
மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் விநாயகர் சன்னதியில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அன்று சங்கடசதுர்த்தியாக இருந்ததால், அர்ச்சனை அபிஷேகம் என விநாயகர், சந்தனக்காப்புடன் அருள்பாலித்துக் கொண்டிருந்தார். பங்கஜம்மாள், மருமகள் சுமதியுடன் கோவில் பிரகாரம் சுற்றி வந்தார்.
“சுமதி இந்த வருசாமாவது, உன் கொழுந்தன் பிரசாத்துக்கு வரன் பார்த்து கல்யாணத்தை முடிச்சுடணும். அவனுக்கும் வயசும் ஏறிண்டு போறது பார்” என்று கூறினார்.
“அத்தை! பிரசாத் மாரேஜ் பற்றி நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க. நானும் உங்க பிள்ளையும் நல்ல பெண்ணாகப் பார்த்து முடிச்சுடுறோம்” என்று கூறினாள்.
பங்கஜம்மாள் அந்தக்காலத்து மனுசியாக இருந்ததால் சாஸ்திரம் சம்பிரதாயங்களில் ஊறிப்போய் இருந்தாள். கோவிலுக்குப் போக வேண்டுமானால்கூட, சகுனம் பார்த்துதான் புறப்படுவாள். சகுனம் சரியில்லையெனில் கோவிலுக்குச் செல்வதைக்கூட தள்ளிப்போட்டு விடுவார்.