
காலை
65 வயது வாழ்ந்து விட்ட களைப்பு முகத்தில் தெரிந்தாலும் அதையும் மீறி ஆதங்கம் வெளிப்பட்டது அவர் பேசும் பேச்சில்.
"யாராரோ கதைகளை தேர்ந்தெடுக்கிறார்கள். இவர்களெல்லாம் நடுவர்களாம். என்ன தெரியும் இவர்களுக்கு. சந்திப்பிழை இல்லாமல் ஒரு பாரா எழுதவருமா இந்த ஞான சூன்யங்களுக்கு. இந்த தண்டபாணிக்கு வயசு ஏற ஏற அறிவு தேய்ஞ்சிகிட்டே போறது" - அங்கலாய்த்தார் கலிங்கமித்ரன்.
தண்டபாணி, பிரபல வார இதழ் 'அமுதம்'-ன் ஆசிரியர், கலிங்கமித்திரனின் ஆத்ம நண்பர். இவர் எழுதுவது குறைந்த பின்பு அவர் வரத்து அருகி போயிற்று. போனில் திட்டுவாங்குவர் இவரிடம். "கண்டிப்பா அடுத்த வாரம் வரேன் பா" என்பார். அந்த அடுத்த வாரம் ரொம்ப நாட்களாக வரவேயில்ல. அந்த கோவம் வேறு. அதுவே இவரின் ஆதங்கத்தின் வேர்.
"ஏம்பா இப்படி உடம்பை அலட்டிக்கிறீங்க. டாக்டர் என்னவெல்லாம் சொல்லி விட்டு போனார். தேவையில்லாத ஓவர் திங்கிங்கை அவாய்ட் பண்ணுங்க... தேவையில்லாம கவலைப்படாதீங்கன்னு சொன்னாரா இல்லையா..?