

"அம்மா… உன்னை கெஞ்சி கேட்டுகறேன்… வீட்டை விட்டு வெளியே போயிடு..!"
"டேய்… என்னடா சொல்ற..? நான் எங்க போவேன்…? எனக்கு சொந்தம் நீ ஒருத்தன்தான்டா… வேற நாதி எனக்கு கிடையாது…" என்று சொல்லி கலங்கிய அம்மா வசந்தாவைப் பார்க்க பாவமாக இருந்தது வீரமணிக்கு.
"வேற வழி தெரியலம்மா…" என்று சொல்லி வீரமணி கண்கலங்கினான்.
"எங்கடா போக சொல்றே…? போ… போன்னு சொன்னா.... நான் எங்க போவேன்… இந்த கட்டை இன்னும் கொஞ்ச நாள்தான் உனக்கு பாரமா இருக்கும்… ஆண்டவா… எனக்கு ஒரு நல்ல சாவை கொடுப்பா… பெத்த மகனே இப்படி சொல்லும்படி செய்திட்டியே… உனக்கு கண் இல்லையா? காது கேட்கலையா?"
"அம்மா புலம்பிகிட்டு இருக்காம சீக்கிரம் கிளம்புமா… உன் துணிமணி எடுத்துக்கோ…"
அவசரப் படுத்தினான் வீரமணி.
கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து கொள்ளக்கூட தோன்றாமல் தனக்கென்று இருந்த இரண்டு நைந்து போன புடவை, ஜாக்கெட் ஒன்றையும் ஒரு மஞ்சள் பையில் துருத்திக் கொண்டு மகனை ஏறிட்டுப் பார்த்தாள்.
"போகாதே!" என்று சொல்வான் என ஏக்கத்துடன் வீரமணியைப் பார்த்தாள்.
இதயம் நொறுங்கிப் போய்தான் அம்மாவை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்கிறான் என்பதை வசந்தா புரிந்துக் கொண்டாள்.
வீரமணியின் மனைவி சகுந்தலா வருவதற்குள் வசந்தா வீட்டைவிட்டு போயிருக்க வேண்டும்.