
"ஏங்க, இன்னிக்கி அப்பா ஃபோன் செய்திருந்தாரு; நாளன்னிக்குக் காலையிலே வர்றாங்களாம்" என்றேன்.
"உங்கப்பாவா?"
"இல்லீங்க; உங்கப்பா, என் மாமனார்"
குமாரின் முகம் பளீரென்று விளக்குப் போட்டது போல் பிரகாசமானது. அப்பாவும் பிள்ளையும் பேசிக்கொள்வதே ரொம்பக் குறைவு. ஆனால், பாசம் என்னவோ வேறு லெவல்.
"பெத்த பிள்ள எங்கிட்ட சொல்லமாட்டாரு; மருமக உனக்குத் தான் சொல்லுவாரு" என்றார் குமார்.
"ஆமாம், வீட்டுக்கு வந்தா, வேளாவேளைக்கு பண்ணிப் போட்டு, நல்லா யாரு கவனிச்சிப்பாங்களோ அவங்க கிட்டத்தானே சொல்லணும்? அதோட, 'ஒரு நட வந்துட்டுப்போங்க, ரொம்ப நாளாச்சே'ன்னு நீங்களா கூப்பிட்டீங்க, நாந்தானே கூப்பிட்டேன்?" என்றேன் சிரித்தவாறே.
என் மாமனார் கடைசியாக வந்து போய் கிட்டத்தட்ட எட்டு மாதங்களாகிவிட்டன. போன முறை வந்தபோது மனைவியுடன் வந்தார். என் மாமியார் மாரடைப்பில் காலமாகி நான்கு மாதங்களாகிவிட்டன. பின்னர், வீட்டோடு இருந்து சமைத்துப் போட உறவுக்காரக் கிழவி ஒருத்தியை அமர்த்தியாயிற்று. மனைவி போனபின் இப்போது தான் முதன் முறையாய்த் தனியாய் இங்கே வருகிறார்.