

சிவராமன் கடைத் தெருவுக்குச் செல்லும் பொதெல்லாம், கோவில் வாசலில் இருக்கும் பூக்கடை அவர் கண்ணில் படும். பெரும்பாலும் ஒரு இளம் பெண் அமர்ந்து பூ விற்றுக் கொண்டிருப்பாள். அவள் அணிந்திருக்கும் பாவாடையிலும், மேலாடையிலும் நிறைய ஒட்டுகள் காணப்படும்.
'பல இடங்களில் கிழிந்திருக்கும் துணிக்கு இத்தனை ஒட்டுப் போட்டு அணிந்து கொண்டிருக்கிறாளே' என்று அவர் மனம் வேதனைப்படும். எந்த நேரமும் மக்கள் நடமாட்டமிருக்கும் தெருவில், இதைப் போன்ற துணியை அணிந்து கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறாளே என்று மனது சங்கடப்படும்.
அவளுக்கு ஒரு புடவை வாங்கிக் கொடுக்க முடிவு செய்து, மனைவியின் சம்மதத்தையும் பெற்றுக் கொண்டார்.
நம்மால் முடிந்த சிறிய உதவி என்ற எண்ணத்துடன், புடவையை வாங்கிக் கொண்டு, அந்தப் பெண்ணின் பூக்கடைக்குச் சென்றார். “இந்த சிறிய அன்பளிப்பை வாங்கிக் கொள்” என்று அந்தப் பெண்ணிடம் புடவையை கொடுத்தார்.
அந்தப் பெண் அதனை வாங்கிக் கொள்ள மறுத்தாள். மேலும் சொன்னாள். “ஐயா நீங்க பெரிய மனசோட செய்கிற உங்க உதவிக்கு நன்றி. ஆனால், என்னை விட இந்த உதவிக்கு தகுதியானவங்க நிறைய பேர் இருக்காங்க. நீங்களே பாருங்க எதிர்ல ஃப்ரெண்ட்ஸோட நடந்து வர அந்தப் பெண்ணை. அந்தப் பெண் போட்டுக்கிட்டு இருக்கிற டிரவுசரை பாருங்க. எத்தனை இடத்தில கிழிஞ்சு கிடக்குது. நான் இங்க கடைத் தெருவுல இருக்கேன். ஆனால், அந்தப் பெண்.. பாவம்! கிழிஞ்ச டிரவுசரை போட்டுக்கிட்டு வெளியே சுத்திக்கிட்டு இருக்கு. நீங்க இந்த புடவையை அந்தப் பெண்ணுக்கு கொடுங்க," என்று கேட்டுக் கொண்டாள்.
பூக்காரப் பெண் சொன்ன திசையில் பார்த்தார் சிவராமன். அவருடைய மகள் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து கொண்டு தன்னுடைய தோழிகளுடன் வந்து கொண்டிருந்தாள்.