
ஊரெங்கும் கொரோனா மக்களைத் தின்று கொண்டிருந்த காலம்.
"நான் போயிட்டு வரேன், நீ தூங்கு" என்று மனைவியிடம் சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியே வந்த ராமநாதன், வீட்டிற்கு கிளம்ப மனசில்லாமல் அந்த தனியார் மருத்துவ மனையின் வராந்தாவில் ஒரு ஓரமாக நின்று கொண்டார். விஸ்தாரமாக கட்டப்பட்ட அந்த மருத்துவமனை வளாகத்தில் இருந்த பல்வேறு வகை மரங்களிலிருந்து அந்த உச்சிப் பொழுதிலும் சில்லென்று காற்று வீசிக் கொண்டிருந்தது. அவர் மனம் மெதுவாக சமீபத்திய நிகழ்வுகளை அசை போட்டது.
***********
"இந்தாங்க, மாஸ்க மறந்துட்டுப் போறீங்களே", என்று நீட்டினாள் அவர் மனைவி தமயந்தி. "எல்லாம் எனக்குத் தெரியும், நீ பேசாம இரு" என்று முறைத்து விட்டு லிப்ட் வரை சென்று திரும்பியவர் வெடுக்கென்று அவள் கையிலிருந்து பிடுங்கி அணிந்து கொண்டார்.