்படியும் அவர கூட்டிகிட்டு வருவான் கவலைப்படாதே" என்றாள் அம்மா, அவள் தலையை தடவியபடி. கருவளையம் தோன்றிவிட்ட மகளின் கண்களை கலங்கிய கண்ணீரை கட்டுப்படுத்தி கொண்டு தேற்றினாள்.
அன்று டாக்டர், ரேணுகாவின் வாழ்நாட்களை எண்ணி முடித்த கணக்கை அவர்களிடம் சொல்லிய பின் அவளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து அவள் மீளவேயில்லை. வாழ்க்கை அப்போதே அஸ்தமித்துவிட்டதாய் அவளுக்கு தோன்றியது.
வாழ வேண்டிய வயதில் முடியப்போகும் மகளை நினைத்தால் நெஞ்சு வெடித்து விடும் போல இருந்தது அந்த தாய்க்கு. ஆனால் ரேணு சட்டென விஷயத்தை கிரகித்து கொண்டாள். முடிந்த வரை இயல்பாக இருக்க முயன்றாள். ஆனால் கடந்த மூன்று நாட்களாக அவளுக்கு வந்த தொடர் இருமல் இந்த நர்சிங் ஹோமில் அவளை படுக்க வைத்து விட்டது.