“ஹலோ மீனா !”
“ஹாய்! பிரீத்தி. !”
“ஹாட் நியூஸ் தெரியுமா?”
“நானும் ஹாட் நியூஸ் வெச்சிருக்கேன்!”
“(Tru-Solutions) ட்ரூ சொலூஷன்ஸ் லேயிருந்து எனக்கு இன்டர்வியூ வந்திருக்கு“ என்றாள் பிரீத்தி.
“எனக்கும் வந்திருக்கு “ என்றாள் மீனா குதூகலத்துடன்.
ட்ரூ சொலூஷன்ஸ் ஒரு சாஃப்ட்வேர் ஜெயண்ட். வேலை கிடைத்துவிட்டால் அமோகமான எதிர்காலம் நிச்சயம்.
மீனா, பிரீத்தி இருவரும் +2 விலிருந்து டிகிரி வரை ஒன்றாக படித்த உயிர்த் தோழிகள்.
“இருவரும் பக்கத்து பக்கத்து சீட் ல உட்கார்ந்து வேலை செய்யப் போகிறோமோ என்னவோ?” என்றாள் பிரீத்தி.
“அது தான் இல்லை. ஒரே ஒரு வேகன்ஸிதானாம், “ என்றாள். மீனா. “வாட் எ பிட்டி! “
“கண்டிப்பாக உனக்குத்தான் கிடைக்கும் மீனா. என்னை விட நீ பெட்டர் கான்டிடேட்” என்றாள் பிரீத்தி. “அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!”
போட்டி என்று வந்துவிட்டால், பிரீத்தி சொன்னது போல் தனக்கு வாய்ப்பு அதிகம் என்பது மீனாவுக்குத் தெரிந்து இருந்தாலும், பிரீத்தி உண்மையான சிநேகிதி என்பதும், தனக்கு வேலை கிடைக்க வில்லையே என்று பொறாமைப்படமாட்டாள் என்பதும் தெரிந்து இருந்தது.
சூழ்நிலையை சீர் செய்யும் விதமாக மீனா, “இப்படி செய்துடலாம் பிரீத்தி... உனக்கு கிடைத்தால் நீ ட்ரீட் கொடு. எனக்கு கிடைத்தால், பரவாயில்லை, நீயே ட்ரீட் கொடுத்து விடு”, என்றாள் மீனா.
தோழியின் ஹாஸ்யத்தை ரசித்த ப்ரீத்தி, “உதை பட போகிறாய்”, என்று சிரித்தாள்.
நேர்காணல் முடிந்து, எதிர்பார்த்தபடி மீனாவுக்கு வேலை கிடைத்தது. ப்ரீத்திக்கு, 'சாரி டு இன்ஃபார்ம் யூ, எட்செட்ரா, எட்செட்ரா.... பட் அடுத்த வாய்பு வரும் போது உங்கள் விண்ணப்பத்ததைக் கருத்தில் கொள்ளுவோம்,' என்று முடித்திருந்தனர்.
“வேலை இல்லை, ஆறுதல் அளித்துள்ளனர் “, என்றாள் ப்ரீத்தி அம்மாவிடம்.
“ரெண்டு பேருக்கும் கிடைத்திருக்கலாம் “, என்றாள் அம்மா.
“எப்படி அம்மா, வேகன்சி ஒன்றுதானே”
“கடவுள் இருக்கார். நம்பியவர்களைக் கைவிடவே மாட்டார்“, என்றாள் அம்மா தீர்மானத்துடன்.
அதற்கு அடுத்த வாரம் மீனாவின் அம்மா ஃபோன் செய்தாள். மீனா ஏணியில் இருந்து கீழே விழுந்து இரு கைகளிலும் பல்வேறு பகுதிகளில் ஃப்ராக்சர் என்றாள்.
உடனே ஓடினாள் ப்ரீதி. இரு கரங்களிலும் கட்டு. அனால் அதற்கு கலங்கவில்லை மீனா.
“இரண்டு வாரங்களில் புது வேலையில் ஜாயின் பண்ண வேண்டும். ஆனால் டாக்டர் கைகள் முழுவதும் ஹீல் ஆக 6 – 8 வாரங்கள் ஆகும் என்று கண்டிப்பாக சொல்லி விட்டார். ஆபீஸ்சில் டைம் கேட்டு பார்க்கலாம். ஆனால் அப்பா ‘சகுனமே சரியில்லை மீனு, இந்த வேலை வேண்டாம்’ என்று சொல்லி விட்டார். வேறு வழியின்றி வேலையில் சேர இயலாமைக்கு வருத்தம் தெரிவித்து ட்ரூ சொலூஷன்ஸ் க்கு கடிதம் எழுதி விட்டேன்” , என்று அழுதவளை தேற்ற முடியவில்லை பிரீத்தியால்.
