

ஒரு தாத்தா பாட்டி, இரண்டு பேரன்கள் — சிரிப்பும் சின்ன நாடகமும் கலந்த ஒரு வீட்டு வாழ்க்கை.
இந்த வீட்டில் நான்கு முக்கியமான நபர்கள் பற்றி முதலில் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும். அந்த வீட்டை உயிரோட்டமாக வைத்தது நம்ம 'ஹீரோ' மாணிக்கம் தாத்தாதான்.
மாணிக்கம் தாத்தா, கமலம் பாட்டி, ஆனந்த் பேரன், மற்றும் அரவிந்தன் — இவர்களால்தான் அந்த வீடு எப்போதும் உயிரோட்டமாக இருந்தது.
மாணிக்கம் தாத்தா வயசுக்கு ஏற்ற மாதிரி நடக்கவே மாட்டார். எண்பத்திநான்கு வயதிலும் அவர் ஒரு இளைஞனைப் போல சுறுசுறுப்பாக இருப்பார். கமலம் பாட்டிக்கும் வயது அதே எண்பத்திநான்கு.
கமலம் பாட்டி சரியான தைரியசாலி. பெரிய குடும்பத்தில் பிறந்தவர். அதனாலேயே அவர் சமையல் மட்டுமல்ல, எல்லா வேலைகளையும் நுணுக்கமாக செய்வார். அவருடைய கைப்பக்குவம் யாருக்கும் வராது.
வடகம், வத்தல், எள்ளுருண்டை போன்ற எல்லா வகையான பலகாரங்களையும் ஒற்றை ஆளாக செய்து முடித்து விடுவார்.
கமலம் பாட்டி எதையும் தனக்கென எடுத்து வைத்துக் கொள்ள மாட்டார். அனைவருக்கும் பகிர்ந்தளித்து விட்டு, மீதம் உள்ளதை மட்டும் வைத்துக் கொள்ளும் பழக்கம் உடையவர்.
அவர்களின் வீட்டுக்கு யாராவது வந்தால், சாப்பாடு போடாமல் அனுப்பவே மாட்டார். 'முதல்ல சாப்பிடு, அப்புறம் தான் பேசணும்' என்பதுதான் அவரது மரபுச் சட்டம்!
ஆனால் அதே சமயம், அவருக்குள் கொஞ்சம் வைராக்கியம் அதிகம்.