
"பொம்மை... பொம்மை... பாலகிருஷ்ணன் நவநீதகிருஷ்ணன் பொம்மை..." ஒரு ழூதாட்டி கூடையில் பொம்மைகளை வைத்து கூவிக்கொண்டே வந்தாள். அது பனையூர் பிளாட்ஸ் என்று எழுதியிருந்தது. வாசலில் வாட்சமேன் நின்றிருந்தான். பெரிய பெரிய அடுக்கு மாடி குடியிருப்புகள். இங்கு சென்று கேட்டால் நிச்சயம் ஒரு வியாபாரமாவது நடக்கும் என்ற நம்பிக்கையில் அவள் சென்றாள்.
வாட்ச்மேன் தடுத்தான். அவன் இந்திவாலா. அவளுக்கு அவன் கேட்பது புரியவில்லை. ஆனால் கூடையை கீழே இறக்கி பொம்மைகளை காட்டியதும் அவன் கண்ணத்தில் போட்டுக்கொண்டு உள்ளே செல்ல அனுமதித்தான். முதலில் காரின் முன் இருந்தவர் ஒரு மிகப்பெரிய செல்வந்தர் என்பதை பார்த்த மாத்திரத்தில் ஊகித்தவள் "அய்யா" என்றாள்.
"என்னம்மா..?"
"இன்னிக்கு கிருஷ்ண ஜெயந்திங்க. அதான் பொம்மைகள் கொண்டாந்திருக்கேனுங்க. அய்யா முதல் போணி செய்யனுமுங்க."
"ம்." ஏற இறங்க பார்த்தவர் "சரி பொம்மை என்ன விலை" என்றார்.
"அய்யா முன்னூறு ரூபாயுங்க."
"முன்னூறா. நோ நோ உங்களை பற்றி எல்லாம் தெரியும். ஒரு விலைக்கு நாலு விலை விப்பீங்க. நூறு ரூபாய்க்குன்னா கொடு. வாங்கிக்கிறேன்."