அடுத்து வாரம் ப்ரீத்திக்கு ட்ரூ சொலூஷன்ஸிலிருந்து வேலைக்கு ஆர்டர் வந்தது. முந்தைய கடிதத்தை குறிப்பிட்டு, தாங்கள் மறு பரிசீலனை செய்து வேலையை அவளுக்கு அளிப்பதாக தீர்மானித்திருப்பதாகவும், ஒரு வாரத்தில் ஜாயின் பண்ணுமாறு கூறி இருந்தனர்.
பிரீத்தி சமையலறையில் இருந்த அம்மாவிடம் சென்று அவள் கையை வெடுக்கென்று கிள்ளினாள்.
கடிதத்தை படித்துவிட்டு அம்மா, “நான் என்ன சொன்னேன்! கடவுள் இருக்கார், பிரீத்தி!” என்றாள்.
“அம்மா கடவுள் இருக்கார்னு சொல்கிறாயே, எனக்கு இருக்கார், மீனாவுக்கு? “
“அவளுக்கும் நல்ல வாய்ப்பு தேடி வரும். நீ வேண்டும் என்றால் பார்! “
இது நொண்டிச் சமாதானமாகப் பட்டது ப்ரீத்திக்கு. மனம் மீனாவுக்காகத் தவித்து. ‘இட் இஸ் ஹர் சான்ஸ், ஹர் ஜாப்’...
பெரும் சங்கடத்துடன் மீனாவுக்கு செய்தியைக் கூறினாள் பிரீத்தி. “இது சந்தேகமின்றி உன் வாய்ப்புதான். உனக்கு மட்டும் கை உடையவில்லை என்றால்”, என்று ஆரம்பித்த பிரீத்தியைத் தடுத்த மீனா,
“என் கை ஒடிந்ததற்கு நீ என்ன செய்வாய்? என் கலக்கத்திற்குக் காரணமே இப்போ மாறிவிட்டது. ‘வந்த வாய்ப்பு நழுவி விட்டதால் சோர்ந்த பெண்ணை தேற்ற , அப்பா கல்யாணம் செய்து வைக்கணும் என்று தீர்மானித்து வரன் தேட ஆரம்பித்து விட்டார். அவர் பிடிவாதம்தான் உனக்குத் தெரியுமே!” என்றாள் மீனா பெருமூச்சுடன்.
“வெரி குட் நியூஸ்!”, என்று சமாதானமாக ஏதோ சொல்லிவிட்டு வந்தாளே ஒழிய, ப்ரீத்திக்கு மனம் நிம்மதி அடையவில்லை.
நான்கைந்து மாதங்கள் கழிந்தன. நல்ல வசதி படைத்த மீனாவின் தந்தை, சிறிய சாஃப்ட்வேர் கம்பெனி நடத்தும் மாப்பிள்ளையைப் பேசி முடித்தார்.
காஃபி டேயில் தோழிகள் சந்தித்து கொண்டனர். மீனாவின் ஆர்வம் பிரீத்திக்கு மிகுந்த ஆச்சார்யத்தை அளித்தது. நரேஷின் படிப்பு, மற்றும் அவரது குடும்பம் , கம்பெனி என்று பேச ஆரம்பித்த மீனா ஓயவில்லை. நாணமும், குதூகலமும் ததும்பிய மீனாவின் முகம், நரேஷ் அவளை வெகுவாக கவர்ந்து விட்டான் என்பதை உறுதி செய்தது.
“நரேஷ் கம்பெனியில் என்னை ஒரு பார்ட்னராக ஆக்கப் போகிறார்! ட்ரூ சொலூஷன்ஸ் வாய்ப்பு போனாலும் சொந்த கம்பெனியில் பங்கேற்க இருக்கிறேன். ஐ ஆம் ரியலி ஹாப்பி எபெளட் மை ஃப்யூச்சர்”, என்றாள் மீனா.
குற்ற உணர்வு முழுவதும் நீங்கப்பெற்றவளாய் நிம்மதியாக வீடு திரும்பினாள் பிரீத்தி.
அம்மாவிடம் தன் சந்தோஷத்தைப் பங்கிட்டு கொண்டாள்.
“பிரீத்தி, எனக்குக் கடவுள் இருக்கார், மீனாவுக்கு? என்று கேட்டியே, பார்த்தாயா, கடவுள் எல்லோருக்கும் இருக்கிறார்.”