

அன்று ஞாயிற்று கிழமை. நானும் என் கூட பிறந்தவர்களும் காஞ்சிபுரத்தில் வசித்த எங்கள் தாய் வழி பாட்டியின் வரவை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருந்தோம். பாட்டி எங்களை பார்க்க வரும்போதெல்லாம் வெறும் கையோடு வரமாட்டாங்க. ரெண்டு மூணு பட்சணங்கள் செய்து கொண்டு வருவாங்க.. அன்றும் வழக்கம் போல நாக்கில் ஜலத்தை தேக்கி பாட்டியின் வரவுக்கு வழி மேல் விழி வைத்து தவம் செய்து கொண்டிருந்தோம்.
அப்போது திடீரென்று எங்கள் வீட்டின் எதிர் வீட்டில் குடியிருந்த எங்கள் உறவினர் ஒருவர் வேட்டியை மடித்துக் கட்டி கொண்டு, வேகமாக எங்கள் வீட்டுக்குள் நுழைந்து, சமையல் அறையில் வேலையாக இருந்த எங்கள் அம்மாவிடம், "உங்கள் தாயார் ரயில் மோதி இறந்து விட்டார். அவருடைய உடல் தண்டவாளத்தின் அருகில் கிடக்கிறது. மாமாவை கூட்டிண்டு, உடனே போய் பாருங்கள்," என்றார் பதட்டத்துடன்.
அவ்வளவுதான். அம்மா அழுதவாறு முன்னே செல்ல நானும் என் சகோதரியும் பின்னே பதைபதைக்க தெருவில் நடந்தோம்.
தெருவில் மற்ற வீடுகளில் இருந்தவர்கள் வெளியே வந்து என்ன ஆயிற்று என்று தங்களுக்குள் பார்வை பரிமாறி கொண்டனர்.. நாங்கள் ரயில்வே கேட்டினை அடைந்ததும் தண்டவாளத்துக் அருகில் கிடந்த ஒரு மூதாட்டியின் உடலை காண்பித்தார் கேட் கீப்பர். அம்மா அந்த உடலருகில் உட்கார்ந்து தாரை தாரையாக கண்ணீர் விட ஆரம்பித்து விட்டார்.
எனக்கென்னவோ அது என் பாட்டியின் உடலாக படவில்லை.. அப்போது எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வந்தது . எங்க பாட்டி கையில் லட்டு கிருஷ்ணாவின் உருவத்தை பச்சை குத்தியிருந்தாங்க . இறந்து கிடந்த மூதாட்டியின் கைகளில் அப்படி எதுவும் இல்லை. உடனே அம்மாவிடம் இதை சுட்டி காட்டி, "கிளம்புமா இது நம்ம பாட்டி இல்லை . இது வேறு யாரோ," என்று கூறினேன்.
அம்மாவும் தவறினை உணர்ந்து அங்கிருந்து எழுந்து கண்களை துடைத்தவாறு நடக்க ஆரம்பித்து விட்டார். தெரு முழுவதும் ஒருவர் மாற்றி ஒருவர் துக்கம் விசாரித்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு வழியாக விளக்கம் அளித்து வீட்டை அடைந்தபோது வீட்டின் வாசலில் எங்களுக்கு காத்திருந்தது யார் என்று நினைக்கிறீர்கள்? சாக்ஷாத் எங்கள் காஞ்சிபுரம் பாட்டியே தான்..
"கதவெல்லாம் திறந்து போட்டுவிட்டு எங்கடி போனீங்க?" என்று கடிந்து கொண்டாரே பார்க்கலாம். கதை அதோடு முடியவில்லை. தெருவில் குடியிருந்த பலர் பாட்டியை பார்க்க வந்து விட்டார்கள்.
அதில் ஒருத்தி பால்காரி பாலம்மா. அவ சொன்னா. "இல்லையே நீ ஆத்தா பேயி? தரையில் படுதானு பார்க்கணும் உன் கால கொஞ்சம் காமி தாயி " என்றாரே...
சற்றுமுன் அழுகையில் அமிழ்ந்து கிடந்த வீடு தற்போது சிரிப்பொலியால் அதிர்ந்தது.